ஒரு நகை, ஒரு புடவை, ரஷ்யப் பேரரசு, கோயில் வாகனம், மைசூர் அரசு, ஒரு சாமான்யன் கூறிய கதை, கர்நாடக அரசு, அல்பேனியா நாடு, நான் நேரில் பார்த்த ஒரு சிற்பம் ஆகியவற்றில் ஒரு பொது அம்சம் இருக்கிறது எனக் கூறினால் அதை உங்களால் நம்ப முடியுமா? அந்த பொது அம்சம் என்ன? அது இரு தலைகளையுடைய ஒரு கற்பனைப் பறவை என்று கூறினால் நம்ப முடிகிறதா?
![]() |
| படம் 1 : பெங்களூர் ஆலய தூண் சிற்பம் |
மேலே உள்ள இந்த சிற்பம் பெங்களூரில் உள்ள அல்சூர்
ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஒரு தூணில் உள்ளது. கர்நாடகத்தில் “கண்ட பேருண்டா”(Gandaberunda) எனப்படுகிறது. மற்ற இடங்களில் கண்ட பேருண்டம், கண்ட பேருண்டப் பட்சி(பறவை),
இரு தலைப் பறவை, இரு தலைப் புள், இரு தலைக் கழுகு, அண்ட ரெண்ட பட்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியக் கோயில்களில் எத்தனையோ கற்பனை விலங்குகளின்
சிற்பங்கள் இருக்கும்போது இதில் என்ன புதுமை என்ற கேள்வி எழுந்தது. புதுமை இந்தச் சிற்பத்தின்
அமைப்பிலும், அது நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லும் தகவல்களிலும் உள்ளது.

