தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

வெள்ளி, 14 மார்ச், 2025

எல்லோரா – இந்துக் குடவரைகள்

 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில்,  குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது.  மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.  

சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து (பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும் வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

எல்லோராவில் 100க்கு மேற்பட்ட குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.

இங்கு

13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),

16 இந்து குடவரைகள் (எண்14-29),

5 சமணக் குடவரைகள் (எண் 30-34) உள்ளன.

இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான நீளத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின் வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக் கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம் திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது. ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால் தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின் முதல் குடவரை.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அஜந்தா சுவரோவிய தொகுப்புகளைப் புரிந்து கொள்ளல் – ஓரு முயற்சி

 படங்கள் பார்ப்பது என்பது பள்ளிப்பாட புத்தகங்களில் ஆரம்பித்து, நம்மைச் சுற்றி கண்ணில்படும் ஆலயங்கள் மற்றும் காலண்டர் ஓவியங்கள் வரை நமக்கும் பரிச்சயமானதே.  இதனால், அஜந்தா ஓவியங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் என நினைத்தால், நமக்குப் பரிச்சயமான புத்தர் ஓவியங்களைத் தவிர்த்து மற்றவைகளை உள்வாங்கிக் கொள்வது சற்று கடினமாகவேயிருக்கும்.  பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. சில ஆயத்தங்கள் மூலம் அதையும் எளிமைப் படுத்திக் கொள்ளலாம்.    அஜந்தா ஓவியத் தொகுப்புகளை முதன் முறையாகப் பார்க்கும்போது, அதில் பயிற்சி இல்லாத நான் அடைந்த தடுமாற்றம் போல மற்றவர்களும் அடைய வாய்ப்புள்ளது.

ஆதி நாட்களில் கதைகள், தொன்மங்கள், நிகழ்வுகள் எல்லாம் வாய் வழியாகவும், ஏடுகள் வழியாகவும் பகிரப்பட்டது. பாதுகாக்கப்பட்டது!

இதன் அடுத்த படியாக, காட்சி ஊடகம் பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவது ஒரு ன் அதிர்ச்சியே!  இதற்கு மிகச் சிறந்த உதாரணம்   ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முந்திய அஜந்தா சுவரோவியங்களே!  இவை புத்தர் காலத்து நிகழ்வுகளை, அவரது முந்தைய பிறப்புகளைச் சார்ந்த ஜாதகக் கதைகளை, தொன்மங்களை ஒரு ஓவியத் தொகுப்பாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஓருவகையில் தற்கால story boardன் முன்னோடி எனவும் கொள்ளலாம்.