தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 2

முதல் பதிவில் , கல்லணை பிரிட்டஷரால் மாற்றப்பட்டு இப்போது அதன் அடிப்பாகம் மட்டுமே நீருக்கடியில் உள்ளது எனப் பார்த்தோம். இந்தப் பதிவில் கல்லணை மற்றும் காவிரி டெல்டா பகுதியில் செய்யப் பட்ட மாற்றங்களையும் அதன் காரணங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது; இது ஆறுகளுக்கு அதிகம் பொருந்தும். ஓடும் ஆற்றில், இந்த நிமிடத்தில் ஒரு இடத்தில் இருக்கும் நீர் அடுத்த நிமிடத்தில் போய்விட்டிருக்கும். புதிய நீர் அதன் இடத்தை நிரப்பும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய காலத்தில் ஆறுகள் வெள்ள நீரை எடுத்து செல்லும் வாகனங்களாகப் பயன்பட்டன. ஏரிகள் ஆற்றின் நீரைச் சேமித்து வைக்கும் பெரிய நீர்த்தேக்கங்கள் ஆகச் செயல்பட்டன.

பின்னர் பிரிட்டிஷ் காலங்களில், ஆறுகளின் குறுக்கே பெரிய தடுப்பணைகள் மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் முறைகள் தொடங்கி வலுப்பெற்றன. பின்னர் தொழிற்புரட்சி மாற்றங்கள், தற்போதைய 21ம் நூற்றாண்டு தொழில்நுட்ப புரட்சிக்கானது.

ஒவ்வொரு தலைமுறை செயல்பாடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளன. இருந்தாலும், எங்கும் தேங்கிவிடாமல் ஆற்றைப் போல தொடருவதே வாழ்க்கையின் இயல்பு.

தென்னிந்தியாவில், ஸர் ஆர்தர் தாமஸ் காட்டன்(Sir Arthur Thomas Cotton), என்ற பிரிட்டிஷ் மிலிடரி பொறியாளர், காவிரி டெல்டா பகுதியில் நீர்ப்பாசன மாறுதல்களை ஆரம்பித்து பின்னர் கோதாவரி, கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார். இது போலவே வட இந்தியாவிலும் ஸர் ப்ரோபி தாமஸ் காட்லி (Sir Proby Thomas Cautley) என்பவர் யமுனை மற்றும் கங்கை நதிகளில் இது போன்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

ஆர்தர் காட்டனுக்கு முந்தைய தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதிகள் எப்படி இருந்தன?

1700ல் தஞ்சாவூர்ப் பகுதி பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சிக்குக் கீழ் வந்தது. 1763ல் ஆண்ட்ரூ நியூட்டன் (Andrew Newton) என்ற பொறியாளர், திருச்சி – தஞ்சைப் பகுதிகளில் ஆய்வு செய்து காவிரி ஆற்றில், அதிலும் கல்லணைப் பகுதிகளில் அதிக அளவு வண்டலும், மணலும் குவிந்து கிடப்பதாகவும், காவிரி டெல்டா பகுதிகளுக்கு கிடைக்கும் நீர் பெருமளவில் குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். ஆனாலும், அரசியல் காரணங்களால் எதுவும் செய்யப் படவில்லை.

பின், 1800ல் தஞ்சாவூர் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. கவனிப்பாரற்றுக் கிடக்கும் எதுவும் மேலும் மோசமடைவதைப் போலவே, இப்போது செய்த ஆய்வு, ஆற்றின் நிலைமை மேலும் மோசமாக இருந்ததையே உறுதிப் படுத்தியது. இதனால் டெல்டா பகுதிகளில் ஏற்படும் சாகுபடிக் குறைவு, அதன் மூலம் வரும் நில வரி மற்றும் இதர வரிகளின் வருமானம் குறைந்தது எல்லாம் பிரிட்டிஷாரைச் சங்கடப்படுத்தியது. இதைச் சரிப்படுத்த எடுத்த முயற்சிகள், நீர்ப் பாசனத்தில் அடுத்த பெரும் திட்டங்களுக்கு இட்டுச் சென்றன.

