தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

ஞாயிறு, 5 மே, 2024

கண்ட பேருண்டம்

ஒரு நகை, ஒரு புடவை, ரஷ்யப் பேரரசு, கோயில் வாகனம், மைசூர் அரசு, ஒரு சாமான்யன் கூறிய கதை, கர்நாடக அரசு, அல்பேனியா நாடு, நான் நேரில் பார்த்த ஒரு சிற்பம் ஆகியவற்றில் ஒரு பொது அம்சம் இருக்கிறது எனக் கூறினால் அதை உங்களால் நம்ப முடியுமா? அந்த பொது அம்சம் என்ன? அது இரு தலைகளையுடைய ஒரு கற்பனைப் பறவை என்று கூறினால் நம்ப முடிகிறதா?

படம் 1  : பெங்களூர் ஆலய தூண் சிற்பம்


 









 



மேலே உள்ள இந்த சிற்பம் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஒரு தூணில் உள்ளது. கர்நாடகத்தில் “கண்ட பேருண்டா”(Gandaberunda) எனப்படுகிறது. மற்ற இடங்களில் கண்ட பேருண்டம், கண்ட பேருண்டப் பட்சி(பறவை), இரு தலைப் பறவை, இரு தலைப் புள், இரு தலைக் கழுகு, அண்ட ரெண்ட பட்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியக் கோயில்களில் எத்தனையோ கற்பனை விலங்குகளின் சிற்பங்கள் இருக்கும்போது இதில் என்ன புதுமை என்ற கேள்வி எழுந்தது. புதுமை இந்தச் சிற்பத்தின் அமைப்பிலும், அது நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லும் தகவல்களிலும் உள்ளது.

முதலில் நேரடித் தகவல்கள்

படம் 2 : பெங்களூர் ஆலய தூண் சிற்பம்

 











மனித உடல், வலுவான கை, கால்கள், இரண்டு கழுகுத் தலைகள், முதுகின் இருபுறமும் விரிந்த இறகுகள், மேல் உடலில் அணிகலன்கள் என ஒரு வீரனுக்குரிய கம்பீரத்துடன் நின்றுள்ளது. கால்களில் இரு யானைகள், கைகளில் இரு யானைகள் மற்றும் அலகில் இரு யானைகள் என மொத்தம் 6 யானைகளை வெகு இலகுவாக தனது பிடிக்குள் வைத்துள்ளது! (யானைகளை வண்ணக் கோடுகளால் குறித்துள்ளேன்.)  

இப்போது மறைமுகத் தகவல்கள்.

கழுகின் உயரம் ஏறத்தாழ 3 அடி, யானையின் உயரம் ஏறத்தாழ 10 அடி, இந்தச் சிற்பத்தில், காலடியில் உள்ள யானையின் உயரத்தையும் இந்த கண்ட பேருண்டப் பறவையையும் ஒப்புநோக்கினால், இந்தப் பறவையின் உயரம் எவ்வளவாக இருக்கும்?   

ஒரு யானை ஏறத்தாழ 4000 – 5000கிலோ எடை இருக்கலாம். மொத்தம் 6 யானைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தப் பறவையின் வலிமை எவ்வளவாக இருக்கும்?

இந்தக் கோயில் மிகப் பழமையானது என்றாலும், இந்த சிற்பம் இருக்கும் மண்டபம் 16ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசின் காலத்தில்  கட்டப்பட்டதாக  வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பறவையின் வரலாற்றைத் தேடிப் புறப்பட்டேன்.

பள்ளிகாவி(Balligavi), கர்நாடகாவின் ஷிமோகா (Shimoga, officially known as Shivamogga)  மாவட்டத்தில் சிகாரிபுரா(Shikaripura) வட்டத்தில் உள்ள ஒரு ஊர்.

இங்கு ஒரு 30அடி உயர வெற்றிக் கம்பம் உள்ளது. இதன் உச்சியில் மனித உடலும், இரண்டு கழுகுத் தலைகளும் கொண்ட ஒரு கண்ட பேருண்டப் பறவையின் சிலை இருந்தது. பேருண்டேஷ்வரா என அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தையப் படங்கள் கீழே. 

படம் 3:  பள்ளிகாவி பேருண்டேஷ்வரா,
பிரிட்டிஷ் காலப் படங்கள்













இந்தக் கம்பத்தின் கீழ் இருந்த பொ.பி 1047த்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு,  இதனை பனவாசியைத் தலைநகராக கொண்டிருந்த கல்யாணிச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஸ்வரன்(Somesvara I) கட்டினான் எனத் தெரிவிக்கிறது. (Epigraphia Carnatica, vol VII, no 151 of Shikarpur – dated 1047 CE)  

1930களில், ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட, இந்த வெற்றிக்  கம்பத்தின் உச்சியில் இருந்த சிலை கீழே விழுந்து உடைந்து விட்டது. மேலும் கம்பத்திலும் விரிசல்கள் ஏற்பட்டது. இந்தக் கம்பத்தை வலுப்படுத்த, மைசூர் மகராஜா கம்பத்தைச் சுற்றி மேடையை ஏற்படுத்தினார். மேடைச் சுவற்றுக்குள் ஒரு அறை அமைத்து, ஒரு புதிய பேருண்டேஷ்வரா சிலையையும் வைத்துள்ளார்.

