தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

புதன், 30 ஏப்ரல், 2025

அஜந்தா – எல்லோரா குடவரைகள் - பௌத்த தெய்வங்கள்



1. அறிமுகம்

புத்தரைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவானதே. பௌத்த மதம் என்றாலே புத்தர் மட்டும்தான் மற்றும் அதன் முக்கியமான அம்சம் தியானம் என்பதே என் புரிதலாக இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது, போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர் மற்றும் பல புதிய பெயர்கள் வந்தன. அவை பற்றி இணையத்தில் தேடும் போது, இன்னும் அதிக கேள்விகளே எழுந்தன.

இந்து மரபில் பல தெய்வங்களின் வழிபாடு  இருப்பது போல, பௌத்தத்திலும் நிறைய ஆண், பெண் தெய்வங்கள், யக்‌ஷர்கள், யக்ஷிகள், கணங்கள், மிதுனர்கள், வித்யாதரர்கள் இருக்கின்றனர் எனத் தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

எங்கள் அஜந்தா எல்லோரா பயணம் பற்றி, ஆலயக்கலை ஆசிரியர் ஜெயகுமார் நடத்திய இணைய வழி அறிமுக வகுப்பு, பௌத்த மதத்தைப் பற்றிய வரலாறு, பண்பாடு மற்றும் நிறைய புரிதல்களைக் கொடுத்தது. 


புத்தர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொள்ளவில்லை. அன்பு, கருணை, நல்வழியில் நடத்தல் போன்ற பல்வேறு போதனைகளை அவர் முன் வைத்தார். அவர் உருவ வழிபாட்டை முன் வைக்கவில்லை. அவர் இறந்த பின் அவரது பாதங்களைக் குறிக்கும் ஓவியங்கள், சிற்பங்கள், த்ரிரத்னம் சின்னம், காலியான சிம்மாசனம், போதி மரம் மற்றும் ஸ்தூபி ஆகியவைகள் புத்தரைக் குறிக்கும் படிமங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவையும் மற்ற கொள்கைகளும் ஹீனயான பௌத்த மரபாக ஆதியில் ஆரம்பமாயிற்று. இதை தேரவாத மரபும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மரபு பாலி மொழியைப் பயன்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின் பௌத்தம் இந்தியாவின் சாங்கியம் மற்றும் பல்வேறு மரபுகளுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தியது. இது மகாயான பௌத்த மரபாக உருவாகி வந்தது. புத்தரைத் தெய்வ நிலையில் வழிபடும் உருவ வழிபாடும் மற்ற பிற தெய்வங்களும் இந்த மரபில் அமைந்தன. இந்த மரபு பெரும்பாலும் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்துகிறது.

திபெத்தில் கடைபிடிக்கப் படுவது தாந்ரீக மரபுகளைக் கொண்ட வஜ்ரயான பௌத்த மரபு. ஹீனயான, மகாயான, வஜ்ரயான மரபுக்களைத் தவிர வெவ்வேறு மாறுதல் கொண்ட பௌத்த மரபுகளும் உலகில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளன.

பௌத்த மரபு உயிர்களின் மறுபிறப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. புத்தர் தனது வெவ்வேறு பிறப்புகளில் (விலங்காக, சாதாரண மனிதனாக, அரசனாக) நல்வழியில் புத்த நிலையை நோக்கி நடத்திய வாழ்க்கைப் பயணத்தில், அவர் சந்தித்த சவால்களையும் கருணையுடன் நடந்து கொண்ட நிகழ்வுகளே ஜாதகக் கதைகள் எனப் படுகின்றன. தனது வெவ்வேறு பிறப்புகளில் புத்த நிலையை அடையும் பயணத்தில் இருக்கும் அவர் போதிசத்துவர் எனக் குறிப்பிடப்பட்டார். பிற்காலத்தில், புத்தத் தன்மையை அடையும் பயணத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் இது குறிப்பிடுவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சிலைகள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் புத்தர் மிக மிக எளிமையானவராகக் காட்டப் படுவார். போதிசத்துவர்கள் நன்றாக அலங்காரத்துடன் காட்டப்படுவர்.

சாக்கியமுனி, ததாகதர், பகவான், கௌதம புத்தர் என்றும் புத்தர் குறிப்பிடப்படுகிறார்.


2. போதிசத்துவர்கள்

பத்மபாணி, வஜ்ரபாணி, அவலோகிதேஷ்வர்(அவலோகிதர்) மற்றும் பல போதி சத்துவர்கள் பௌத்தமரபில் உள்ளனர். பெரும்பாலும் போதி சத்துவர்கள் மிகுந்த அலங்காரத்துடன் காட்டப்படுவார்கள். அவர்கள் நின்ற, அமர்ந்த நிலைகளில் காட்டப்படுவர். தனித்தோ, புத்தருடனோ அல்லது பிறருடனோ காட்டப் படுவர். புத்தருக்கு அருகிலோ அல்லது வாயிலின் இரு புறங்களிலுமோ அமைக்கப் படுவர்.