1803-4ல், ஜேம்ஸ் எல் கால்டுவெல் (James Liliman Caldwell) கல்லணைப் பகுதிகளில் உள்ள மணலை அகற்றி, கரைகளைச் சீர் செய்தார். இருந்தாலும், டெல்டா பகுதிகள் மேடிட்டுக் கிடந்ததால், கல்லணை வளாகத்துக்கு வந்த நீர், அதிகமாக காவிரி மற்றும் வெண்ணாற்றுக்கு போக முடியவில்லை. மாறாக, கல்லணையின் மேலே நீர் வழிந்து திரும்பவும் கொள்ளிடத்துக்கே போய்க் கொண்டிருந்தது . இதைச் சமாளிக்க, கல்லணை மேல் புதிய கற்களை நட்டு, அதன் உயரத்தை இரண்டு அடிகள் அதிகப் படுத்தினார். இதனால், சில வருடங்களுக்கு டெல்டாப் பகுதிகளுக்கு கிடைத்த அதிக நீரினால், விவசாய நிலைமை மேம்பட்டது.

அப்போது வைக்கப் பட்ட ஒரு கல்வெட்டு பற்றிய தகவல்களை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இதுவே கல்லணையில் பிரிட்டஷார் செய்த முதல் மாற்றம். கால்டுவெல் இதைச் செய்தபோது, பின்னாட்களில், தென்னிந்தியாவில் நீர்ப் பாசனத்தில் பெரிய கட்டமைப்புகளை செய்யப்போகும் ஆர்தர் காட்டனுக்கு ஒரு வயதே!

காட்டன், தனது 15ம் வயதில், இங்கிலாந்தின் மிலிடரி அகடாமியில் 2 வருடங்கள் பொறியியல் படிப்பு படிக்கிறார். அவருடைய இந்தியாவுக்கான முதல் கப்பல் பயணம் 4 -5 மாதங்கள் பிடித்தது! 18ஆம்வயதில், செப்டம்பர் 1821ல், சென்னைக்கு வருகிறார். பொதுப் பணித் துறையில் பணி நியமனம். தற்போது பொதுப் பணித்துறையில் ஒருவர் சேர்ந்தால், பெரும்பாலும் அதில் மட்டுமே பணி புரிகின்றார். பிரிட்டிஷார் காலத்தில், பொறியாளர்களுக்கு ராணுவப் பணி முக்கியமானது. அவர்களது பெயர்களுக்கு முன்னால் அவர்களது பதவி நிலை (Military Rank) குறிப்பிடப் படும். ராயல் இஞ்ஜினியரிங் பிரிவில் second lieutenant ஆகச் சேர்ந்த அவர், வெவ்வேறு பதவி உயர்வுகளுக்குப் பின் Colonel நிலையை அடைகிறார். ராணுவ பொறியாளர் என்ற வகையில் தனது, 20ஆம் வயதில், பர்மா போரில் பங்கெடுக்கிறார்.

1829ல், காவிரி நீர்ப் பாசனப் பணிக்கு நியமனிக்கப் படுகிறார். கல்லணைப் பகுதி திரும்பவும் மணல் சேர்ந்து மேடாகி, டெல்டா பகுதிகளுக்குப் போகும் நீர் குறைந்து போய் உள்ளது.

மணலை வாரி அகற்றுவதைவிட , கல்லணையின் சுவற்றில் ஆற்றுப் படுகை மட்டத்தில் சில மதகுகளை அமைக்க யோசனை தெரிவிக்கிறார். வெள்ளத்தின் வேகத்தால், காவிரி ஆற்றில் இருந்து, மணல் கொள்ளிடம் ஆற்றுக்கு இந்த மதகுகள் வழியாக அடித்துச் செல்லப் படும் என்று எதிர்பார்த்தார். இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறது. அப்போது, ஆர்தர் காட்டனுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அவர் இங்கிலாந்துக்கு விடுமுறையில் போகிறார். “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பது போல், இவர் இந்தியாவில் இல்லாத சமயங்களில், அவரது இரண்டு சகோதரர்கள் அவரது முக்கிய வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே பொறியாளர்களாவும் அதுவும் நீர்ப்பாசனத்துறையிலேயே இருந்ததும் விந்தையே!

