தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 1

நான் மேட்டூர் அணையை முதலில் பார்த்தது 1970களில். ஓரு நீளமான, உயரம் குறைவான மெட்டடார் வேனின்(matador van), உள்ளே சிறிய பெஞ்சுகளைப் போட்டு சிறிசுகளை அதில் உட்கார வைத்துப் பள்ளியிலிருந்து மேட்டூர் அணைக்குச் சுற்றுலா கூட்டிக் கொண்டு போனார்கள். அந்தப் பிரமாண்டமான உயரமும், நீளமும் கொண்ட மேட்டூர் அணையைப் பார்த்ததும், அணை என்றால் இப்படித்தான் உயரமாக, நீளமாக இருக்கும் என மனதில் பதிந்து விட்டது.

பிறகு, 1980களில், வீட்டில் கல்லணைக்குக் கூட்டிப் கொண்டு போனார்கள். மேட்டூர் அணையைப் போல உயரமாக, நீளமாக இருக்கும் என எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமே. வீட்டில் வேறு, இது ”அந்தக் காலத்திலேயே” கரிகாலச் சோழ மன்னன் “கல்லாலேயே” கட்டியது என்று கூறியிருந்தார்கள். என் கண்களுக்கு சிமெண்ட் பூசி வண்ணம் அடிக்கப் பட்ட 3 பாலங்களும் அதன் கீழ் இருந்த மதகுகளும் மட்டும் தெரிந்தன, கல்லால் கட்டப்பட்ட அணையைக் கண்கள் தேடின. அப்படி எதுவும் தெரியவில்லை. நான் சும்மாவே நிறைய கேள்விகள் கேட்கிறேன் என்று வீட்டில் புகழும், திட்டும் பெற்றிருந்த காலம் அது. பேசாமல் இருந்து விட்டேன். பாவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

சமீபத்தில் ஓரு நம்பகமான “History Trails” என்ற youtube channel-ல் ஒரு பல்லவர் காலத்து ஏரியைப் பின்புலமாக வைத்து, பண்டைய நீர் மேலாண்மையைப் பற்றிய ஒரு காணொளி (1) பார்த்தேன். அதில் திரு. பராந்தக தமிழ்ச்செல்வன், தற்போதுள்ள கல்லணை கரிகாலன் கட்டியது இல்லை என்றார். அப்படியானால் கல்லணை என அழைக்கப் படுகிற இந்த வளாகத்தைக் கட்டியது யார் என்ற என்னுடைய பழைய கேள்வி, விக்கிரமாதித்தன் -வேதாளம் போலத் திரும்பி வந்ததது. அந்த வீடியோவின் கமெண்டில் இதனைப் பிரிட்டிஷார் கட்டினர் என்று கூறியிருந்தார். நான் பார்த்த சிமெண்ட் கட்டமைப்புக்கு இந்தக் கூற்று பொருந்தியது.

மேட்டூர் அணையின் கட்டுமானத்தைப் பற்றிய தகவல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. ஆனால் கல்லணையை இப்போது இருக்கும் அமைப்பில் பிரிட்டிஷார் எப்போது எப்படி கட்டினர் என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இடையில், James Lillyman Caldwell என்ற ஓரு பிரிட்டிஷ் பொறியாளர், கல்லணையை, மேலும் கற்கள் கொண்டு புணரமைத்தது பற்றிய ஓரு கல்வெட்டின் புகைப்படம் பார்த்தேன். இந்த பிரிட்டிஷ் பொறியாளர் புணரமைப்பு மட்டும் செய்தார் என்றால், இதனைக் கட்டியது யார் என்ற கேள்வி திரும்ப எழுந்தது!





















இந்த கல்வெட்டைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. சுந்தரம் அவர்களின் கட்டுரை(2) கல்லணை பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

நண்பர்கள் மற்றும் இணையத்தில் தேடிய போது விடைகள் துண்டு துண்டாகக் கிடைத்தன. அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். முதலில் கல்லணைக்கும் மேட்டூர் அணைக்கும் உள்ள வித்தியாசங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். (உதவியாக இருந்த முக்கியமான சில பிரிட்டிஷ் மற்றும் தற்கால ஆவணங்கள்/புத்தகங்களின் பட்டியலை கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் கொடுத்துள்ளேன்)

