தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

சனி, 31 அக்டோபர், 2026

முங்கேர் மற்றும் ரிக்கியா ஆசிரமப் பயணம் (ஆகஸ்ட் – செப்டம்பர் 2026)

 இந்த உலகின் எந்த மூலையிலும் பிறக்கும் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், இந்தியாவில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என எண்ணிக் கொள்வேன். என்னதான் அரசியல் பிரச்சினைகளோ, சமூக ஏற்றத் தாழ்வுகளோ இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட ஆன்மிக  மேம்பாட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொண்டது இந்த நிலம்.

கோவிட் கால நிச்சயமின்மையில் இருந்த போது, என் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வந்த சௌந்தர் குருஜியின் ஆன்லைன் யோக வகுப்புகள் பற்றிய அறிவிப்பு. அதில் சேர்ந்ததிலிருந்து இன்று வரை யோகக்கல்வி தொடர்கிறது. அதன் ஒரு அங்கமாக அவர் ஒருங்கிணைத்த ஆசிரமப் பயணம் அமைந்தது.

குருஜி சௌந்தரின் பேச்சில் அடிக்கடி Bihar School of Yoga, முங்கேர் ஆசிரமம், ரிக்கியா ஆசிரமம், ஸ்வாமி சத்தியானந்த சரஸ்வதி மற்றும் நிரஞ்சனானந்த சரஸ்வதி அடிக்கடி வந்து விழும். அங்கு செல்வது பற்றி மனதில் ஒரு எதிர்பார்ப்பு அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.