ஆர்தர் காட்டன் விடுமுறையில் சென்றுவிட, 1830ல், அவரது தம்பியான பொறியாளர் பிரடெரிக் காட்டன் இந்த கல்லணையின் கட்டமைப்பின் ஒரு பகுதியில் கற்சுவர்களை நீக்கி விட்டு, மதகுகளை அமைக்கிறார். இது இரண்டாவது மாற்றம். இதைச் செய்யும் போதுதான், கல்லணையின் கட்டுமானத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து வியப்படைகிறார்கள். வெளிப்பகுதிகளில் காரைப் பூச்சு இருந்தாலும், சுவரின் உட்பகுதிகளில் கற்களுக்கு இடையில் வெறும் களிமண், மணல் மட்டுமே நிறைந்திருந்த ஆச்சரியத்தை முதன்முறையாக பார்க்கிறார்கள். இதன் மூலமே, இந்த நுட்பமான கட்டுமானத் தகவல்கள் இந்தத் தலைமுறையின் கவனத்துக்கு வந்து சேர்கிறது.

4 வருடங்கள் கழித்து, நேரடியாக இந்தியா வராமல், ஓரு நீண்ட ஐரோப்பிய, அரேபிய பயணம் மேற்கொண்டு பிறகு, 1833ல் ஆர்தர் காட்டன் இந்தியா திரும்புகிறார். 1834ல் திரும்பவும் காவிரி நீர்ப் பாசனப் பணிக்கு நியமிக்கப் படுகிறார். கல்லணையின் கட்டுமானத் தொழில் நுட்பம் ஆர்தர் காட்டன் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக எளிய கட்டுமான முறை 1500 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருந்தது அவருக்கு பிரமிப்பையளித்தது. பின்னாட்களில், அந்த தொழில்நுட்பத்தை அவர் கட்டிய பல தடுப்பணை அஸ்திவாரங்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

1834ல் கல்லணையில் மணல் மேடு இல்லை என்றாலும், அங்கு வரும் நீர் குறைவாகவே இருந்தது. இது ஏன்?

முக்கொம்புவிலிருந்து, கொள்ளிடம் அகலமாகவும், காவிரி அகலம் குறைவாகவும் இருப்பதால், கொள்ளிடத்தில் அதிக நீரும், காவிரியில் குறைந்த நீரும் பாய்கிறது. மேலும், கொள்ளிடம் ஆழம் மிகுந்ததாக இருப்பதால் அங்கு சுலபமாக அதிக நீர் பாய்கிறது என்று ஆர்தர் காட்டன் புரிந்து கொள்கிறார்.

கொள்ளிடம் ஆறு ஆரம்பிக்கும் இடத்தில் ஓரு தடுப்பணை கட்டினால்? காவிரியில் அதிக நீர் போகும். இது சரி, கொள்ளிடத்தில் நீர் குறைந்தால், அதன் பாசன நிலங்கள் பாதிக்கப் படும் அல்லவா? தமிழகத்தின் முக்கியமான வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து நீர் போகிறது என நான் தெரிந்து கொண்ட போது, மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது, இந்த ஏரியில் இருந்து 250கிமி தூரத்தில் இருக்கும் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடகிலிருந்து சென்னைக்கு நீர் போகும் இந்தப் பயணமும் விசித்திரமே!

கொள்ளிட நீர்க் குறைவைச் சமாளிக்க முக்கொம்பிலிருந்து தொலைவில் கொள்ளிடத்தின் குறுக்கே இன்னும் ஓர் தடுப்பணை அவசியமாகிறது. இப்போது காவிரியில் அதிக வெள்ளம் போய், டெல்டாப் பகுதிகள் மூழ்கும் அபாயம் அதிகமாகிறது. எனவே கல்லணையில் இன்னும் அதிக மதகுகள் அமைக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

ஆர்தர் காட்டன் இந்த மூன்று கட்டுமானங்களுக்கும் திட்ட வரைவை அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பனிக்கு அனுப்புகிறார். அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து மூன்று முறை திட்ட வரைவு மாறுதல்களை அனுப்பி, அவர்களின் ஒப்புதல் 1836லே கிடைக்கிறது.

இந்த 21ம் நூற்றாண்டில், இந்த மாறுதல்கள் சிறப்பானவையா என யோசிக்கலாம். அந்தக் காலக் கட்டத்தில் அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியதே.