கையில் தாமரை மலரை வைத்திருப்பவர் பத்மபாணி போதிசத்வர். வஜ்ரத்தை வைத்திருந்தால் அவர் வஜ்ரபாணி போதிசத்வர்.

அஜந்தா குடவரை 1ல், கருவறைக்கு முன் உள்ள பத்மபாணி மற்றும் வஜ்ரபாணி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. 

 பத்மபாணி போதிசத்துவர்அஜந்தா குடவரை -1,
Photo credit – wikimedia.org












அவலோகிதேஷ்வர போதிசத்வர் நீண்ட காம்புடன் கூடிய தாமரை மலரை கையில் பிடித்திருப்பார். தலை அலங்காரத்தில் அவரது குருவான அமிதாப புத்தரின் சிற்பம் இருக்கும். இவர் கருணையின் வடிவமாக கருதப்படுகிறார்.

அவலோகிதேஷ்வர போதிசத்துவர்
எல்லோரா குடவரை 2 
Photo credit – photodharma.net













மேலே உள்ள படத்தில், அவலோகிதேஷ்வர போதிசத்துவர் நின்ற நிலையில் உள்ளார். வலது கை அபய முத்திரை. இடது கையில் மிக நீண்ட காம்புடன் கூடிய தாமரை மலர் (காம்பு நடுவில் சற்று உடைந்துள்ளது). தலையலங்காரத்தில் அமிதாப புத்தர். கீழே இரண்டு போதிசத்துவர்கள். மத்தியில் கைகளில் மலர் மாலை ஏந்திய பறக்கும் நிலையில் உள்ள கணங்கள்(யக்‌ஷர்கள்?) உள்ளனர். இவர்களுக்கு மேலே பறக்கும் வித்யாதரர்கள் உள்ளனர்.

அவலோகிதேஷ்வரர் இன்னும் வெவ்வேறு வடிவங்களிலும் உள்ளார். ஓரு சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

காதசமுக அவலோகிதேஷ்வரர்
Kanheri cave 41 – Photo credit – Puratattva.in













பதினொரு தலைகள் கொண்ட காதசமுக(Ekadasamukha) அவலோகிதேஷ்வரர் சிற்பம், பத்து தலை ராவணனை அல்லது தனது ஒன்பது தலைகளை சிவனுக்கு வெட்டியளிக்கும் ராவணனின் சிற்பத்தை எனக்கு நினைவு படுத்தியது!

நான்கு கைகள் கொண்டவர் சதுர்புஜ(Caturbhuja) அவலோகிதேஷ்வரர். இவர் எனக்கு நான்கு கரங்கள் கொண்ட இந்து சிற்பங்களை நினைவுபடுத்துகிறார். ஆயிரம் கைகள் கொண்டவர் சகஸ்ரபுஜ(Sahasrabhuja) அவலோகிதேஷ்வரர் எனப்படுகிறார். இந்த சித்தரிப்பு லடாக் மற்றும் கிழக்காசிய நாடுகளில் அதிகம் உள்ளது.

ஆயிரம் கரங்கள் கொண்ட போதிசத்துவர்
Lamayuru Monastery, Ladakh.  Photo credit: wikimedia.org
 















புத்தர் மற்றும் போதிசத்துவர்கள்
எல்லோரா குடவரை 10 – Photo credit – wikipedia












எல்லோராவின் குடவரை 10, ஒரு பௌத்த சைத்யம்(வழிபாட்டிடம்). இங்குள்ள ஸ்தூபியின் முன்பக்கம் இந்த அழகிய சிற்பத் தொகுப்பு உள்ளது. பத்ராசனம் என்னும் அமர்ந்த நிலையில்(ஒரு சில குறிப்புகளில் இது பிரலம்ப பாதாசனம் எனப்படுகிறது, Pralamba Padasana), கையில் தர்மசக்கர முத்திரையுடன், கண்கள் மூடி தியானத்தில் ஆழ்ந்த புத்தர் சிற்பம் உள்ளது. படத்தின் இடப்பக்கம், நீண்ட காம்புடன் கூடிய தாமரையை பிடித்துள்ள அவலோகிதேஷ்வர போதிசத்துவர் நின்றுள்ளார். எதிர்ப்புறம் வஜ்ரபாணி போதிசத்துவராக இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு மேல் உள்ள வளைவில், பறக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளவர்கள் வித்யாதரர்கள். உச்சியில் போதிமரம் காட்டப்பட்டுள்ளது.


