தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2024

ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்

இந்தத் தொடரின் முந்தைய பதிவுகள்


இந்தப் பதிவில்



1. ரிஷப குஞ்சரம்


ரிஷப குஞ்சரம் என்பது ரிஷபமும் யானையும் சேர்ந்த ஒரு சிறப்புச் சித்தரிப்பு. இதில் இரண்டின் தலைகளும் இணைந்திருக்கும். நாம் ரிஷபத்தின் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த இணைந்த தலை ரிஷபத்தின் தலையாகத் தெரியும். நாம் யானை உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தத் தலை யானையின் தலையாகத் தெரியும். மிக நுட்பமான மற்றும் தந்திரமான சித்தரிப்பு. இதன் சிறப்புகளை இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

இந்தியா மற்றும் இலங்கையில் இது சிலைகளாக, சிற்பங்களாக, ஓவியங்களாக மற்றும் பண்டைய அரசாங்க நாணயங்களாகவும் காணக் கிடைக்கிறது. ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இருக்கும்போது ஒரு சிற்பத்தைத் தேடுவது சிரமமே. இந்த ரிஷப குஞ்சர சிற்பத்தைச் சற்று சுலபமாக கண்டுபிடிக்க, குறிப்பாக எங்கிருக்கின்றன என்பதையும், இருக்குமிடத்தின் வரலாற்றுப் பின்புலத்தையும் முடிந்தவரை சேகரித்தேன்.


2. ரிஷப குஞ்சரச் சிற்பம்,  பாதாமி குடைவரை – 1, பாதாமி(வாதாபி), கர்நாடகா


ஏறத்தாழ ஒரு நேர்கோட்டில், முப்பத்தைந்து கிமீ தொலைவுக்குள், பாதாமி, பட்டடக்கல் மற்றும் அய்கொளே உள்ளன. இவை காஞ்சியிலிருந்து தோராயமாக எழுநூறு கிமீ தொலைவில் உள்ளன.

பாதாமி ஆறாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. இவர்கள் பாதாமி அல்லது வாதாமிச் சாளுக்கியர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

பாதாமியில் ஏராளமான கற்கோயில்களும், கோட்டைகளும் இருந்தாலும், தற்காலத்தில் பாதாமி அதன் குடைவரைக் கோயில்களுக்காகப் புகழ்பெற்றுள்ளது. ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் அமைக்கப்பெற்று, பல்வேறு பேரரசுகளின் காலத்திலும் பொலிவுடன் விளங்கியது. பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சிகளில் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டு மக்களின் வசிப்பிடங்களாக மாறியது. இப்பொழுது நாம் பார்க்கும் வகையில் புணரமைக்கப்பட்டுள்ளதற்கு நாம் இந்திய தொல்லியல்துறைக்கே கடமைப்பட்டுள்ளோம்.

பாதாமிக் குடவரை வளாகத்தில் மொத்தம் நாலு குடைவரைகள் உள்ளன. இவை மணற்கற்களால்(sandstone) ஆனவை. இங்குள்ள குடவரைகள், மண்டபங்கள், கருவரைகள், அலங்கரிங்கப்பட்ட தூண்கள், சுவர் மற்றும் கூரைச் சிற்பங்களுடன் கூடிய கலைக்கூடங்களாக விளங்குகின்றன. ஒரு குடவரை சமணத்துக்கும் மற்ற மூன்று குடைவரைகள் இந்து மதத்துக்குமாக அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் புலிகேசியின் தந்தை கீர்த்திவர்மன். கீர்த்திவர்மன் தனது சகோதரர் மங்களேசனை பாதாமியில் குடவரைப் பணிகளுக்கு நியமித்திருந்ததை, மூன்றாம் குகையில் உள்ள கல்வெட்டு நமக்குத் தெரிவிக்கிறது. 1-11-578ல் பௌர்ணமி தினத்தன்று, இந்தக் குடவரைக் கோயில் பணிகள் முடிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன என்பதும் இக்கல்வெட்டு மூலம் நமக்குத் தெரிகிறது.