1836ல் கொள்ளிடத்தின் முதல் தடுப்பணை , மேலணை (Upper Anicut), இரண்டாம் தடுப்பணை, கீழணை (Lower Anicut) மற்றும் கல்லணையின் அமைப்பு முழுதும் மாற்றப்பட்டு, அதன் அடித்தளத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மதகுகளுடன் கூடிய அமைப்பாகக் கட்டப் படுகிறது. அசல் கல்லணை கீழே, புதிய கல்லணை கட்டமைப்பு அதன் மேலே! இது கல்லணையில் பிரிட்டிஷார் செய்த 3ம் மாற்றம். மிகப் பெரிய மாற்றம்.

மேலணை, ஸ்ரீரங்கம் தீவு ஆரம்பிக்கும் முக்கொம்பு என்ற இடத்தில் அமைந்துள்ளதைப் போலவே, கீழணையும் அணைக்கரை என்ற தீவின் துவக்கத்தில் கட்டப் பட்டுள்ளது. இவை கட்டப் படும்போது, உடல் நிலைக் குறைவு காரணமாக ஆர்தர் காட்டன் விடுமுறையில் செல்கிறார். இவற்றையெல்லாம் அவரது இன்னொரு சகோதரரும் பொறியாளருமான ஹு கால்வேலி காட்டன் (Hugh Calveley Cotton) என்பவரால் கட்டப் படுகிறது. சில ஆவணங்களும், முக்கொம்பு வளாகத்தில் உள்ள ஒரு கற்தகவல் பலகையும் இதைத் தெரிவிக்கின்றன.

ஆரம்ப கால மேலணை, 7அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டுள்ளது.

முதலில் கட்டப்பட்ட இந்த மேலணையின் புகைப்படம் கிடைத்துள்ளது. மதகுகளுடன் (கதவுகள் இல்லாத) ஓரு எளிய தடுப்பணை.

 படம் 1 - மேலணை - Photo Credit: British Library















படம் 2 - முக்கொம்பு தகவல் பலகை Photo Credit: Google maps





















கீழணை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில், கொள்ளிடத்தின் குறுக்கே அணைக்கரை என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்த கீழணை கட்டப்பட்டதில் ஓரு மிகப் பெரிய வரலாற்றுச் சோகம் உள்ளது. கரிகால் சோழனின் கல்லணையின் தொழில்நுட்பத்தைப் பார்த்து வியந்து, அதை “Grand Anicut” எனப் பெருமைப் படுத்திய ஆர்தர் காட்டன், கங்கைகொண்டசோழபுரத்துக்கு, அதன் புராதானத்துக்கான மதிப்பை வழங்கவில்லை. ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கலைச்செல்வம் மேலும் சிதையக் காரணமாயிருந்தார். இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர், மண்டபம், கோபுரம் ஆகியவற்றிலிருந்து கற்களை எடுத்து, இந்தக் கீழணைக் கட்டப்பட்டுள்ளது. இதை வரலாற்று ஆய்வாளர். ரா.நாகசுவாமி தனது “கங்கைகொண்ட சோழபுரம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தகவல் 1875ல் வெளிவந்த “THE INDIAN ANTIQUARY A JOURNAL OF ORIENTAL RESEARCH VOL 4” பக்கம் 274ல் கிடைக்கிறது.

படம் 3-  கீழணைக்கு கங்கைகொண்டசோழபுரத்தில்
இருந்து கற்கள் எடுக்கப் பட்ட தகவல்கள்






















அடுத்த வருட வெள்ளப் பெருக்கின் போது, மேலணையின் ஓரு பகுதி உடைந்து விடுகிறது. 1837ல், ஆர்தர் காட்டன், இதை பார்வையிட்டு, சரி செய்யப் படுகிறது. 1843 வரை இது சரியாக இருக்கிறது.

கீழணையின் உயரம் குறைவாக இருப்பதாக உணரப் பட்டு, மேலும் 2 அடிக்கு உயர்த்தப் பட்டது. கீழணையில் தொடர்ந்து பல வருடங்களுக்கு உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது, இது பற்றிய தகவல்கள் “Professional papers on Indian Engineering, second series Vol I - Failure of the Coleroon Anicut by E. Lawford”ல் கிடைக்கின்றன.