3. தர்மசக்ரா பிரவர்தன புத்தர்

சாரநாத், வாரணாசிக்கு அருகில் இருக்கும் ஒரு மிகப் பழமை வாய்ந்த புத்த தலமாகும். வடமொழியில் மான்களுக்கு “சரபா” என்ற பெயரும் உண்டு. மேலும், சரபா என்ற தலைப்பில் ஒரு புத்த ஜாதகக் கதையுமமுண்டு. அஜந்தா குடவரைகளில் சரபா(Sarabha), ருரு(Ruru), மிருக(Mrga) போன்ற புத்தர் மானாகயிருந்த ஜாதகக் கதைகள் ஓவியக் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

புத்த கயாவில் போதி மரத்தடியில் ஞானம் அடைந்த புத்தர், சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் முதன் முதலாக தனது போதனைகளை வழங்கினார். புத்தர் தனது தர்மச்(தம்மம்) சக்கரம் என்னும் கருத்தை இங்கு பகிர்ந்தார் என நம்பப்படுகிறது. இதனை குறிப்புணர்த்தும் சிற்பங்கள் பௌத்த மரபில் உண்டு.

ர்மசக்ரா பிரவர்தன புத்தர்,
அஜந்தா குடவரை -8, Photo credit – Photodharma.net















மேலே உள்ள படத்தில், புத்தர் பத்மாசனத்தில் அமர்ந்து கண்கள் மூடி தியானத்தில் ஆழ்ந்துள்ளார். அவரின் கை தர்மச் சக்கர முத்திரையில் உள்ளது. அவருக்கு கீழே இரு மான்கள் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. மான்களுக்கு மத்தியில் நின்ற நிலையில் நம்மை நோக்கி உருண்டு வரும் நிலையில் ஒரு தர்மச் சக்கரம் காட்டப் பட்டுள்ளது

ர்மசக்ர முத்திரை,
அஜந்தா குடவரை -21,  
Photo credit – Photodharma.net










4. நாகராஜா

புத்தரை மற்றும் புத்த ஞானிகளைக் காப்பது நாகராஜாக்களின் கடமையெனப்படுகிறது. பௌத்த சிற்பத்தொகுதிகளில் நாகங்களின் சிற்பங்களும் காட்டப் பட்டுள்ளன.

புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி தவத்தில் இருக்கும் ஆரம்ப நாட்களில் பெரும் புயலுடன் மழை பெய்ந்தது. அப்போது பாதாள லோகத்தில் இருந்து முகலிந்தா (Mucalinda) என்ற நாகம் பூமிக்கு வந்து தனது உடலால் புத்தரை 7 சுற்றுகளாகச் சுற்றியும் தலைக்கு மேல் படம் விரித்தும் புத்தரைக் காத்தது என முகலிந்த மற்றும் லலிதவிஸ்தர சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. (Mucalinda Sutta, Lalitavistara Sutra).

இன்னும் சில நாகராஜக்கள் பௌத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாகராஜா,
அஜந்தா குடவரை -20,
Photo credit – Wikipedia














5. புத்தரின் மஹாபரிநிர்வாணம்

விஷ்ணுவின் கிடந்த நிலைச் சிற்பங்களை பார்த்திருந்த எனக்கு, புத்தரின் இந்தச் சிற்பம் அவரது நின்ற, அமர்ந்த சிற்பங்களைப் போன்ற ஒன்று என்ற ஒரு சாதாரண புரிதலே இருந்தது. எனது அஜந்தா எல்லோரா பயணத்தின் மூலம் இந்தச் சிற்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது. இது, புத்தர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் காட்சி. புத்தர் தனது 80ம்வயதில் குசிநகரில் பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு, தனது கடைசிப் பிறப்பினை முடித்தார். இதுவே மஹாபரிநிர்வாணம் எனப் படுகிறது.

இந்தச் சிற்பத் தொகுதியில், கண்மூடி படுத்துள்ள புத்தருக்கு கீழே அவரது சீடர்களும், அடியவர்களும் சோகத்துடன் இருக்கிறார்கள். மேற்பகுதியில், விண்ணில் தேவர்கள் வாழ்த்துக்களுடன், இவரது வருகைக்காக காத்திருப்பதாக காட்டப் பட்டுள்ளனர். 

புத்தரின் மஹாபரிநிர்வாணம் (24அடி சிற்பம்),
அஜந்தா குடவரை 26 -
Photo credit - Flickr -Shriram Rajagopalan










6. தாராதேவி, ஜம்பாலர்


தாராதேவி,
எல்லோரா குடவரை 2  
Photo credit – photodharma.net













தாராதேவி பெண் போதிசத்துவராகவும்அவலோகிதேஷ்வர போதிசத்வரின் பெண் வடிவமாகவும் கருதப் படுகிறார். ஒரு சில பௌத்த மரபில் வேறு விதமாகவும் கருதப் படுகிறார். அவரும் நீண்ட காம்புடன் கூடிய தாமரையை ஏந்தியவராகக் காட்டப்படுவார். அவர் தனியாகவோ அல்லது அவலோகிதேஷ்வரருடனோ காட்டப்படுவார்.