மற்ற குடைவரைகள் அமைக்கப்பட்ட காலத்தை பற்றிய உறுதியான தரவுகள் இல்லை. அவற்றின் அமைப்பு, சிற்ப அமைதிகளின்படி, அவை பாதாமிச் சாளுக்கியரின் ஆரம்பகால அமைப்புகள் எனக் கருதப்படுகிறது.

இந்த பெரிய வளாகத்தில், ஒரு சிறிய ரிஷபகுஞ்சரத்தை எங்கு தேடுவது?  இது குடைவரைக் கோயில்-1ன் முகப்பில் உள்ளது!
பாதாமி குடவரை-1 – Photo credit : Wikimedia Commons
















இந்தப் படத்தில் குடைவரைக் கோயில்-1 மற்றும் மலையின் உச்சியில் உள்ள கோட்டைச் சுவரின் சில பகுதிகள் தெரிகின்றன.
ரிஷப குஞ்சரம், பாதாமி குடவரை-1
– Photo credit : Wikimedia Commons





















இந்தக் குடைவரையின் முகப்பின் இடதுபுறத்தில் ஒரு துவாரபாலகரின் சிலை இருக்கிறது. அதன் கீழே, நம்முடைய ரிஷபகுஞ்சர சிற்பம் உள்ளது.


ரிஷப குஞ்சரம், பாதாமி குடவரை-1 – Photo credit : Youtube channel Sudeesh Kottikal
















இதை ஒரு கேலிச்சித்திரம் என ஒதுக்க உறுதியான காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனென்றால், இந்த வளாகத்தில் வேறு எந்த கேலிச்சித்திர சிற்பங்கள் இல்லை. மாறாக, சிவ விஷ்ணு இணைப்பைக் குறிக்கும் ஹரிஹரன் சிற்பங்கள் நிறைய உள்ளன. எனவே இந்த ரிஷபகுஞ்சர சிற்பம் சிவ விஷ்ணு இணைப்பைப் குறிப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்! இதைப் பற்றிய விவரங்களை இதன் முந்தைய பதிவில் இங்கு படிக்கலாம்.

3. ரிஷப குஞ்சரச் சிற்பம்,  அய்கொளே (Aihole), கர்நாடகா


அய்கொளே, ”இந்தியப் பாறை கட்டிடக்கலையின் தொட்டில்” என அழைக்கப்படுகிறது. இங்கு கட்டட வேலைகள் 6ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல்வேறு பாணிகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை நாம் இப்போதும் பார்க்க முடிகிறது. இங்கு ஏறத்தாழ 125 கோயில்களும் சில குடவரைகளும் அமைக்கப்பெற்றுள்ளன.

இது மலப்பிரபா(Malaprabha river) நதிக்கரையில் அமைந்துள்ளது. அய்கொளே ஆரம்ப கால சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. முதலாம் புலிகேசி, தலைநகரை பாதாமிக்கு மாற்றிக் கொண்டார்.

அய்கொளேயின் குந்திகுடி அல்லது கோண்டிகுடி ( Kuntigudi or Kontigudi), தொகுப்பில் நான்கு கோயில்கள் உள்ளன. அய்கொளேயின் பரிசோதனை முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இங்கு ஒரு கட்டடத்தின் வெளிப்பகுதியில் மேற்கூரைக்குப் போக வசதியாக ஏறத்தாழ பதிமூன்று அடி உயரமுள்ள ஒரே கல்லாலேயே செய்யப்பட்ட ஏணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது!

ஓரே கல்லில் செய்யப்பட்ட கல் ஏணி – Photo credit: karnatakatravel.blogspot.com
















இங்குள்ள ஒரு கோயிலின் வலதுபுற நுழைவுத் தூணில் ரிஷபகுஞ்சரச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இது முதலில் செய்யப்பட்டதா அல்லது பாதாமிக் குடவரை-1ல் உள்ளது முதலில் செய்யப்பட்டதா எனச் சொல்ல என்னிடம் சரியான ஆதாரங்கள் இல்லை. இரண்டும் சமகாலத்தில் செய்யப்பட்டும் இருக்கலாம்

ரிஷபக் குஞ்சரச் சிற்பம் இருக்கும் தூண்
– Photo credit: karnatakatravel.blogspot.com













அய்கொளே ரிஷபக் குஞ்சரச் சிற்பம்
- Photo credit: karnatakatravel.blogspot.com
















இதில் யானையின் கழுத்து மற்றும் வயிற்று பட்டை அலங்காரங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தின் நான்குபுறத்தில் இருக்கும் பட்டைகளில் (Border) நான்கு வெவ்வேறு அலங்காரங்கள் உள்ளது ஒரு வித்தியாசமாகவும் விநோதமாகவும் உள்ளது!