அதன் தற்போதைய புகைப்படங்கள் கீழே.

படம் 4:  பள்ளிகாவி,  பேருண்டேஷ்வரா தற்காலப் படங்கள்


 








(ஓரு கூடுதல் தகவல்: முதலாம் சோமேஸ்வரன் காலத்தில் சோழர்களுடன் போர்கள் நடந்துள்ளன. ஒரு போரில் ராஜராஜ சோழனின் பேரனும்,  அரசனுமாகிய முதலாம் ராஜாதிராஜ சோழன் பொ.பி 1054ல் மரணமடைந்ததாக  இதே ஊரில் சோமேஸ்வரர் கோயிலில் இருந்த கல்வெட்டு தெரிவிக்கிறது (Epigraphia Carnatica, vol VII, no 118 of Shikarpur – dated 1054 CE).  

இன்னும் ஒரு 40கிமீ பயணித்தால் 11ம் நூற்றாண்டுலிருந்து 16ம் நூற்றாண்டுக்குச் செல்லலாம். கெளதி (கெ-ள-தி) (Keladi) என்ற ஊரில் உள்ள ராமேஸ்வரர் கோயிலின் கூரைப்பகுதியில் ஒரு அழகிய கண்ட பேருண்டப் பறவையின் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கெளதி நாயக்கர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடையவர்கள்.   

படம் 5:  கெளதி - கண்ட பேருண்ட பறவை சிற்பம்
- Photo credit - Wikipedia









இது முழுவதும் பறவையாகக் காட்டப் பட்டுள்ளது. மண்டபத்தின் கூரையில் இருப்பதால், மனிதர்களின் தொந்தரவு ஏதும் இல்லை. ஆகவே, பொலிவுடனும், நேர்த்தியுடனும் உள்ளது. அதன் நுண்ணிய வேலைப்பாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. அந்த இரு கழுகுகளும் நம்மைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமை தோன்றுகிறது. அவற்றின் தலைக் கொண்டைகள் இணைந்து ஒரு கிரீடம் போலத் தோன்றுகிறது. கால்கள் இரண்டு யானைகளை கெட்டியாகப் பிடித்துள்ளன. ஒரு சிங்கம், யானையைத் தாக்கி அதனைத் தூக்கிக் கொண்டுள்ளது. அந்தச் சிங்கத்தையே சுலபமாக தன் அலகால் தூக்கிக் கொண்டுள்ளது இந்த மாபெரும் பறவை! ஏதோ நாம் ஐஸ்கிரிமை கூம்புடன் சாப்பிடுவது போல! கழுகின் அலகுகள் திறந்து, சிங்கங்களின் திறந்த வாய்களைக் கச்சிதமாக பிடித்துள்ளது.

ஒரு வேளை இது வானத்தில் பறப்பதை சித்தரிக்க, இதைத் தூணில் செதுக்காமல், மண்டபத்தின் கூரையில் செதுக்கியுள்ளார்களோ! 6 விலங்குகளை கோழிக்குஞ்சுகளைப் போல இலகுவாக தூக்கிக் கொண்டு பறந்து கொண்டிருக்கிறது!  

இந்தச் சிற்பத்தில் இருக்கும் கண்ட பேருண்ட பறவை உயிருடன் இருந்திருந்தால், காடுகளில் உள்ள விலங்குகள் என்னவாயிருக்கும்?  

அடுத்ததாக, இந்தப் பறவை தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைத் தேடி பறந்து வந்திருக்கிறது அல்லது அவர்களின் அன்பான அரசு அழைப்பை ஏற்று  தஞ்சாவூர் வந்துள்ளது. நந்தி மண்டபத்தில் உள்ள 25,000 கிலோ எடையுள்ள நந்தி கற்சிலையைத் தூக்க முயற்சி செய்தது. முடியாமல் போகவே, இன்னும் மூன்று கூட்டாளிகளையும் கூட்டி வந்துள்ளது. நான்கு பறவைகளும் சேர்ந்து தூக்க முடியவில்லை. எனவே அந்த நான்கு பறவைகளும் நந்திக்கு மேல், நந்தி மண்டபத்தின் கூரையில் இருந்து கொண்டு, எப்படி, எப்போது தூக்குவது என திட்டம் தீட்டிக் கொண்டுள்ளன! நீங்கள் அங்கு போனால், இப்போதும் கூட அவற்றைப் பார்க்க முடியும். 