ஜம்பாலர், அவலோகிதேஷ்வர போதிசத்துவர், தாராதேவி,
எல்லோரா குடவரை 10 –
Photo credit – overtheplanet.com










மேலே உள்ள படத்தில்,  இடது புறம் உள்ளவர் ஜம்பாலர்செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். ஜம்பாலரின் தனியான சிற்பம் குடவரை 2ல் உள்ளது. செல்வத்தின் தெய்வம் என்றவுடன் இந்து மரபில் செல்வத்தின் அதிபதியான குபேரன் நினைவுக்கு வருகிறார். நடுவில் அவலோகிதேஷ்வர போதிசத்வர் அமர்ந்துள்ளார். அவர் தலையணியில் அமிதாப புத்தரின் உருவம் உள்ளது. கையில் நீண்ட காம்புடன் கூடிய தாமரை உள்ளது. வலப்பக்கம்தாராதேவி பத்மத்தின் மேல் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஒரு கை, கால் முட்டியருகில் வரத முத்திரையில் உள்ளது. இன்னொரு கையில் நீண்ட காம்புடன் கூடிய தாமரையைப் பிடித்துள்ளார்.

ஜம்பாலர், எல்லோரா குடவரை 2, 
Photo credit – Jeyakumar

 
















7. ஹாரிதி

ஜம்பாலர் மற்றும் ஹாரிதி, எல்லோரா குடவரை 8  
Photo credit – myindiantravel.blogspot.com















ஜம்பாலர், பஞ்சிகா என்றும் அழைக்கப்படுகிறார். மேலே உள்ள படத்தில் அவர் தனது துணைவியான ஹாரிதி (Hariti) உடன் அமர்ந்துள்ளார். ஹாரிதியின் தொடையில் ஒரு குழந்தை அமர்ந்துள்ளது. ஹாரிதியைப் பற்றி பலவேறு விதமான சுவாரஸ்யமான தொன்மங்கள் பௌத்த இலக்கியங்களில் உள்ளன.

ஹாரிதி ஒரு யக்‌ஷியாகப் பிறந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்று தனக்கும் தன் குழந்தைகளுக்குமாகக் கொன்று தின்று விடும் பழக்கம் கொண்டவர். இதனால் துன்புற்ற தாய்மார்கள், புத்தரிடம் முறையிடுகிறார்கள். ஹாரிதியின் இளைய குழந்தையைப் புத்தர் ஒரு நாள் அழைத்துச் சென்று மறைத்து வைத்துவிடுகிறார். தனது பிரியமான குழந்தையைக் காணாத ஹாரிதி எல்லா இடங்களிலும் தேடுகிறார். குழந்தை கிடைக்காது போகவே கடைசியில் அவர் புத்தரிடம் போய் முறையிடுகிறார். அதற்கு புத்தர், ஒரே ஒரு குழந்தை காணாமல் போனதற்காக இவ்வளவு வருந்துகிறார் என்றால், குழந்தைகளை இழந்த நூற்றுக்கணக்கான தாய்மார்களின் துயர் எவ்வளவாக இருக்கும் என ஹாரிதியிடம் கேட்கிறார். தன் தவறை உணர்ந்த ஹாரிதி, புத்தரிடம் சரணடைந்து நல்வழி பெறுகிறார். இவ்வாறு யக்‌ஷி(பூதம்) நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு அவர் உயர்ந்தார். அவரது சிலைகளில், குழந்தையை ஏந்தியவராக அல்லது குழந்தைகளுடன் இருப்பவராகக் காட்டப்படுகிறார். குழந்தைகளைக் காப்பவராக, பெண்களுக்கு குழந்தைப் பேறு அளிப்பவராக கருதப்படுகிறார். ஜம்பாலருடன் சேர்ந்து செல்வத்தைக் காப்பவராகவும் கருதப்படுகிறார்.

ஜம்பாலரும் ஹாரிதியும் இருக்கும் சிற்பம், அஜந்தா குடவரையிலும் உள்ளது.


      8. அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர்

கருணையின் தெய்வமாக வழிபடப்படும் அவலோகிதேஷ்வர போதிசத்துவரருக்கு காக்கும் கடவுள் என்னும் சிறப்பும் பௌத்த மரபில் உள்ளது. நிலங்களிலும், கடல்தாண்டியும் பயணிக்கும் வணிகர்களின் பாதுகாவலராக அவர் கருதப்படுகிறார். வணிகர்களின் எட்டு முக்கிய அபாயங்களான 

  1. காட்டுத்தீ
  2. சிங்கம் மற்றும் விலங்குகளின் தாக்குதல்
  3. யானைகளின் தாக்குதல், 
  4. நாகங்கள் மற்றும் விஷப் பிராணிகளின் ஆபத்து
  5. பூதங்கள் மற்றும் தீய ஆவிகளின் ஆபத்து
  6. திருடர்களின் தொல்லை, 
  7. சிறை அல்லது அடிமையாக பிடித்துச் செல்லல் 
  8. படகு/கப்பல் கடலில் மூழ்குதல் 

போன்றவை அஷ்டமஹாபயங்கள் (Astamahabhaya) எனப்படுகின்றன. இவற்றிலிருந்து வணிகப் பயணிகளைப் பாதுகாப்பவர் அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர் எனப் படுகிறார்.