4.  ரிஷப குஞ்சரச் சிற்பம்,  விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல், கர்நாடகா


பண்டைய காலத்தில் இந்த ஊர், ரக்தபுரா(Raktapura - “city of red”) மற்றும் கிசுவோலல்(Kisuvolal - “valley of red soil”) என்றும் அழைக்கப் பட்டது.
இது மலப்பிரபா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்றிலிருந்தே இங்கு கோயில்கள் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இந்த வளாகத்தில் பல இந்துக் கோயில்களும், ஒரு சமணக் கோயிலும், பல சிறிய கோயில்களின் எச்சங்களும் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது விருபாக்‌ஷா கோயிலாகும். இது இரண்டாம் விக்ரமாதித்ய அரசரின் அரசி லோகமகாதேவியால் ஏறத்தாழ பொ.பி 740ல் கட்டப்பட்டது. இது இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை வென்றதைச் சிறப்பிக்க கட்டப்பட்டது. காஞ்சி படையெடுப்பு பற்றிய மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சி கைலாசநாதர் கோயிலால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். விருபாக்‌ஷா கோயிலின் சில அம்சங்களில் காஞ்சி கைலாசநாதர் கோயிலின் தாக்கம் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் மிக அழகிய சிற்பத் தொகுதிகள் கொண்ட 58 தொடர்ச்சியான சிறிய கோயில்கள் உள்ளன. அது போலவே விருபாக்‌ஷா கோயிலிலும் சுற்றுப் பிரகாரமும், அதில் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தொடர்ச்சியான சிறு கோயில்களும் உள்ளன. துரதிஷ்டவசமாக, சுற்றுப் பிரகாரமும் அதன் சிறு கோயில்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

பட்டடக்கல் விருபாக்‌ஷா கோயில்
– Photo credit – Youtube channel Adventure Judge














இந்தக் கோயிலின் மண்டபத் தூண்களே கண்ணுக்கு விருந்து படைக்கின்றன. மற்றவற்றைச் சொல்ல வேண்டுமா!

பட்டடக்கல் விருபாக்‌ஷா கோயில் மண்டபத் தூண்
 – Photo Credit : turuhi.com





















கீழே ஒரு வளைவு. அதற்கு இரு விளிம்புக் கோடுகள். அதற்குள் சிற்ப வேலைப்பாடு. மேலே ஒரு நீள் உயர பட்டையில் கொடி வேலைப்பாடுகள். அதன்மேல் ஒரு சதுர வடிவுக்குள் சிற்ப வேலைப்பாடுகள். உச்சியில் திரும்பவும் அலங்காரத்துடன் கூடிய ஒரு வளைவுக்குள் சிற்ப வேலைப்பாடுகள். இப்படி பதினெட்டு தூண்கள் மண்டபத்தில் உள்ளன. இந்த வடிவமைப்புள்ள தூண்கள் சில அய்கொளெ கோயில்களிலும் உள்ளன. இங்கு மிகச் சிறப்பாக உள்ளன.

இப்படிப்பட்ட ஒரு தூணில்தான் ரிஷபக் குஞ்சரச் சிற்பம் உள்ளது.

பட்டடக்கல் விருபாக்‌ஷா கோயில் ரிஷப குஞ்சரம்
– Photo Credit : Facebook
















இதில் ரிஷபத்தின் கழுத்து அலங்காரம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. யானையின் வயிற்றைச் சுற்றியுள்ள கயிறும் தெரிகிறது.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில், இந்த ரிஷபக் குஞ்சரச் சித்தரிப்பு பல்லவர்காலக் குடைவரைகளிலோ, கோயில்களிலோ காணப் படவில்லை. முதல் சித்தரிப்பு 12ம் நூற்றாண்டில், சோழர்கால தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ளது.

5. பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்


பாதாமி(வாதமி) என்றதும் எழுத்தாளர் கல்கியின் “சிவகாமியின் சபதம்” நாவலும், அதில் வரும் சாளுக்கியப் புலிகேசி, மகேந்திரவர்ம பல்லவர், நரசிம்மவர்ம பல்லவர், பரஞ்ஜோதி, நாகநந்தி, ஆயனர் மற்றும் சிவகாமி நம் நினைவுக்கு வருகிறார்கள்.

சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பல போர்கள் நடந்துள்ளன. எதற்காக என யோசிக்கும் போது, தற்காலங்களில் பெரிய நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்க முயற்சிப்பது நினைவுக்கு வந்தது. 2018ல் பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனத்தை வாங்க அமேசான்(Amazon) மற்றும் வால்மார்ட்(Wallmart) நிறுவனங்கள் போட்டி போட்டன. முடிவில் பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியது. இதில் உயிரிழப்புகளோ பொருள் இழப்புகளோ இல்லை. மிஞ்சினால் சில பல வேலை இழப்புகள் உண்டு.

ஆனால் பேரரசுகள் போரிடும் போது, உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் அதிகம். இருந்தாலும் பெரிய அரசுகள் பிறநாட்டுடன் போரிடுவது தோற்ற நாட்டின் செல்வங்களையும், படைகளையும் இணைத்துக்கொண்டு இன்னும் வலிமையான பேரரசாகலாம் என்ற ஆசையாக இருக்கலாம்; அதன் மூலம் அதிக பாதுகாப்பும், செல்வங்களும், புகழும் கிடைக்கும் என்பதற்காகவும் இருக்கலாம்.

போர்கள் வேண்டாம் என்ற கொள்கையுடன் அரசாளும் அதிர்ஷ்டம் அசோகருக்கு மட்டுமே வாய்த்தது. போர்கள் வேண்டாம் என்று இருந்த சில அரசர்களை அண்டை நாட்டு அரசர்கள் விட்டுவைக்கவில்லை.

ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முந்திய நிகழ்வுகள் இவை. இந்தப் பேரரசுகள் ஆண்ட கால விவரங்கள் இவற்றைப் புரிந்து கொள்ள உதவலாம்.

பிற்காலப் பல்லவர்களின் ஆட்சிக் கால அட்டவணை (பொ.பி)
1. சிம்மவிஷ்ணு 575 - 600
2. முதலாம் மகேந்திரவர்மன் 600–630
3. முதலாம் நரசிம்மவர்மன் 630–668

4. இரண்டாம் மகேந்திரவர்மன் 668–670
5. முதலாம் பரமேஸ்வரவர்மன் 670–695
6. இரண்டாம் நரசிம்மவர்மன் 695–728
7. இரண்டாம் பரமேஸ்வரவர்மன் 728–731
8. இரண்டாம் நந்திவர்மன் 731–795
9. தந்திவர்மன் 795–846, முன்றாம் நந்திவர்மன் 846–869, நிருபதுங்கவர்மன் 869–880, அபராஜிதவர்மன் 880–897


பாதாமிச் சாளுக்கியர்களின் ஆட்சிக் கால அட்டவணை (பொ.பி)
1. ஜெயசிம்மா 500-520, ரணராக 520-540, முதலாம் புலிகேசி 540–566, முதலாம் கீர்த்திவர்மன் 566–597, மங்களேசன் 597–609
2. இரண்டாம் புலிகேசி 609–642
3. பல்லவர் ஆட்சி 642 - 655
(மற்றும் புலிகேசியின் மகன்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கலாம்)
4. முதலாம் விக்கிரமாதித்யா 655–680
5. வினயாதித்யா 680–696
6. விஜயாதித்யா 696–733
7. இரண்டாம் விக்கிரமாதித்யா 733–746
8. இரண்டாம் கீர்த்திவர்மன் 746–753  

(இந்தப் பதிவில் வரும் முக்கிய அரசர்கள் இந்த அட்டவணையில் அழுத்தமான எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளது.)