என்னுடைய கற்பனைக் குதிரையை நிறுத்திவிட்டு, இப்போது உண்மையான தகவல்கள்!

படம் 6:  தஞ்சாவூர் பெரிய கோயில் ஓவியம்  
Photo credit - printrest - Ramya Mani and Wikipedia










தஞ்சை பெரிய கோயிலின் பெரிய நந்தி, ராஜராஜ சோழன் வைத்தது இல்லை. இப்போதுள்ள பெரிய நந்தி, 16ம் நூற்றாண்டில், தஞ்சை நாயக்கர்களால் அமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் வைத்த நந்தி, திருச்சுற்றில்  வைக்கப்பட்டுள்ளது. நம்புவதற்கு கடினமாக இருந்தால், விக்கிப்பீடியா அல்லது நம்பகமான வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கலாம். அல்லது எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களின் முழுமையறிவு இயக்கம் நடத்தும் ஆலயக் கலை வகுப்பில் கலந்து கொள்ளலாம்.  (இதைப் பற்றிய தகவல்கள் கட்டுரையின் முடிவில்)

இந்த நந்தி மண்டபத்து கூரையில் நாயக்கர் காலத்து அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. ஓரு ஓவியத்தின் நான்கு மூலைகளிலும் அந்தப் பறவையின் ஓவியம் உள்ளது! இந்த நந்தி மண்டபத்தில் உள்ள இருதலைப்புள், நீண்ட தோகையுடன் உள்ள மயில் உடல் மற்றும் கழுகுத் தலை கொண்டதாக உள்ளது.

பறவையல்லவா, இங்கிருந்து சுமார் 100கிமீ தூரத்தில் இருக்கும், ஆவுடையார் கோயில்(திருப்பெருந்துறை) ஆத்மநாத சுவாமி‌ கோயிலுக்கும் போயிருக்கிறது. இங்கு இரு பெரும் கண்ட பேருண்ட பறவையின் ஓவியங்கள் உள்ளன. இந்தக் கோயில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 15-16ம் நூற்றாண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. 

படம் 7a:  ஆவுடையார் கோயில் ஓவியம்  
Photo credit - 
 மின்தமிழ் Google Group












மேலே உள்ள ஓவியம் மாணிக்கவாசகர் சந்நிதியில் மேற்கூரையில் இடதுபுறம் உள்ளது. நிறைய இடங்களில் அழிந்துள்ளது. சற்று கூர்ந்து நோக்கினால் விவரங்கள் புரியும். கால்கள் மஞ்சள் நிறத்திலும், உடல் அழகிய வெள்ளை, சிவப்பு நிற சிறிய கட்டங்களிலும் உள்ளது. இறகுகள் இரு பக்கங்களிலும் கம்பீரமாக பரந்து விரிந்துள்ளன. இடது காலில் ஒரு யானையைத் தூக்கிக் கொண்டுள்ளது. யானையின் உடல்  சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் உள்ளது.  தும்பிக்கையும், தந்தங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தும்பிக்கையின் சுருக்கங்கள் கூட நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன.

இடது அலகில் தூக்கிக் கொண்டிருக்கும் யானையின் உடலும், தலையும், தும்பிக்கையும் மட்டும் தெரிகிறது.  இன்னொரு யானை உருவம் அழிந்து விட்டது. 

வலது அலகுக்கு அருகில் வண்ணம் சிதைந்துள்ளது. இங்கு ஒரு யானை உருவம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் அருகில் இன்னொரு யானையின், மேல் உடல், தலை, தும்பிக்கை, பாதி தந்தம் மட்டும் காணப்படுகின்றன. வலது காலில் தூக்கிக் கொண்டிருக்கும் யானையின் தந்தங்களும், தும்பிக்கையும் மட்டும் எஞ்சியுள்ளது. 

படம் 7b:  ஆவுடையார் கோயில் ஓவியம்  
Photo credit - 
 மின்தமிழ் Google Group












மேலே உள்ள ஓவியம் மாணிக்கவாசகர் சந்நிதியின் மேற்கூரையில் வலதுபுறம் உள்ளது. யானைகளின் சாம்பல் கலந்த கருப்பு வண்ணம் நிறைய இடங்களில் அழிந்து வெள்ளையாக உள்ளது. மொத்தம் 6 யானைகளைக் காணலாம். அவை எங்குள்ளன என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அவற்றை கண்டுகொள்ளும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

இத்தனை அரசர்களின் தொடர்பில் இருந்த இந்தப் பறவை, அரசாங்கத்தின் மிகப் பெரிய கௌரவமான அரசு நாணயங்களிலும் இடம் பிடித்தப் பெருமையைப் பெற்றுள்ளது!

படம் 8: ஹொய்சால கால நாணயம் Photo credit -  coinindia.com







இது ஹொய்சால அரசர் வினயாதித்யா (ஆட்சிக் காலம் பொ.பி 1047 – 1098) காலத்தில் வெளியிடப்பட்ட நாணயமாகும். இதில், இந்த இருதலைப் பறவை புலியின் மேல்  அமர்ந்துள்ளது.