இதை விளக்கும் ஒரு சிற்பத் தொகுதி குடவரை 4ல் உள்ளது.

அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர் மற்றும் தாராதேவி,
எல்லோரா குடவரை 4
– Photo credit – elloracaves.org











வாயிலின் இடதுபுறம் உள்ள அவலோகிதேஷ்வரரின் உருவம் சிதைந்துள்ளது.  வலது புறம் தாராதேவி நின்றுள்ளார். சுவரின் இடது கோடியில் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று சிற்பத் தொகுப்புகள் உள்ளன. முதலாம் தொகுப்பில், கொளுந்து விட்டெரியும் தீயும், அருகில் வணங்கிய நிலையில் இருவரும், அவர்களுக்கு அருகில் அபய முத்திரை காட்டும் அவலோகிதேஷ்வரரும் காட்டப் பட்டுள்ளனர். அதன் கீழே உள்ள இரண்டாம், தொகுப்பில் கையில் வாளுடன் தாக்க வருபவரை (திருடன்?) நாம் காண முடிகிறது. மூன்றாம் தொகுப்பின் இடதுபுறம் சிதைக்கப்பட்டுள்ளது. இவற்றின் கீழே இருந்திருந்த மற்ற சிற்பத் தொகுப்புகள் சிதைக்கப் பட்டுள்ளன. 

அஷ்டமஹாபய கருத்தை விளக்கும், முழுமையான சிற்பத் தொகுதிகள் அஜந்தா குடவரைகளிலும், சத்ரபதி சாம்பாஜி நகர் (ஔரங்காபாத்) குடவரையிலும் உள்ளன. அவற்றில் ஒன்றை கீழே கொடுத்துள்ளேன்.

அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர்,  
சத்ரபதி சாம்பாஜி நகர் (Aurangabad)  குடவரை 7,
 Photo credit - Pia Brancaccio














இதில் அபய முத்திரையுடன் பத்மத்தின் மேல் அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர் நின்று கொண்டுள்ளார். இடது கையில் தரையிலிருந்து அவரது தோள் வரைக்கும் நீளும் காம்புடன் கூடிய பத்மத்தைப் பிடித்துள்ளார். தலையலங்காரத்தில் அமிதாப புத்தர். அவரைச் சுற்றி எட்டு பயங்களை(அபாயங்களை) சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. 

  1. படத்தின் இடப் பக்கம், அவரது வலது கையில் அருகில் கொளுந்து விட்டெரியும் தீ காட்டப்பட்டு அதன் அருகில் வணங்கும் நிலையில் இரு அடியவர்கள் உள்ளனர். அவர்களை நோக்கி கால்களை மடக்கி பறந்த நிலையில், ஒரு கை பத்மத்தை ஏந்தியிருக்க இன்னொரு கையில் அடியவரைக் காக்கும் அபய முத்திரையுடன் அவலோகிதேஷ்வரர் காட்டப்பட்டுள்ளார். 
  2. இதன் கீழே அடுத்த தொகுப்பில் கையில் ஆயுதத்துடன் தாக்கவரும் திருடன்(கொள்ளையன்), வணங்கும் அடியவர் மற்றும் காக்கும் அவலோகிதேஷ்வரர் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.
  3. இதன் கீழே சிறைப் பிடிக்கப்படுவது அல்லது அடிமையாகப் பிடிக்கப்படுவது பற்றிய சித்தரிப்பு உள்ளது
  4. இதன் கீழே ஒரு பாய்மரக்கப்பலில் இருந்து வணங்கும் நிலையில் மூன்று அடியவர்கள், அபயம் அளிக்கும் அவலோகிதேஷ்வரர் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்
  5. வலதுபுறம், பத்மத்தின் அருகில், ஒரு சிங்கம், வணங்கும் அடியவர் மற்றும் அவலோகிதேஷ்வரர் காட்டப்பட்டுள்ளனர்.
  6. இதன் கீழே, படம் விரித்த பாம்பு, வணங்கும் நிலையில் இரண்டு அடியவர்கள், அபயம் அளிக்கும் அவலோகிதேஷ்வரர் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்
  7. இதன் கீழே, காட்டைக் குறிக்க மரங்கள், துரத்தும் யானை, வணங்கும் நிலையில் இரண்டு அடியவர்கள், அபயம் அளிக்கும் அவலோகிதேஷ்வரர் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்
  8. இதன் கீழே, ஒரு பூதம், வணங்கும் நிலையில் இரண்டு அடியவர்கள், அபயம் அளிக்கும் அவலோகிதேஷ்வரர் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.