1838 முதல் 1843 வரை ஆர்தர் காட்டன், ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் டாஸ்மானியாவில் விடுமுறையில் இருக்கிறார்.

அவர் விடுமுறையில் இருந்த போது, 1839ல் கல்லணை மேலும் திருத்தி அமைக்கப் பட்டு, பாலங்கள், மதகுகள் உள்ள தடுப்பணையாகக் கட்டப் பட்டது.

இந்தியா திரும்பிய பின், உடல் நிலை காரணமாக, எளிய பணியாக விசாகப் பட்டினத்தில் சர்ச் ஒன்றைக் கட்ட நியமிக்கப் படுகிறார். இங்கு பணியாற்றும் போது, அருகில் கோதாவரி டெல்டா பகுதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அங்கு நீர்ப்பாசனத்துக்கான திட்டங்களில் ஈடுபடுகிறார். அதன் பிறகு கிருஷ்ணா டெல்டா திட்டங்கள்.

மேலணை, கொள்ளிடத்தின் நீர் செல்லும் வேகத்தைக் கட்டுப் படுத்தியதால், அங்கு அதிக மணல் தேங்க ஆரம்பித்தது. காவிரியில் அதிக நீர் செல்வதால், அதன் ஆழமும் அதிகமாகியது, இதையெல்லாம் சமாளிக்க, 1843ல் மேலணையின் உயரம் குறைக்கப் பட்டு, மதகுகளின் அகலம் அதிகரிக்கப் பட்டது.

மேலணையின் காரணமாக, காவிரியில் அதிக நீர் பாசனத்துக்கு கிடைக்கிறது. அதே சமயம், வெள்ளக் காலங்களில், காவிரிக் கரையில் உடைப்புகள் ஏற்பட்டன. இதைச் சமாளிக்க, 1845-50ல் முக்கொம்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு தடுப்பணை கட்டப் பட்டது. எட்வர்டு லாஃபோர்டு (Edward Lawford) என்ற பொறியாளர் இந்த கட்டமைப்புகளைச் செய்தார். கூடவே, முக்கொம்பில் இருந்து, காவிரியின் அதிக வெள்ளத்தைச் சமாளிக்க காவிரியில் இருந்து கொள்ளிடத்துக்கு வெள்ளத்தைத் திருப்பிவிட 6 இடங்களில் தடுப்பணை/கால்வாய்களும் அமைக்கப் பட்டன. இவற்றில் ஒன்று, “150 யார்டு கலிங்குலா( 150 Yards Calinguala) எனக் குறிக்கப் பட்டது. ஆச்சரியமாக அந்த அமைப்பும், அதன் தகவல் பலகையும் 150 ஆண்டுகளுக்கு மேலும் இன்னும் இருக்கிறது. யாரோ ஒரு ஆர்வலர், அதனை கூகுள் மேப்பில், Christopher’s Bridge எனப் பெயரிட்டு, இப்போதும் காணக் கிடைக்கிறது.

படம்  4a -  150 யார்டு கலிங்குலா  படம் 






















படம்  4b -  150 யார்டு கலிங்குலா  படம் 











பெங்களூரில் ஒரு முக்கியமான நபர், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள் என நிறைய நிறுவியுள்ளார். அங்கு தொடர்ந்து எதாவது ஒரு கட்டட வேலை நடந்து கொண்டேயிருக்கும். கட்டடங்கள் இடிக்கப் பட்டு புதியவை கட்டப் படும் அல்லது முற்றிலும் புதிதாக ஏதாவது கட்டப்படும்.

அது போலவே காவிரி டெல்டாவில் அடுத்தடுத்து அமைப்புகள் புணரமைக்கப்பட்டன, பல புதிய அமைப்புகள் கட்டப் பட்டன. அவற்றின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில முக்கியமானவைகளை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

1847 வரை, கொள்ளிடம் ஆற்றில், மேலணை, கீழணை என இரண்டு தடுப்பணைகள், மாற்றப் பட்ட கல்லணை, காவிரியில் முக்கொம்பில் ஒரு தடுப்பணை என நீரைக் கட்டுப்படுத்தப் பெரிய திட்டங்கள். இவை போதாது என, 1848ல் கல்லணை வளாகத்துக்கு அருகில், காவிரி மற்றும் வெண்ணாறு குறுக்கே புதிதாகத் தடுப்பணைகள் கட்டப் பட்டன.