ஆறு, கால்வாய் அல்லது பொதுவாக எந்த நீரோடையும் உயரமான இடத்தில் இருந்து தாழ்வான இடத்துக்குப் பயணிக்கும். பிறகு அது ஒரு பெரிய ஆற்றிலோ அல்லது கடலிலோ கலந்துவிடும். அதில் நீரோடும் சமயங்களில் மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். மழைக் காலங்களில் நீரோடையில் முழுவதும் நீர் இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வெயில் காலங்களில் வறண்டுவிடும். அதிக நாட்கள் நீரைப் பயன் படுத்திக் கொள்ள, நீரோடையின் குறுக்கே சிறிய சுவர்கள் கட்டப் படுகின்றன. இதனை தடுப்பணை (check dam) அல்லது தடுப்புச் சுவர் (weir) எனலாம். பண்டைக் காலங்களில் இது “கலிங்கு”, “கலிங்கல்”, ”கலிஞ்சு” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பிரிட்டிஷார், இதனை calingula(3) என்று ஒரு சில ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு பெரிய அணை(Mettur Dam). அது மட்டுமல்ல, அது உயரமாகக் கட்டப்பட்டுள்ளதால், அங்கு அதிக நீர் தேங்கும். அது நீர்த்தேக்கம் எனப்படுகிறது. அது ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படுகிறது (Stanley Reservoir). இது 1934ல் கட்டப் பட்டது! கல்லணை, உயரம் குறைவான தடுப்பணை என்பதால் குறைவான நீரையே தேக்க முடியும். எனவே இது நீர்த்தேக்கம் அல்ல. இது டாம் (dam) என எங்கும் குறிப்பிடப் படவில்லை, அணைக்கட்டு (Anicut) எனக் குறிப்பிடப் படுகிறது.

கல்லணையில் இப்போது நாம் பார்க்கும் பெரிய மதகுகள் (sluices), தடுப்பு கதவுகள் (sluice gates), அதற்கும் மேலே பாலங்கள் (Bridges) கொண்ட முழு அமைப்பையும் கட்டியது கரிகால் சோழன் அல்ல. ஆனால், அவன் கண்டிப்பாக முக்கியமான ஓன்றைக் கட்டியுள்ளான். அது என்ன, எங்கிருக்கிறது?

பொதுவாக நம் மன்னர்கள் அணைகளைக் கட்டியதில்லை. ஏராளமான ஏரிகள், குளங்கள், கால்வாய்களை உருவாக்கிப் பராமரித்துள்ளனர். ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தியுள்ளனர். இதற்கு நிறைய இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. உதாரணத்துக்கு, 10ம் நூற்றாண்டில், இராஜாதித்ய சோழன் கட்டிய 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி. இது அவரது தந்தை முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் நினைவாக, ”வீரநாராயணன் ஏரி” என அழைக்கப்பட்டது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இவ்வேரியின் கரையில் இருந்தே தொடங்குகிறது! இதன் தற்போதைய பெயர் வீராணம் ஏரி!(4)

வரலாறு இப்படி இருக்க, கரிகால் சோழன் மட்டும் எதற்கு அணை கட்டினான்? இந்த அணை எங்குள்ளது அதன் நிலப் பகுதி எப்படி உள்ளது எனத் தேடத் துவங்கினேன்.
credit: Mappls.com












காவிரியின் பாதையில் திருச்சிக்கு அருகேயுள்ள ஸ்ரீரங்கம் நதிகளால் சூழப்பட்ட ஒரு தீவு. 31கிமீ நீளமாகவும், மத்தியில் 2.4கிமீ அகலமாகவும், இரண்டு கோடிகளிலும் குறுகலாகவும் உள்ளது.

1. மேற்கில் இத்தீவு ஆரம்பிக்கும் முக்கொம்பு என்ற இடத்தில், காவிரி நதி மிக அகலமாக “அகண்ட காவிரி “ எனப் படுகிறது. அது இரண்டாகப் பிரிந்து, தீவின் வலத் திசையில் “கொள்ளிடம்” நதியாக மாறுகிறது. தென்திசையில் காவிரி நதியாகத் தொடர்கிறது.

2. கிழக்கே இத்தீவு முடியும் கல்லணை உள்ள இடத்தில், கொள்ளிடம் நதி நேராக ஓடி சிதம்பரம் அருகே, பிச்சாவரத்தின் அருகில் கடலில் கலக்கிறது.