9. மஹாமயூரி

இந்து மரபில் மயிலுடன் இருக்கும் சுப்பிரமணியரின் சிற்பங்களை, படங்களை அதிகம் பார்த்ததுண்டு. பௌத்த மரபிலும் மயில் ஒரு தெய்வத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த பெண் போதிசத்துவரின் பெயர் மஹாமயூரி!

மஹாமயூரி, எல்லோரா குடவரை 6, 
Photo credit – செந்தில்














மேலேயுள்ள படத்தில், தோகை விரித்துள்ள ஒரு மயில் இடது பக்கம் உள்ளது (அதன் தலை சிதைக்கப்பட்டுள்ளது) அருகில் மஹாமயூரி நின்று கொண்டிருக்கிறார். அவர் ஞானத்தின் தெய்வமாகவும், காக்கும் தெய்வமாகவும் முக்கியமாக பாம்பு மற்றும் இதர விஷ விலங்குகளிடமிருந்து பாதுகாப்பளிப்பவராகவும் கருதப்படுகிறார். இத் தெய்வம் இப்போதும் வழிபாட்டில் உள்ளதா எனத் தேடும் போது, இவரின் மந்திர ஜபம் கொண்ட காணொளி கிடைத்தது. மேலும் இவரை வழிபடும் சடங்கு கொண்ட ஒரு தைவான் காணொளியும் கிடைத்தது! 

இதைப் போன்ற இன்னொரு மஹாமயூரி சிற்பத் தொகுப்பு எல்லோரா குடவரை 8ல் உள்ளது.


10. மஞ்சுஸ்ரீ

மஞ்சுஸ்ரீ என்ற பெயரைக் கேட்டதும், ஒரு பெண் தெய்வம் என நினைத்தேன்! மஞ்சுஸ்ரீ ஒரு ஆண் போதிசத்துவர். இவர் பிரக்ஞையின் அதிபதி எனப்படுகிறார். அவரது சிற்ப அமைப்பில் வலது கையில்  வாள், இடது கையில் தாமரை மொட்டு மற்றும் புலியின் மேல் அல்லது புலித் தோலின் மேல் அமர்ந்தவராக காட்டப் படுகிறார். ஒரு சில இடங்களில் கையில் புத்தகம்(ஏடு) உள்ளது. அவரது கை வாள், அறியாமையை அகற்றி ஆழ்நிலை ஞானத்தை உணர்தலையும், சிங்கத்தின் மேல் அமர்தல் மனதை அடக்கி வெற்றி கொள்வதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

மஞ்சுஸ்ரீ, எல்லோரா குடவரை 10, 
Photo credit – pngtree.com














மேலே உள்ள படத்தில், முதல் வரிசையில் கடைசியாகவும், இரண்டாவது வரிசையில் முதலாவதாகவும் இருப்பது மஞ்சுஸ்ரீ. இடது கையில் தாமரை மொட்டு, வலது கை வரத முத்திரை. கழுத்து மாலையில் இரண்டு புலி நகங்கள் உள்ளன. புலியின் மேல் அமர்ந்ததைக் காட்டாததால், அதைக் குறிப்புணர்த்த புலி நகங்கள் கொண்ட பதக்கத்தை காட்டியுள்ளார்கள் என நான் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் சற்று தெளிவில்லாததால், இதைப் போன்ற அமைப்புடன் கூடிய பாலப் பேரரசின் (Pala Empire) 9ம் நூற்றாண்டு மஞ்சுஸ்ரீ சிற்பத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இதில் கழுத்தில் உள்ள புலி நகப் (Vyaghranakha) பதக்கம் தெளிவாக உள்ளது.

Manjusri (bodhisattva of wisdom), India, Pala dynesty, 9th century,
stone at  Honolulu Academy of Arts – Photo Credit - Wikipedia














கிழக்காசிய சிற்பங்களில் பெரும்பாலும் வாளுடனும் ஒரு சில இடங்களில் புலியின்மேல் அமர்ந்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளார். 

Mañjusri figure from Jago temple, 14th century Java, Indonesia,
Photo Credit -  wikipedia














இவரைத் தற்போது வழிபடும் வழக்கம் இருக்கிறதா எனத் தேடியபோது, சிக்கிம் மற்றும் லடாக் பௌத்த மடாலங்களில் இவரது உருவ சிலையும் வழிபாடும் இருப்பதை அறிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது!


