ரிஷப குஞ்சர சிற்பங்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்கும் போது, அவை முதன் முதலில் பாதாமி சாளுக்கியர் காலத்தில் அய்கொளேயில்(கர்நாடகா) செதுக்கப்பட்டன எனத் தெரிந்து கொண்டேன். பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சி, அவர்களது கட்டடக்கலை, சிறப்புமிக்க பாதாமிக் குடவரைகள், பாதாமி சாளுக்கியர்களின் காலத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களுக்கிடையில் நிகழ்ந்த போர்கள் என விரிவான சித்திரம் கிடைத்தது. (இந்தப் பதிவுடன் தொடர்புடைய முந்தைய பதிவு - ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்)
பாதாமி சாளுக்கியர்களின் கலை படைப்புகளின் உச்சம் எனக் கருதப்படும் பாதாமி, அய்கொளே, பட்டடதக்கல் போன்ற இடங்களில் உள்ள குடவரைகள் மற்றும் கட்டடங்களைப் பற்றி படிக்கையில் ஒரு சில அம்சங்கள் வியப்பாக இருந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
கூரை அமைப்புகள்
பெரும்பாலான பழைய கற்கட்டடங்களின் கூரைகள் சமதளத்துடன் இருப்பதையே பார்த்துள்ளேன். முன்பெல்லாம் கோயில் மண்டபங்களுக்குள் நடக்கையில் மேலே சென்று கற்பலகைகளை எப்படி வைத்து கூரைகள் அமைத்துள்ளார்கள் என்றும் எப்படி மழை நீர் உள்ளே வராதபடி அமைத்துள்ளனர் எனப் பார்க்கும் ஆவல் இருந்தது.
முதன் முதலில், கற்கட்டடங்களின் கூரைகள் சரிவாக அமைந்திருப்பதைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்டவைகள் பாதமி, அய்கொளே மற்றும் பட்டதகல்லில்(கர்நாடக மாநிலம்) அதிகம் காணப்படுகின்றன.
பாதாமிச் சாளுக்கியர் காலத்தில், மண்டபங்களின் கூரைகள், கற்பலகைகளைக் கொண்டு சாய்வான தளமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில கட்டடங்களில் அந்த கூரையின் கற்பலகைகளின் இணைப்புகளின்மேல், மரக்கட்டை அமைப்பில்(மேல் பகுதியில் வளைவாக) செய்யப்பட்ட கற்களும் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன! கீழே கொடுக்கப்பட்டுள்ள அய்கொளே வளாகத்திலுள்ள லாட்கான் கோயில், இந்த கூரை அமைப்புக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் என நான் நினைக்கிறேன்.
 |
அய்கொளே கோயில்கள் வளாகம் - (Ladkhan temple) 8ம் நூற்றாண்டு - Photo credit: karnatakatourism.org |
இது லாட்கான் கோயில் என தற்போது அழைக்கப்பட்டாலும், இது பாதாமிச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டதே! பின்னாட்களில், இதனை வசிப்பிடமாகவோ அல்லது அலுவலகமாகவோ கொண்டிருந்த லாட்கான் என்பவரின் பெயரால் இது குறிப்பிடப்படுகிறது.
கஜபிருஷ்ட வடிவம்
பெரும்பாலான கோயில்கள் செவ்வக வடிவிலேயே இருக்கும். ஒரு செவ்வகத்தை மேம்படுத்தி, அதன் பின்பக்கத்தை வளைவாக அமைப்பது ஒரு சில இடங்களில் செய்யப்பட்டு உள்ளது.
 |
துர்கா(கோட்டை) கோயில் (Durga Temple) 8ம் நூற்றாண்டு, அய்கொளே கோயில்கள் வளாகம், Photo credit: – karnatakatourism.org |
மேலே படத்தில் உள்ளது அய்கொளே வளாகத்தில் உள்ள ஒரு கோயில்.
இக்கோயிலின் பின்பக்கம், ஒரு யானையின் பிருஷ்டத்தைப் போல வளைவாக அமைந்துள்ளது. இது தூங்கானை மாடம் அல்லது கஜபிருஷ்ட வடிவம் என அழைக்கப் படுகிறது. மேலும் அதன் சுற்றுப் பிரகார மண்டபக் கூரை சரிவாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெவ்வேறு இடங்களிலும் கோயில்கள் சில இந்த அமைப்பில் உள்ளன. உதாரணமாக, மாமல்லபுரத்தில் நகுல சகாதேவ ரதம் இந்த அமைப்பில் உள்ளது.