3. கல்லணை உள்ள இடத்தில், காவிரி நதி மூன்றாகப் பிரிகிறது. காவிரி நதியின் வடக்குக் கரையில் இருந்து, ஓரு கிளை “உள்ளாறு” என்ற பெயரில் கொள்ளிடம் நதியில் கலக்கிறது. அடுத்த கிளை காவிரி நதியாகத் தொடர்கிறது. கடைசிக் கிளை “வெண்ணாறு” எனப் பாய்கிறது. பிறகு காவிரியும் வெண்ணாறும் ஓரு மரத்தின் வேர்களைப் போல நிலத்தில் நிறையக் கிளை ஆறுகளாக, கால்வாய்களாகப் பிரிந்து தஞ்சாவூர் டெல்டா பகுதியின் நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுகின்றன.

கல்லணையில் காவிரி பிரியும் விதம்
- Photo Credit Google maps

















இங்கு சில பிரச்சினைகள் உள்ளன.
1. கொள்ளிடம் நதி அகலமாகவும் அதன் படுகை காவிரியை விட தாழ்வாகவும் உள்ளது.

2. கல்லணை உள்ள இடத்தில் கொள்ளிடத்தின் நீர்ப்படுகை காவிரியை விட ஏறத்தாழ 6 அடி பள்ளத்தில் உள்ளது.

3. பண்டைக் காலங்களில் காவிரி நதியில் எங்கும் அணைகள் இல்லை.

4. காவேரியில் வெள்ளம் வரும் போது, எவ்வளவுதான் கரைகளை உயர்த்திக் கட்டினாலும், இப்போதைய உள்ளாறு இருக்கும் இடத்திலோ அதற்கு பிறகோ ஆறுகளின் கரைகள் உடைந்தன.

5. கரைகள் உடைந்தால் நீர் அத்தனையும் வீணாகிவிடும். தஞ்சாவூர் டெல்டாவில் எந்த விவசாயமும் நடக்க முடியாது.

6. கரைகள் உடையக் கூடாது, நீரும் சேமிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

7. எனவே கரிகால் சோழன், காவிரியின் வடகரையில், அது உள்ளாறு எனப் பிரிந்து கொள்ளிடத்தில் கலக்கும் அந்த முக்கியமான இடத்தில் ஓரு பிரமாண்டமான கல்லால் ஆன தடுப்புச் சுவரை/தடுப்பணையைக் (weir or barrage) கட்டினான். இதனால், காவிரியின் நீர் உள்ளாறு வழியாக கொள்ளிடத்தில் கலப்பது தடுக்கப்பட்டது. அதிக வெள்ளம் வரும் போது வெள்ள நீர் இந்த தடுப்பணையின் சுவர் மீது வழிந்து கொள்ளிடத்தில் வடிந்துவிடும். பிற இடங்களில் கரை உடைவது தடுக்கப் படுகிறது. பாசன நீர் வீணாவது தடுக்கப் படுகிறது. இது புத்திசாலித்தனமான அமைப்பல்லவா!

கல்லணை வளாகத்தில் உள்ள தடுப்பணைகள்
– photo credit vikatan.com














”கல்லணை” எனப்படும் இந்த கல்லால் ஆன தடுப்புச் சுவர்/தடுப்பணையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இப்போது உள்ள அமைப்பில் அது சுலபமாகத் தெரிவதில்லை. பண்டைய கல்லணைச் சுவர் மீது பிரிட்டிஷ் பொறியாளர்கள் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளதால், நீருக்கு மேல் இருந்த அசல் கல்லணைச் சுவர் முழுவதும் நீக்கப் பட்டுவிட்டது. நீருக்கு அடியில் மட்டுமே அது உள்ளது. நீர் நிறைந்து இருக்கும் காலங்களில் தெரியாது. நீர் இல்லாத காலங்களில் மட்டுமே அதன் மேற்பரப்பு தெரியும்.

தற்போது நம் கண்ணுக்குத் தெரியாத, இந்தக் கல் அணையைப் பற்றிய வடிவம், அளவுகள் பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் பொறியாளர்கள் தயாரித்த ஆவணங்களில் இருந்தே அறிகிறோம்.

1. இதன்
நீளம் -1080 அடி(330மீட்டர்),
அகலம் – மேல் பகுதியில் 40அடி(12மீட்டர்),
கீழ்ப்பகுதியில் 60அடி(18மீட்டர்),
உயரம் -15அடியிலிருந்து 18 அடிவரை (4 – 5.5மீட்டர்)
அதாவது ஏரியின் கரைகளைப் போல அடியில் அகலம் அதிகமாகவும், மேலே அகலம் குறைவாகவும் இருபக்கமும் சரிவாக இருக்கும் அமைப்பு.