மஞ்சுஸ்ரீ, மஞ்சுஸ்ரீ கோயில், அல்ஜி மடாலயம், 
Photo Credit -  luczanits.net
























லடாக்கில், அல்ஜி (Alchi Monastery) என்ற மடாலயத்தில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சும்ஸேக்(Sumtsek) கோயிலில் மிகப் பெரிய சிற்ப, ஓவியத் தொகுப்புகள் உள்ளன. இதன் இடப்புற சுவற்றின் நடுவில் 15 அடி அவலோகிதேஷ்வர போதிசத்துவர் சிற்பமும் இவரின் இரு பக்கங்களில் மற்ற சித்தரிப்புகளும் உள்ளன. மத்திய சுவரில் 15 அடி மைத்ரேய போதிசத்துவர் சிற்பமும் இவரின் இரு பக்கங்களில் மற்ற சித்தரிப்புகளும் உள்ளன, வலதுபுற சுவரில் 15 அடி மஞ்சுஸ்ரீ சிற்பமும் இவரின் இரு பக்கங்களில் மற்ற சித்தரிப்புகளும் உள்ளன.

இங்கு தனியாக ஒரு மஞ்சுஸ்ரீ கோயிலுமுள்ளது (Jampe Lhakhang). இதில் ஒரு சதுர அமைப்பில், நான்கு மஞ்சுஸ்ரீ சிலைகள் உள்ளன. பொன்னிறம், வெண்மை நிறம், செந்நிறம் மற்றும் நீல நிறம் என்ற நான்கு வேறு நிறங்களில் இச்சிலைகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. 


11. மைத்ரேய புத்தர் 

எனக்கு இதுவரை தெரிந்த ஒரே புத்தர், சித்தார்த்தர் என்னும் அரச குமாரனாகப் பிறந்து, அரச வாழ்வை உதறித் தள்ளி பின்னர் மெய்ஞானம் அடைந்த கௌதம புத்தர். புதிதாக மைத்ரேய புத்தர் என்றால் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. பௌத்த நூல்களின்படி புத்தர், பூமியில் கடைசியாக பிறப்பதற்கு முன் தூசித தேவலோகத்தில் இருந்ததாகவும், அங்கிருந்து வந்து பூமியில் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. 

அடுத்ததாக பூமிக்கு வரப்போகிற புத்தர், மைத்ரேய புத்தர் எனப்படுகிறார். (The root of his name is the Sanskrit word maitri, meaning friendliness, loving-kindness) பௌத்த மரபின்படி அவர் தற்போது தூசித தேவலோகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

அவர் புத்தராக வரப்போகிறார் என்பதால் எளிய துறவுக்கோலத்திலும், தற்போது போதிசத்துவராக உள்ளார் என்பதால் அலங்காரங்களுடன் கூடிய போதிசத்துவ வடிவத்திலும் காட்டப்படுகிறார். பெரும்பாலும் கையில் கமண்டலம் இருக்கும். ஒரு சில சித்தரிப்புகளில் தலையலங்காரத்தில் ஸ்தூபி காட்டப்படும். 

சிரிக்கும் புத்தர் எனப்படுவரும் மைத்ரேயர் எனக் கருதப்படுகிறார்.

லடாக்கின் பௌத்த மடாலயங்களில் மைத்ரேயரின் சிலையும் வழிபாடும் உள்ளது. மேலும் லடாக்கின் ஒரு சில இடங்களில் மலைக்குன்றுகளில் மைத்ரேயரின் சிற்பங்கள் உள்ளன.  கார்ஸே கர், முல்பெக், அபாத்தி(Kartse Khar, Mulbekh, Apati village)  என்ற இடங்களில் மலைக்குன்றுகளில், கையில் கமண்டலத்துடனும் அலங்காரத்துடமனும் மிக உயரமாக அமைக்கப்பட்ட மைத்ரேய போதி சத்துவர் சிற்பங்கள் உள்ளன. 

இவற்றைப் பற்றிய விவரங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது “நூறு நிலங்களின் மலை” என்ற பயண நூலில் உள்ளது. 

எல்லோரா குடவரை 11, 12ல் உள்ள மைத்ரேயரின் சிற்பங்களும் அவற்றின் படங்களும் தெளிவாக இல்லை. லடாக்கில் உள்ள மலையில் செதுக்கப்பட்ட சிற்பத்தைக் கீழே கொடுத்துள்ளேன். 

மைத்ரேயர் (30அடி உயரம்), முல்பெக்(Mulbekh), லடாக், 
Photo courtesy – Wikimedia.org















12. பிற சிறப்புச் சித்தரிப்புகள்

மேலும் எல்லோரா குடவரை 12ல் தியான புத்தர்கள், மனுச புத்தர்கள், ரக்த அவலோகிதேஷ்வர போதிசத்துவர், பெண் போதிசத்துவர்களான சுண்டா, பிக்ருதி மற்றும் சில சிறப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிய முயலும் போது எனக்கு தெளிவு கிடைக்கவில்லை. எனவே அவற்றைப் பற்றிய குறிப்புகளை இங்கு பகிர முடியவில்லை.