விஜயநகரப் பேரரசின் அரசர் அச்சுதராயரால் 16ம் நூற்றாண்டில் வெளியிட்டுள்ள நாணயத்தில் இந்தப் பறவை உள்ளது. மதுரையிலும் இத்தகைய நாணயங்கள் கிடைத்துள்ளன. 

கண்ட பேருண்டப் பறவை விஜயநகரப் பேரரசின் சின்னங்களில் ஒன்றாகவும் விளங்கியுள்ளது.

விஜயநகரப் பேரரசுக்குப் பிறகு, மைசூர்  சமஸ்தானம்  கண்ட பேருண்டப் பறவையைத் தன்னுடைய அரசு சின்னமாக வைத்து அதிக அளவில்  கொண்டாடியது. தங்கத்தால் செய்யப்பட்ட அதனுடைய அரசு சிம்மாசனத்தில் இதன் வடிவம் செய்யப்பட்டுள்ளதை இப்போதும் காண முடியும்.

படம் 9: கர்நாடக மாநில அரசு சின்னம்

 










கர்நாடக மாநிலத்தின் அரசு சின்னத்திலும் கண்ட பேருண்டப் பறவையின் சித்தரிப்பு உள்ளது. 

இந்தச் சின்னத்தில், நடுவில் கண்ட பேருண்ட பறவை உள்ளது. நாம் கெளதி ராமேஸ்வரர் கோயில் சிற்பத்தில், சிங்கத்தையையும், யானையையும் அலகால் கவ்விக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். இங்கு அவை இரண்டும்  இணைக்கப்பட்டு கஜசிங்கங்களாக இருப்பதைப் பார்க்கலாம். கர்நாடகாவின் பல துறைகளும் இதனைச் சின்னமாகக் கொண்டுள்ளன. கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூர், மைசூரில் எங்காவது ஒரு இடத்தில் இந்தப் பறவையின் சித்தரிப்பு கண்ணில் பட்டால் ஆச்சரியம் இல்லை!

கண்ட பேருண்டப் பறவையின் சித்தரிப்பு இந்தியாவின் பிற இடங்களிலும், உலகின் பிற இடங்களிலும் பண்டை காலத்தில் இருந்து இன்று வரை அதிக அளவில் உள்ளது.  

படம் 10: அல்பேனியா தேசியக் கொடி









தென்கிழக்கு ஐரோப்பாவில் அல்பேனியா என்ற நாடு உள்ளது. இந்நாட்டின் தேசியக் கொடியில் இந்தப் பறவை உள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் இந்த கற்பனைப் பறவையை பொ.பி 1400க்கும் முன்னால் இருந்தும் தங்கள் கொடியில் பயன்படுத்தியுள்ளனர். தங்களது பல்வேறு சுதந்திரப் போராட்டங்களிலும் இதனை தங்கள் கொடியில் பயன்படுத்துவதை உரிமையாகவும், பெருமையாகவும் கருதினர். 

படம் 11: ரஷ்யாவின் தேசிய  சின்னம்












ரஷ்யாவில், இரட்டைத் தலை கழுகு, 15ம் நூற்றாண்டிலிருந்து, வெவ்வேறு வகையில் வெவ்வேறு அரசுகள், இனங்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு நீண்ட வரலாறு உள்ளது.  ரஷ்யாவின் தேசிய  சின்னமாகவும் இது உள்ளது. 

படம் 12a: நுழைவுத் தூணில் இரட்டைத் தலைக் கழுகுச்  சின்னம்  
Photo credit - 
 hittitemonuments.com

 











படம் 12b: நுழைவுத் தூணில் இரட்டைத் தலைக் கழுகுச்  சின்னம்  
Photo credit - 
 hittitemonuments.com










தற்போதைய துருக்கி(Turkey) நாட்டில் இட்டைட்டு(Hittites) பேரரசின் தொல்லியல் தளங்கள் உள்ளன. இட்டைட்டு நாகரிகம் பொ.மு 1600 முதல் பொ.மு 1178 வரை இருந்தது.  (இந்தக் கால வரிசையைப் புரிந்து கொள்ள, பொ.மு 3300 முதல் பொ.மு 1300 வரை நீடித்த சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.)

இங்கு, அலாஜா ஹோயக்(Alaca Hoyuk) என்ற ஊரின் கோட்டை நுழைவாயிலில் இரண்டு பெரிய ஸ்பிங்ஸ்(Sphinx) தூண்கள் உள்ளன. ஓரு தூணின் கீழ்ப் பகுதியில், இரண்டு தலை கழுகின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவை கால்களில் முயலை அழுத்திக்  கொண்டிருக்கிறது.