மேலே படத்தில் உள்ளது துர்கா கோயில் என தற்போது அழைக்கப்பட்டாலும் இது துர்க்கைக்கான கோயில் அல்ல. இதன் அருகில் பண்டைய கோட்டை இருந்ததாலோ, இஸ்லாமிய அல்லது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், இதன் கூரையின் மேல் கற்கள் உயரமாகக் குவிக்கப்பட்டு போர்க்கோட்டையாக அல்லது காவல் மாடமாகப் பயன்பட்டதாலோ கோட்டை என அர்த்தம் கொண்ட துர்க்(துர்கா) எனத் தற்காலப் பெயர் கொண்டுள்ளது. (உதாரணங்கள்: தமிழ்நாட்டிலுள்ள சங்ககிரித்துர்க்கம், போளுதிம்மராயன் துர்க்கம், வீரபத்ர துர்க்கம்).
 |
அய்கொளே – துர்கா(கோட்டை) கோயில் (Durga Temple), 1855 வருடம் Photo credit: – wikipedia |
ஒரே கல்லால் செய்யப்பட்ட ஏணிகள்
கோயில்களில் மாடி அமைப்புகள் ஆச்சரியம் என்றால், அங்கு செல்வதற்கு ஒரே கல்லால் செய்யப்பட்ட ஏணிகள் அதைவிட ஆச்சரியம்.
 |
அய்கொளேயின் குந்திகுடி ( Kuntigudi or Kontigudi), 8ம் நூற்றாண்டு, ஓரே கல்லில் செய்யப்பட்ட கல் ஏணி – Photo credit: karnatakatravel.blogspot.com |
 |
ஓரே கல்லில் செய்யப்பட்ட கல் ஏணி – Photo credit: karnatakatravel.blogspot.com |
மேலே உள்ளவை அய்கொளேயில் உள்ள ஒரு கோயிலின் மாடிக்குச் செல்வதற்கு ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள ஏணியைக் காட்டும் புகைப்படங்கள்!
முருகன் சிற்பங்கள்
முருகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன் என்ற பெயர்களில் தமிழகம் முழுக்க தனியாகவும், வள்ளி தெய்வானையுடனும், சிவன், பார்வதி, விநாயகர் என்றும் குடும்பமாகவும் முருகக் கடவுள் வழிபடப்பட்டாலும், கர்நாடகாவில் அவரது வழிபாடு அவ்வளவு பரவலவாக இல்லை. கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் மட்டும் சுப்பிரமண்யா என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
6 முதல் 8ம் நூற்றாண்டுகளில் ஆட்சியில் இருந்த பாதாமி சாளுக்கியரின் காலத்தில் முருகனின் சிற்பங்கள், கல்வெட்டு மற்றும் பட்டயங்களில் அவரைப் பற்றிய குறிப்புகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 |
அய்கொளே ஹுச்சுமல்லிகுடி கோயிலின் கூரைச் சிற்பம் – (6-8 நூற்றாண்டு) Photo credit: wikkimedia commons |
மேலே உள்ள அய்கொளே ஹுச்சுமல்லிகுடி கோயிலின் முகமண்டப கூரையில் உள்ள சிற்பத்தில், முருகன் மயில்மேல் பறப்பதாகவும் அவரைச் சுற்றி கந்தர்வர்கள் பறப்பதாகவும் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மயில் தோகையின் வேலைப்பாடு, கார்த்திகேயனின் மகுடம், காதணிகள், கை, கழுத்து நகையலங்காரங்கள், முகத்தின் அமைதி என வடிவாக உள்ளது. மேல்பகுதியில் இரு கந்தர்வர்கள் முருகனுக்கு அணிவிப்பதற்காக கைகளில் மாலைகளுடன் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
 |
பாதாமி குடவரை -1 , சுவர் சிற்பம் – (6-8 நூற்றாண்டு) Photo credit: wikkimedia commons |
பாதாமி குடவரை -1ல் மயில் மேல் அமர்ந்துள்ள முருகன் காட்டப்பட்டுள்ளார். இந்த மயிலின் வேலைப்பாடு அழகாகவும், நேர்த்தியாகவும் முந்தையதிலிருந்து வேறுபட்டும் உள்ளது.
 |
பாதாமி குடவரை -3 , கூரை சிற்பம் – (ஆறாம் நூற்றாண்டு) Photo credit: wikkimedia commons |
 |
பாதாமி குடவரை -3 , கூரை சிற்பம் – (ஆறாம் நூற்றாண்டு) Photo credit: wikkimedia commons |
பாதாமி குடவரை -3ன் மண்டபக் கூரையில் அன்னப் பறவை மேல் பிரம்மாவும் அவரைச் சுற்றி இந்திரன் (யானையின் மேல்), வருணன் (மகரத்தின் மேல்), கார்த்திகேயன் (மயில் மேல்) மற்றும் அக்னி (ஆட்டின் மேல்) உள்ள இந்தச் சிற்பம் உள்ளது.
 |
கார்த்திகேயன் பெயர் குறிப்பிட்டுள்ள வக்கலேரிப் பட்டயம் – இரண்டாம் கீர்த்திவர்மன் - பொ.பி. 757 |
பல பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகளில் கார்த்திகேயன் மற்றும் பிற கடவுள்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நம் முன்னோர்கள் நமக்கு பல்வேறு படைப்புலக வியப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள். இது ஒரு தொடர் நிகழ்வல்லவா!
கூடுதல் படங்கள்
 |
சாய்வான கூரை அமைப்பு - பட்டடக்கல் விருபாக்ஷா கோயில் (8ம் நூற்றாண்டு) – Photo credit – Youtube channel Adventure Judge |
 |
கஜபிருஷ்ட கட்டட அமைப்பு - மாமல்லபுரம் நகுல சகாதேவ ரதம் (7ம் நூற்றாண்டு) – Photo credit – whereabouts.in |
 |
Photo credit –wikipedia.org |