அஜந்தா, எல்லோரா புத்தக் குடவரை சிற்பங்கள் பற்றி படிக்கும் போது பௌத்த தெய்வங்கள் கிழக்காசிய மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் கோபமான வடிவத்திலும் மற்றும் அமைதியான வடிவத்திலும் அமைக்கப் பட்டுள்ளனர் என்ற புரிதலும் கிடைத்தன. கோடு வரைந்தது போன்ற மிக மெல்லிய மீசையுடன் உள்ள ஒரு சில சீனப் புத்தர் சிற்பங்களை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாகவே இருக்கிறது!  


13. நிறைவாக

பெரும்பாலான அஜந்தா, எல்லோரா குடவரைகளில் சிற்பங்களும், ஓவியங்களும் கரி படிந்த வடிவத்துடனேயே காணப்படுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோயில்களும், குடவரைகளும் ராணுவக் கிடங்குகளாகவும், தங்குமிடங்களாகவும் இருந்தன என்பதை அவர்களது சில ஆவணங்களிலும், புகைப்படங்களிலும் காணலாம்.

எல்லோரா குடவரை 5, 
Photo credit - Thomas and William Daniell – Year 1816











மேலேயுள்ள படத்தில், மண்டபத்தின் நடுவில் ஒரு துணி மூட்டை(?) இரண்டு தடிகள் மற்றும் ஒரு சுருட்டி வைத்தது போன்ற பொருள் தெரிகிறது. இடப்புறம் தூண்களுக்கு அருகில் இரண்டு பேர் அமர்ந்துள்ளனர். வலது புறம் ஒரு ஆண், விறகுகளை வைத்து சமைத்துக் கொண்டிருக்கிறார். அடுப்பின் புகை, விதானம் முழுவதும் வரை பரவி ஒரு ஓவியத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது. 

அலைந்து திரியும் பௌத்த துறவிகளுக்கான தங்குமிடமாக அரசர்களாலும், புரவலர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைகள் துறவிகளுக்கும், வணிகப் பயணியருக்கும் உறைவிடமாக, வழிபாட்டிடமாகப் பண்டை காலத்தில் பேணப்பட்டது.  அரசர்கள், துறவிகள் மற்றும் பௌத்தம் இங்கிருந்து போனபின்னும் எந்தக் கதவுகளும் இல்லாத இக் குடவரைகள் திறந்தே இருந்தன. பஞ்சங்கள் மலிந்த பின்னாட்களில், வாடிய சாதாரண மக்களின் தங்குமிடமாகவும் அவை பயன்பட்டன என இந்த (புகைப்)படத்தில் இருந்து விளங்குகிறது. அந்த எளியோர்களின் வரவை அங்கு அமர்ந்திருக்கும் கருணை வடிவான புத்தரும், போதி சத்துவர்களும் கண்டிப்பாக ஆட்சேபித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

14. கூடுதல் படங்கள்


தனது 9 தலைகளை சிவனுக்கு அரிந்து
கொடுத்த ராவணன்,
எல்லோரா குடவரை 16,
கைலாசநாதர் கோயில் சுற்று மண்டபம்,
Photo credit -  Wikimedia.org



























நாகராஜா அவரது துணைவியுடன்,
அஜந்தா குடவரை,
Photo credit -  Wikimedia.org


















அஷ்டமஹாபய அவலோகிதேஷ்வரர்,
அஜந்தா குடவரை 4 –
Photo credit – wikimedia.org










மஹாமயூரி,  எல்லோரா குடவரை 8, 
Photo credit -  Wikimedia.org














ஹாரிதி, ஜம்பாலா,  அஜந்தா குடவரை 2, 
Photo credit -  Wikimedia.org























ஹாரிதி, மெண்டுட் கோயில், Mendut, Indonesia, 
Photo credit -  Wikimedia.org








புத்தரின் மஹாபரிநிர்வாணம் – அஜந்தா குடவரை 26, 
Year 1880 by Burgess - Photo credit -  Wikimedia.org









ஒற்றை இதழ், மூன்று இதழ்கள், ஐந்து இதழ்கள் வஜ்ரம்
Photo credit – Kyoto National Museum, metmuseum.org,
buddhaweekly.com respectively














திரிசூலம், வஜ்ரம், தர்மசக்கரம் அடங்கிய திரிரத்ன சின்னம், 
Photo credit -  Wikipedia











சாஞ்சி ஸ்தூபி 1 – வடக்கு தோரண வாயில்,
உச்சியில் இரண்டு திரிரத்னா சின்னங்கள் உள்ளன, 
Photo credit -  Wikimedia.org















15. உசாத்துணை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~