2. நீர் சுவரின் மீது வழிந்து ஊற்றும் போது, ஆற்றுப் படுகையில் அரிப்பு ஏற்படும். அது சுவரின் அடியிலும் அரிப்பாக மாறி சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதைக் குறைக்க, தற்கால அணைகளில், அதன் வெளிப்புறச் சுவர் சரிவாக, அடிப்பகுதியில் மிக அகலமாகவும், மேல் பகுதியில் அகலம் குறைந்து இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் ஏறத்தாழ பொதுயுகம்(கிபி) 200 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கல்லணை அமைப்பிலும் இருந்துள்ளது.

3. ஏரியில் தேங்கியுள்ள நீர், ஏரியின் கரைகளை அரிக்காமல் இருக்க, கரையின் உட்புறத்தில், அதுவும் கீழ்ப்பகுதிகளில் மட்டும் கல்லால் கட்டப்பட்டிருக்கும். மற்ற இடங்களில் மண் பயன்படுத்தப் பட்டு இருக்கும். கல் மற்றும் மண்ணின் அடர்த்தி, கரையின் அகலம், கரையின் சரிந்த அமைப்பினால், நீர் கரையைக் கடந்து கசிந்து செல்லாது.

4. கல்லணையின் மீது வெள்ள நீர் வழிந்து போக வேண்டியுள்ளதால், மண்ணால் கட்ட இயலாது. அதனால் மிக அகலமாக, மிகப் பெரிய கற்களால் இரு புறமும் சரிவான சுவராக இது கட்டப் பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் மேற்புரங்களில் மட்டும் சுண்ணப் பூச்சு பயன்படுத்தப் பட்டிருந்தது. உட்புறங்களில் எந்த ஒரு சுண்ணக் கலவையோ, சிறப்புக் கலவையோ பயன்படுத்தப் படவில்லை. அங்கு பெரிய பாறைக் கற்களும், சிறிய பாறைக் கற்களும், மண்ணும் (clay) இருந்ததை 1830களில், கல்லணையின் ஒரு பகுதியைப் பிரித்த பிரிட்டிஷ் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்லணையின் கரை போன்ற அமைப்பும், வெளிப்புற பூச்சும், மிகப் பெரிய கற்களின் அடர்த்தியும், நடுவில் இருந்த சிறு கற்கள் மற்றும் மண்ணின் அடர்த்தியும் நீர் கசியாமலும், வெள்ள நீரைச் சரியாகக் கடத்தியும், வெள்ளத்தால் உடையாமலும் பொயு 200ம் ஆண்டிலிருந்து 1800ம் ஆண்டு வரை உறுதியாக இருந்திருந்தது. இப்போதும் கூட அதன் மிஞ்சிய அடிப்பகுதி உறுதியாகவே உள்ளது. அதன் மீதே பின்னாட்களில் பிரிட்டிஷார் கட்டிய தடுப்பணை உள்ளது.

5. கல்லணை வளாகத்தில் காவிரி ஆறு மற்றும் வெண்ணாற்றின் மீதுள்ள தடுப்பணைகள் (water regulators) சீராக நேர்கோடாக உள்ளன. கல்லணையின் மீது கட்டப்பட்ட தடுப்பணையோ அதற்கு அடியில் உள்ள அணையின் அமைப்பைக் கொண்டு நேர்கோடாக இல்லாமல் ஓரு பாம்பைப் போல நெளிந்து வளைந்துள்ளது.

கல்லணையின் வடிவம்
- Photo credit: 
Youtube channel bluepencil






















அணையின் சுவர் பாம்பைப் போல நெளிந்து வளைந்துள்ளதால் என்ன பயன்? நேர்கோடாக சுவர் உள்ள அணைகளைப் புவியீர்ப்பு அணை (Gravity Dam) என்கிறார்கள். இதில் சுவரின் எடை, நீரைத் தாங்கும் திறனைத் தீர்மானிக்கிறது. வளைவான சுவர் கொண்ட அணை வளைவு அணை (Arch Dam) எனப் படுகிறது. ஓரு குறிப்பிட்ட அளவு நீரைத் தாங்கும் திறனைப் பெற வளைவு அணைச் சுவரின் அகலம் புவியீர்ப்பு அணையை விடக் குறைவாகவே தேவைப் படுகிறது என்கிறது இன்றைய பொறியியல் உலகம். இந்தக் கல்லணையில் 3-4 வளைவுகள் தெரிகிறதல்லவா! இதுவும் இதன் சிறப்பே.