வெண்ணாறு தடுப்பணையின் ஓரு பழைய படம் கிடைத்துள்ளது. அந்த எளிய அமைப்பில் ஆரம்பித்து, தற்போதுள்ள தடுப்பணை எவ்வளவு மேம்படுத்தப் பட்டுள்ளது எனப் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக உள்ளது.

படம் 5 வெண்ணாறு ரெகுலேட்டர்
Photo credit: University of Minnesoto Online Library


















1888ல், வெண்ணாறு, முன்பு கல்லணை வளாகத்திற்கு 3-4 மைல்களுக்கு மேற்கே பிரிந்தது. அதனை மூடிவிட்டு, தற்போதுள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. காவிரி மற்றும் வெண்ணாறு குறுக்கே, பாலங்கள், கதவுகளுடன் கூடிய மதகுகள் கொண்ட தடுப்பணைகள் கட்டப் பட்டன.

1899-1904ல், மேலணை பாலங்கள், கதவுகளுடன் கூடிய மதகுகள் கொண்ட தடுப்பணையாகப் புதிதாகக் கட்டப்பட்டது. கீழணையும், இது போலவே புணரமைக்கப்பட்டது.

கல்லணை தடுப்பணை புனரமைக்கப்பட்டு, மதகுகளுக்கு கதவுகள் பொருத்தப்பட்டன. அதன் பிறகும் வெவ்வேறு பணிகள் நடந்திருக்கலாம். எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

2018ல் மேலணையின் 9 மதகுகள் முழுவதும் உடைந்தன. இதற்குப் பதிலாக 2022ல் ஓரு புதிய தடுப்பணை, தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டது. இது அதைக் கட்டிய நிறுவனத்தின் பெயரால், புதிய எல் அண்ட் டி பாலம் (New L&T bridge) என அன்புடன் மக்களால் அழைக்கப்படுகிறது!

கரிகால் சோழன் தொடங்கிய பணியில், 1803ல் ஜேம்ஸ் எல் கால்டுவெல் காவிரி டெல்டா பாசனத்தின் முதல் மாறுதலை ஆரம்பித்து வைத்தார். மாற்றங்கள் இன்று வரை தொடர்கிறது.

பண்டைய காலத்து கல்லணை, தற்போது நீருக்கு அடியில் இருந்தாலும், அதன் சிறப்புத் தன்மை, இந்தியாவின் பிரிட்டிஷ் காலத்து நீர்ப்பாசனப் பணிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் கூட அதனைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன.   சிறப்பான எதற்கும் அழிவில்லை!

படம் 6 - காவிரி டெல்டா  - முக்கிய இடங்கள்












  1. முக்கொம்பு வளாகம் – மேலணை (Upper Anicut  ),  காவிரி தடுப்பணை
  2. கல்லணை வளாகம் – கல்லணை(Grand Anicut),  காவிரி தடுப்பணை (Cauvery Regulator), வெண்ணாறு தடுப்பணை (Vennar Regulator)
  3. கீழணை  ( Lower Anicut )
  4. கங்கைகொண்டசோழபுரம்
  5. வீராணம் ஏரி



ஆர்தர் காட்டன், 1832 முதல் 1843 வரை காவிரி டெல்டா பணியில் இருந்தார். 1843 முதல் அவர் கோதாவரி, கிருஷ்ணா டெல்டா பகுதிகளில் பணியாற்றுகிறார்.

1821ல் இந்தியாவில் பணியாற்றத் துவங்கிய ஆர்தர் காட்டன், 1860ல் பணியிலிருந்து விலகி, இங்கிலாந்து திரும்புகிறார்.

ஆர்தர் காட்டனை தென்னிந்தியாவின் நீர்ப்பாசனத்தின் முன்னோடி எனச் சிலர் குறிப்பிடுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. முக்கியமாக அனுபவம் வாய்ந்த நிபுணர் குழு கூடி ஆராய்ந்து, ஓரு தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்து, அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஓரு செயலைச் செய்வது, அதில் ஏற்படும் தோல்வி/தொந்தரவினால், அதிலோ அல்லது வேறு இடத்திலோ அதைச் சரி செய்ய முயற்சிப்பது என்ற ஒரு trial and error பாணியிலேயே அவரது காவிரி டெல்டாப் பணிகள் அமைந்தன. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஆர்தர் காட்டன் ஆரம்பித்த வேலைகளில் பல கோணல்கள் ஏற்பட்டாலும், மற்ற பொறியாளர்கள் அவற்றைச் சரி செய்து சிறப்பானதாக மாற்றினர்.