இதைப் போலவே இன்னொன்று, Yazilikiya என்ற இடத்தில் ”Chamber A, No:45”ல் உள்ளது. இவையே மிகப் பழமையானவை எனக் கருதப்படுகிறது.

தலையில் சீப்பை வைத்துக் கொண்டு, வீடு முழுக்க அதைத் தேடுவதைப் போல, இந்தப் பறவையின் பூர்விகத்தை அறிய உலகம் முழுக்கத் தேடிக் கொண்டிருந்தேன். இதன் மிகப் பழமையான சித்தரிப்பு இந்தியாவில் இருப்பதை எழுத்தாளர் ஜெயமோகன் தனது பயணக் கட்டுரையில் பகிர்ந்து இருப்பதை நண்பர்கள் மூலம்  தெரிந்து கொண்ட போது, இன்ப அதிர்ச்சி. 

படம் 13 : குடோப்பி - இரட்டைத் தலைக் கழுகு?  Photo credit -  jeyamohan.in









இது ஒரு பாறைச்செதுக்கு ஓவியம் (Geoglyph). கொங்கன் பகுதியில் உள்ள  குடோப்பி (Kudopi) என்ற இடத்தில் உள்ளது. இந்தச் செதுக்கு ஓவியம் ஏறத்தாழ 10x15 அடி இருக்கலாம். இது போன்ற வெவ்வேறு பாறைச்செதுக்கு ஓவியங்கள்  மகாராஷ்டிர மற்றும் கோவாவின் கொங்கன் பகுதியில் வேறு இடங்களிலும் உள்ளன.  

இவை கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும் 1700லிருந்து 10,000 ஆண்டுகள் (Mesolithic (10Kya) to Early Historic (1.7Kya)) பழமையானதாக இருக்கலாம் என நம்பப் படுகிறது.  இவற்றை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, யுனெஸ்கோ-விடம் இவற்றைப் பாரம்பரியச் சின்னங்களாக (UNESCO World Heritage site) அறிவிக்கக் கோரிக்கை வைத்துள்ளது. ஏற்றுக் கொண்டபின் உலகளாவிய வகையில் ஆய்வுகளும் விவாதங்களும் நடக்க வாய்ப்புள்ளது.

படம் 14: இரட்டைத் தலைக் கழுகு குகை  பழங்கால ஓவியம்?  
Photo credit - 
 Sudeesh Kottikkal youtube channel

 






சில மாதங்களுக்கு முன் ஒரு நம்பகமான youtube channel காணொளியில், கர்நாடகாவின் அரசிக்கெரே (Arasikere) தாலுக்காவில் உள்ள ஒரு குகை ஓவியங்களின் ஒன்று கண்ட பேருண்டப் பறவையின் சித்தரிப்பாக இருக்குமோ என்ற கருத்தை டாக்டர். ஹரிஷ்குமார் என்ற கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் வைத்திருந்தார். எனக்கு அதை நம்பக் கடினமாக இருந்ததால், இந்தக் கட்டுரையில் சேர்க்க வேண்டாம் என்று இருந்தேன். குடோப்பியின் பாறைச்செதுக்கு ஓவியத்தைப் பார்த்த பிறகு, தைரியமாக அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஒரு சிறு விதையாக முளைத்து, வனத்தில் பரந்து விரிந்திருக்கும் பழமையான ஆலமரத்தின் முதல் அடித்தண்டை கண்டுபிடிப்பது மிகச் சிரமமே. அது போல, இந்த கண்ட பேருண்டப் பறவையின் சித்தரிப்பு எங்கு தொடங்கியது என அறுதியிடுவதும் சிரமமே! 

இது நாள் வரை துருக்கியில் (இட்டைட்டு) உள்ள இரு தலைக் கழுகின் சிற்பமே பழமையானது எனக் கருதப்பட்டுள்ளது. அண்மை காலத்தில் இந்தியாவில் பாறை ஓவியங்களிலும், பாறைச் செதுக்குச் ஓவியங்களிலும் இதன் சித்தரிப்புகள் கிடைத்துள்ளன. இவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு,  இவையே பழமையானது என உறுதிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் வேறொரு இடத்தில் இதைவிடப் பழமையான ஒன்றும் கண்டறியப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆலமரத்தின் அடித்தண்டு எங்கிருந்தாலும், மிக முக்கியமாக ஆலமரம் நம்முடன் இருப்பது மகிழ்ச்சி அல்லவா!

இப்படியாக நான் 2023ல் பெங்களூரில் நேரில் பார்த்த சிற்பத்தில் ஆரம்பித்து,   புகைப்படங்கள் மூலம் துருக்கியின் பொ.மு 1600க்கு முந்திய சிற்பம்,  குடோப்பியின் பாறைச் செதுக்கு ஓவியம் வரை ஓரு நீண்ட பயணம் வந்தாயிற்று.