கல்லணை சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற உறுதியான தேதி இல்லை. இலக்கியக் குறிப்புகளிலிருந்தும், பிற்கால கல்வெட்டுக்களில் இருந்தும் பெறப்பட்ட ஆய்வாளர்கள் கருத்துக்கள் வேறுபடுகின்றன. நாம் ஒரு வசதிக்காக பொதுயுகம் (கிபி) 200ம் ஆண்டு என்று எடுத்துக் கொண்டாலும், இந்த 21ம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1800 வருடங்களுக்குமுன் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அத்தனைப் பெரிய கருங்கற்களைக் கொண்டு வருதல், அவற்றைச் சரியாக ஆற்றில் போட்டுச் சுவர் எழுப்புதல், அதற்குத் தேவையான உபகரணங்களையும், வேலையாட்களையும், கட்டுமான நிபுணர்களையும் நியமித்தல், அவர்களுக்கு சம்பளம் கொடுத்தல், இதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்டல் என இது ஒரு பெரிய அளவிலான திட்டம் அல்லவா (Large scale project)! ஒருவேளை இதனாலேயே இதன் அடித்தளத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அதன் மேல் புதிய நவீன தடுப்பணை கட்டிய ஸர் ஆர்த்தர் காட்டன் இதனை Grand Anicut என்று ஆவணப்படுத்தியுள்ளார். இப்போதும் அந்தப் பெயர் நீடிக்கிறது.

இப்படியாக 80களில் நான் தேடிய கல்லணை எங்கே எப்படி இருக்கிறது என்பதன் பதில் இப்போது எனக்குக் கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியே. இதைச் செய்ய ஓரு சில நாட்களும், கொஞ்சம் ஆற்றலும் தேவைப் பட்டன. எத்தனையோ பேர் ஆவணங்களையும், வரலாற்றுப் புத்தகங்களையும் தேடி அவற்றை டிஜிட்டல் நகல் (digital scan) எடுத்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி இணையத்தில் தரவேற்றம் செய்துள்ளனர். அவர்களது செயல்கள் எனக்கு மிக உதவியாக இருந்தன. அவர்களுக்கு எனது நன்றிகள்.

கல்லணை பற்றித் தேடிய போது, தமிழ்நாட்டிலும் ஒரு சிலர், அந்த சிறப்பு வாய்ந்த கல்லணை தற்போது நீருக்குள் மட்டுமே இருக்கிறது, இன்னும் பயன்பாட்டில் உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆகவே நான் எதுவும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. எனக்கான ஏன், எங்கு, எப்படி என்பதைத் தேடி அவற்றை இங்கு தொகுத்துள்ளேன்.

எனது அடுத்த தேடல் இவ்வளவு சிறப்புகளையுடைய கல்லணையின் மேல் பகுதிகளை பிரிட்டிஷார் ஏன் நீக்கினார்கள் என்பது. இதைப் பற்றித் தேடும் போது, பிரிட்டிஷார் கல்லணை வளாகத்தை மட்டும் மேம்படுத்த வில்லை. காவிரி டெல்டா பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியுள்ளார்கள் எனத் தெரிந்தது. அவற்றை பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன்.

கல்லணையின் தற்போதைய புகைப்படங்கள் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

Photo credit: Google maps













Photo credit: Google maps













Photo credit: vikatan.com













Photo credit: vikatan.com














References:
(1)      https://www.youtube.com/watch?v=E18goYffVjs - கல்லணையை கட்டியது யார்? 

(2) கல்லணை பற்றிய எனது தேடலை ஆரம்பித்து வைத்த கல்வெட்டு இதுவே. இதைப் பற்றி திரு. து. சுந்தரம் எழுதிய கட்டுரை இது.

(3) https://ta.wikipedia.org/wiki/கலிங்கு.

(4) வீராணம் ஏரி.

(5) https://en.wikipedia.org/wiki/Kallanai_Dam

(6) கல்லணை - தமிழ்நாட்டு நீர் மேலாண்மை! காணொளி நன்றி:- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

(7) The Grand Anicut Complex: History of its development

(8) கல்லணையும் தொழில் நுட்பமும்