அவர் உலகின் நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். அதனால் நிறைய தொடர்புகளையும், நண்பர்களையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் பணி புரிந்தவர்களைப் பற்றி மிகச் சிறப்பான பாரட்டுகளைத் தெரிவித்துள்ளார். துணிந்து சில முடிவுகள் எடுத்துச் செயல்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் அவரது சிறப்பியல்புகள்.

பணி ஒப்புதல்களுக்காக அனுப்பிய திட்ட மதிப்பீட்டில், பண மதிப்பீடு குறைவாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகும் போது, அவர் கூடுதல் பண ஒதுக்கீடு கோருதல் அல்லது, இவர் விடுமுறைக்குச் சென்றுவிட்டு, மற்ற பொறியாளர்கள் இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் நிலை அமைதல் என அவர் மீது விமர்சனங்கள் உள்ளன.

கங்கைகொண்ட சோழபுரக் கோயிலைச் சிதைத்த அவரது செயல் என்னால் ஏற்கக் கூடியதல்ல.

அவரின் இன்னுமொரு செயல் அவர் மேல் இருந்த மதிப்பைக் குறைக்கிறது. ஸர் ப்ரோபி தாமஸ் காட்லி (Sir Proby Thomas Cautley) என்ற பிரிட்டிஷ் பொறியாளர், கங்கை நதியில் பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்பதை முதலில் குறிப்பிட்டிருந்தேன். சிறந்த முறையான திட்டங்கள், கிட்டத்தட்ட சரியான பண மதிப்பீடுகள், இந்தியாவில் 1821 முதல் 1854 வரை, ஒரிரு வருடங்கள் விடுமுறை தவிர தொடர்ந்த பணி என மாறுதலானவர்.

ஆர்தர் காட்டன் இங்கிலாந்து திரும்பியபின், காட்லியின் கங்கை நீர்ப்பாசனப் பணிகளை விமர்சித்து, குறைகள் கூறி பொதுவெளியில் நீண்ட விவாதங்களை நடத்தி காட்லியைச் சங்கடத்துக்கு ஆளாக்கினார். பொதுவாக, ஒரு துறையில் இருப்பவர் இன்னொருவர் மீது பொதுவெளியில் குற்றச் சாட்டை வைக்க மாட்டார். ஆனால் காட்டன் இந்த நெறியை மீறினார். இறுதியில், ஒரு ஆய்வுக் குழுவின் அறிக்கை, காட்லியின் கட்டுமானச் செயல்கள் சரியானவை என இந்தச் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

ஸர் ஆர்தர் காட்டன், பிரடெரிக் காட்டன்,
ஹு கால்வேலி காட்டன்
 






















ஸர் ப்ரோபி தாமஸ் காட்லி 























Note: 
Coleroon, Kolerun - கொள்ளிடத்தை குறிக்க பிரிட்டிஷார் பயன்படுத்திய வார்த்தைகள்.
Cauvery, Kaviri -  காவிரியைக் குறிக்க பிரிட்டிஷார் பயன்படுத்திய வார்த்தைகள்.


References:

from archive.org
  1.  Epic Engineering: Great Canals and Barrages of Victorian India by by Alan G. Robertson and D. Jeremy W. Berkoff
  2.  ACL-CRichard Baird Smith - The Cauvery, Kistnah, and Godavery. Being a report on the works constructed
  3. General Sir Arthur Cotton, R. E., K. C. S. I.; his life and work
  4. Professional Papers on Indian Engineering - Vol I - Coleroon anicut Failure
  5. Madras-District gazetteers - F R Hemingway 1907
  6. Gangaikondacholapuram – R. Nagaswamy – கோயிலின் கற்கள் கீழணை கட்ட எடுக்கப் பட்டன
  7. “THE INDIAN ANTIQUARY A JOURNAL OF ORIENTAL RESEARCH VOL 4” - The temple structure was dismantled for constructing anicut