பொதுவாக ஒரு கருத்து அல்லது உருவகம், வாய்வழிக் கதைகளில் ஆரம்பித்து, பாடல்கள்/கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள் என வளர்ச்சி பெறுவதும் உண்டு.   

பொ.மு 300 முதல் பொ.பி 300-ம் வரையிலான சங்க காலப் படைப்புகளான  அகநானுறிலும், கலித்தொகையிலும் “இரு தலைப் புள்”  குறிப்புகள் காணப்படுகின்றன.

தோழி ஒருத்தி தனக்கும் தன் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்ளின் தலைகள் போன்றது என்று கீழேயுள்ள அகநானூற்றுப் பாடலில் கூறுகிறாள்.

            யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
            இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகநானூறு 12)

கீழேயுள்ள கலித்தொகை பாடலில், கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான்.

        என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
          போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்
          ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? (கலித்தொகை 89)

இயலில் இடம் பெற்ற இந்தப் பறவை, நடனத்திலும் இடம் பெற வேண்டாமா? 

படம் 15:   பேருண்ட முத்திரை  Photo credit - onlinebharatanatyam.com











நாட்டியத்திலும், பேருண்ட முத்திரை (Bherunda Hasta mudra) என்ற பெயரில் இந்தப் பறவை இடம்பிடித்துள்ளது.

இது நம் இந்தியத் தொன்மத்தில் இடம் பெற்று பக்தி இயக்கத்திலும் பங்களிப்பு ஆற்றியுள்ளது!

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்து இருக்கும். கண்ட பேருண்ட பறவை வடிவம் அதன் முடிவில் இருந்து ஆரம்பிக்கிறது. இதில் சிவனும் உள்ளார்!

விஷ்ணு, சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்ம வடிவம் எடுக்கிறார். இரணியன் (இரணியகசிபு, Hiranyakashipu) எனும் அரக்கனைக் கொன்று அதீத உக்கிரத்தில் அவனது குடலை மாலையாகப் போட்டுக் கொள்கிறார். உக்கிரம் குறையாமல் நரசிம்மர் மேலும் பலரைக் கொல்கிறார். அவரிடம் நிறுத்த வேண்டினால் அவர் கேட்கும் நிலையில் இல்லை. எனவே தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள். 

சிங்கத் தலையுடய நரசிம்மரிடம், இன்னொரு சிங்கத் தலை வடிவில் பேசினால் நரசிம்மர் கேட்கக்  கூடும் என சிவன் நினைத்திருப்பார் போலும். மதம் கொண்ட யானையை இன்னொரு யானை உதவியுடன் சமாதானப்படுத்துவது போல. எனவே சிவன், சிங்கத் தலையும், எட்டுக் கால்கள், இறகுகளுடன் பறவை உடல் கொண்ட ”சரபம்” என்ற வடிவம் எடுக்கிறார். இதைப் பார்த்த நரசிம்மருக்கு கோபம் இன்னும் அதிகரிக்கிறது.  அவர் தனது வாகனமாகிய கருடப் பறவையின் இருமடங்கு வலிமையுடன் ஒரு புது வடிவம் எடுக்கிறேன் என்று, இரு தலைகள் கொண்ட கருட (கழுகு) பறவையாகி, கண்ட பேருண்டம் என்னும் வடிவம் எடுக்கிறார். முதலில் இருவரும் சண்டையிட்டு, பின் சமாதானமாகிப் போனார்கள் என்பது இந்திய தொன்மக் கதை! 

படம் 16: கண்ட பேருண்ட பறவை வாகனம்  
Photo credit - 
 Mr Santhoosh youtube channel

 











சில கோயில்களில் கண்ட பேருண்ட பறவை வாகனங்கள் உள்ளன.  மன்னார்குடி ராஜகோபால சுவாமியின் பங்குனி உத்திரத் திருவிழாவில் சுவாமி கண்ட பேருண்ட வாகனத்தில் உலா வருவது சிறப்பானது.

சரி, இந்த கண்ட பேருண்ட பறவை சித்தரிப்பில், சாமன்யனின் பங்கு என்ன? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது “கதா விலாசம்” நூலில், தனது சிறு வயதில், கிராமத்தில், வயதான ஒரு மாட்டுத் தரகருடன் 20 மைல் தூரம் மாட்டுச் சந்தை வரை, கதை கேட்கும் ஒரே காரணத்துக்காக நடந்து சென்றதைக் குறிப்பிடுகிறார். அந்த வயதானவர் கூறிய கதைகளில் வந்த அண்டரண்டா பட்சிகளும், தங்கக் கொண்டை சேவல்களும் எங்கோ வசித்து வந்தார்கள் என நம்பியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். அரசர்கள், கலைஞர்கள் மனதில் மட்டுமல்ல, சாமான்யர்கள் மனதிலும் இந்தப் பறவை வாழ்ந்துள்ளதல்லவா! 

படம் 17: Photo credit – RMKV.com

 







தற்போதும் இந்தியாவில் பட்டுப் புடவைகளிலும் இந்த இரு தலைப் பறவை நெய்யப்படுகிறது.

படம் 18:  Photo credit – indiatoday.in

 







உலக அளவிலும் முக்கியமாக கர்நாடகாவில் கண்ட பேருண்டப் பறவையுள்ள  நகைகள் பழக்கத்தில் உள்ளன. இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தாரின் 2023ம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில், கண்ட பேருண்டப் பறவையும் விருந்தினராகக் கலந்து கொண்டது! ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, கண்ட பேருண்ட பறவை பதக்கம் உடைய கழுத்துச் சங்கிலி அணிந்திருந்தார். இது இந்தியா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, அதைப் பாராட்டி எழுதியுள்ளனர்.

கழுகுகள் மிகக் கூர்மையான பார்வை கொண்டவை ஏறத்தாழ 100 அடிக்கு மேலான உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், ஒரு நாலு அங்குலம் உயரமுள்ள ஒரு சிறிய கோழி குஞ்சு நகர்ந்து கொண்டிருப்பதை சரியாக கவனித்து வேகமாக கீழே இறங்கி நொடியில் குஞ்சை தூக்கிக் கொண்டு போய்விடும். இது அறிவியல் உண்மை.

இப்படிப் பட்ட கழுகை, அரசாங்கம் காவலாளியாக நிர்ணயித்தால்? அதுவும் இரு தலைகளுடன்? இது நம் சாகச மனம் நம்ப நினைக்கும் ஓரு அழகிய சாகசம்.

அடுத்த கட்டமாக, இந்த இருதலைக் கழுகு, யானைகளையே தூக்கும் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தால் எப்படி வலிமையுடன் இருக்கும் என சாகசத்தை விரிவாக்கிக் கொள்ளலாம். 

இந்த கற்பனை பறவை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டால் அரசுகள் தமது மக்களுக்கு கூறும் ஒரு செய்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது அந்த அரசு மிகுந்த கூர்மையானது, பலசாலி ஆனது. எதிரிகளை எங்கிருந்தாலும் கோழி குஞ்சுகளைப் போல விரட்டி விடுவோம் என்றும் கூறுவதாக!

கோயில்களில் அதாவது கடவுளின் வாகனமாக இதைப் பயன்படுத்தும்போது, கடவுள் இந்தக் கண்ட பேருண்ட பறவையைவிட வலிமையானவர், நமக்கு சிறந்த பாதுகாப்பு அளிப்பவர் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பண்டைய பைசாந்திய (Byzantine), ரோமன், ஸ்பானிஷ், ரஷ்ய, ஜெர்மன், பிரஞ்சு,  பல்கேரியப் பேரரசுகளில் இந்த இருதலை கழுகு சித்தரிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செர்பியா, அல்பேனியா, பின்லாந்து  இன்னும் பல நாடுகள் என இந்தக் கற்பனைப் பறவை கால் பதித்த (பறந்து மகிழ்ந்த) வரிசை நீண்டுகொண்டே போகிறது.

தென் அமெரிக்காவிலும் இருதலை கழுகின் சித்தரிப்பு உள்ளது. அங்கு சென்ற ஐரோப்பியர்கள் அதை அங்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். 

நாம் வானில் ஒரு விண்மீனைத் தேடும் போது, மெதுவாக மற்ற விண்மீன் திரள்களும் கண்களுக்குப் புலனாவது போல, கண்ட பேருண்டப் பறவைப் பற்றி தேடிக் கொண்டிருக்கும் போது, உலகின் பல பகுதிகளில் இருந்தும், சிலையாக, சிற்பமாக, ஓவியமாக, சின்னங்களாக, பெட்டிகளில் அலங்காரமாக,  துணிகளில் நூற்பு அலங்காரமாக, கடிகாரங்களில் சித்தரிப்பாக என அதனைப் பற்றிய விவரங்கள் வந்து கொண்டேயிருந்தன.

எல்லா இனிப்புகளும் தனக்கே வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தையைப் போல, அனைத்தையும் பகிரவே ஆசை. இருந்தாலும், முக்கியமானவற்றையே இங்கு பகிர்ந்துள்ளேன்!

இந்தக்  கற்பனைப் பறவையின் சித்தரிப்பில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. வெளிநாடுகளில், இதன் சித்தரிப்பு இருதலைப் பறவையாக மட்டுமே உள்ளது. 

இந்தியாவில், கண்ட பேருண்ட பறவையின் சித்தரிப்பு வெவ்வேறு வகைகளில் உள்ளது. 

  1. மனித உடலும் இரட்டைக் கழுகுத் தலைகளுடனும் இருப்பது. உதாரணம் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் சிற்பம்.  
  2. பறவை உடலும் பறவைத் தலைகளுடன் இருப்பது. உதாரணம் கெளதி ராமேஸ்வரர் கோயில் சிற்பம்.  
  3. ஒரு பறவையின் உடல், வேறு ஒரு பறவையின் தலைகள் கொண்ட அமைப்பும் உள்ளது. உதாரணம் தஞ்சை பெரிய கோயில் நந்தி மண்டபம் ஓவியம்.   
  4. பறவையின் உடல், கிளியின் தலை அல்லது  மயிலின் தலை அல்லது அன்னத்தின் தலையுடனும் கூட கண்ட பேருண்ட பறவை  காட்டப்பட்டுள்ளது.  

ஓரு சிலவற்றில் யானைகள், சிங்கங்கள் அல்லது பாம்புகளைத்  தூக்கியிருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கழுகு நம்முடன் வாழும் ஒரு பறவை.   இரு தலைக் கழுகின் சாத்தியக் கூறுகள் அறிவியலின்படி மிக மிக அரிது. மிக மிக அரிதாக இருதலை மனிதர்கள் இருப்பதைப் போல, இருதலைக் கழுகுகள் அரிதாக இருந்திருக்கலாம், இல்லாமலும் போயிருக்கலாம்.  

நேரில் காணக் கிடைக்காத ஒரு இருதலைப் பறவை என்ற கருத்து நம் சிற்பிகளால் பன்மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, அரசுகளால் ஆதரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்புகள், பண்டைய காலக் கலைஞர்களின் கலைச் சுதந்திரம், படைப்பாற்றல் மற்றும் கருத்துக்களை எளிய முறையில் சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தும் திறன், நம் முன்னோர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கட்டுமானத் துறையின் திறமைகளையும்  காட்டுகிறது. 

குரு நித்ய சைதன்ய யதி, "தங்களது கனவிலிருந்து இந்தியச் சிற்பிகள் சிற்பக்கலையை உருவாக்குகிறார்கள், இதற்கு ஆயிரமாண்டு வரலாறுண்டு, கட்டற்றுப் பெருகிய படைப்பு சக்தியின் வரலாறு அது" என்று கூறியதாக எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களின் மரபணுக்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது என்கிறது அறிவியல். இத்தகைய திறமை வாய்ந்த முன்னோர்களின்  கலைத் திறமை, படைப்பாற்றல் மரபணுத் தொடர்ச்சி மூலம் கொஞ்சமாவது நம்மிடம் இருக்குமல்லவா? இருக்கும் என்றே நம்ப நான் ஆசைப் படுகிறேன்.  அதனை மேம்படுத்த விழைகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?



 குறிப்புகள்

பொ.மு - பொது ஆண்டுக்குக் முன் - (கிமு)
பொ.பி - பொது ஆண்டுக்குக் பின் - (கிபி)
kya - 1000 years ago


References:

From Wikipedia:  இருதலைப்புள்கர்நாடக அரசு சின்னம்கண்ட பேரண்ட பட்சி வாகனம், முதலாம் சோமேசுவரன்,  Gandaberunda, Someshvara I, Nayakas of Keladi,  Flag_of_Albania#,   Coat of arms of Russia (Emblem of Russia),  Double-headed eagle

https://puratattva.in/balligavi-communal-harmony-exemplified-part-4/  - Bherundeshvara Pillar

https://karnatakatourism.org/keladi-rameshwara-temple/

ஆவுடையார் கோயில் ஓவியங்கள்

 ஹொய்சாள காலத்து நாணயம் – கண்ட பேருண்டப் பறவை

 விஜயநகர காலத்து நாணயங்கள் - கண்ட பேருண்டப் பறவை

 https://starofmysore.com/order-of-the-gandaberunda/

 Evoultion of Russian Emblem

 https://en.wikipedia.org/wiki/Hittites

 https://www.hittitemonuments.com/alacahoyuk/

Video - Hittites - Double headed bird sculpture from 6.05min onwards

https://www.jeyamohan.in/124517/ - குடோப்பி பாறைச் செதுக்கு ஓவியங்கள் (Kudopi Geoglyphs)

https://youtu.be/Neh9JwZb5cE?si=u1i2o-nKoS8u3m9I&t=337 - Gandaberunda rock painting, Arasikere Taluk

Video - கண்ட பேருண்டப் பறவை வாகனம்

https://tinyurl.com/Akshata-Murthy-Jewellery

from Tamil and Vedas blog post

https://www.hubert-herald.nl/TwoHeadedEagle.htm

https://archive.org/details/epigraphia_carnatica_vol7_myso/mode/2up


கண்ட பேருண்ட பறவை கூடுதல் சித்தரிப்புகள்

கண்ட பேருண்ட பறவை சித்தரிப்புள்ள HMT கடிகாரம்




ஆலயக்கலை பயிற்சி பற்றிய தகவல்கள்

https://unifiedwisdom.guru/event/temple-art

https://www.youtube.com/watch?v=y57Ybe9SM4g

https://unifiedwisdom.guru/