பொ.பி 600 – 630 களில் பல்லவ நாட்டை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன், இசை, இலக்கியம், குடவரைக் கோயில்கள், நல்ல நிர்வாகம் என அமைதியாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் போது, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்து வருகிறார். போருக்குத் தயாராக இல்லாத மகேந்திரவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசியின் பெரும் படையை சந்திப்பது சாதகம் இல்லை என அவர்களை திசை திருப்பும் அல்லது களைப்படையச் செய்யும் நோக்கில், காஞ்சிக் கோட்டையை மூடி விடுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு சாளுக்கியப் படை பாதாமி திரும்புகிறது.

பாதாமிக்கு அருகில் இருக்கும் அய்கொளெயில் மெகுத்தி குன்றின் மீது உள்ள ஒரு சமணக் கோயிலில் (Meguti Jain temple) பொ.பி 634ல் பொறிக்கப்பட்டுள்ள இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டில் அவர் காஞ்சியை வென்றதாக பொறிக்கப்பட்டுள்ளது.

புலிக்கேசியின் இந்தக் கல்வெட்டும், கோட்டைக்குள் இருக்க வேண்டிய சங்கடங்களும் ஒருவேளை பல்லவர்களுக்கு அவமானமாகப் பட்டிருக்கலாம். பின்னர் மகேந்திரவர்ம பல்லவனின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பொ.பி 642 வாக்கில் பாதாமியை வென்று ”வாதாபி கொண்டான்’ என்ற பட்டப் பெயர் சூட்டிக்கொண்டார். இவ்வெற்றியை பாதாமியில் ஒரு மலைப்பாறையின் சரிவில் கல்வெட்டாக பொறித்துள்ளான். ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள் பாதாமி பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

நரசிம்மவர்ம பல்லவனின் பாதாமிக் கல்வெட்டு பொ.பி 642
– Photo credit – wikimedia commons




















நரசிம்மவர்ம பல்லவனின் பாதாமிக் கல்வெட்டுக்கு முன் ஒரு மண்டபம்
– photo credit – google maps





















அதன் பிறகு புலிகேசியின் மூன்றாம் மகன் விக்ரமாதித்யன் அரசனாகிறார். வெவ்வேறு ஆட்சியாளர்கள் காலத்திலும் பல்லவ சாளுக்கிய போர்கள் நடந்துள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு பாதாமியிலிருந்து,  இரண்டாம் புலிகேசியின் பேரனின் பேரன் இரண்டாம் விக்ரமாதித்யன் (ஆட்சி ஆண்டுகள் 734 - 45) காஞ்சிக்கு படையெடுத்து வந்து வென்றுள்ளார். காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு சென்ற அவர் அதன் அழகால் பெரிதும் ஈர்க்கப்பட்டு,  ராஜசிம்மேஸ்வரத்தின் செல்வங்களைக் ”கண்டு மகிழ்ந்து” கோயிலின் செல்வங்களை கோயிலுக்கே விட்டுவிட்டேன் என அங்கு பொறித்துள்ள பழைய கன்னட மொழியில் உள்ள தனது  கல்வெட்டில் கூறியுள்ளார். (கைலாசநாதர் கோயிலின் அசல் பெயர் ராஜசிம்மேஸ்வரம்)

கல்வெட்டிலுள்ள வாக்கியங்கள் கீழே.


இந்தக் கல்வெட்டின் வாசிப்பைக் கேட்க இங்கு சொடுக்கவும்.

இது முகமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ள ஒரு சிறிய கல்வெட்டு. இந்த தூணுக்கு அருகில் பின்னாளில் ஒரு புதிய மண்டபத்தின் சுவர் எழுப்பப்பட்டதால் இந்த கல்வெட்டை படிப்பது மிக சிரமமே. இந்த கல்வெட்டு பதிவு எபிகிராபிகா இண்டிகா தொகுப்பு 3ல் உள்ளது. இச்சிறிய கல்வெட்டில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டு அரசர் காஞ்சிக்கு வந்து அதில் உள்ள கோயிலில் ஒரு கல்வெட்டு பொறிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. கோயிலை சுற்றி பார்த்து ஒரு தோதான இடத்தை தேர்வு செய்து என்ன பொறிப்பது என முடிவு செய்து அதை அதற்கான பண்டிதரிடம் தயாரிக்கச் செய்து, பிறகு ஒரு சிற்பி அதை அங்கு பொறிக்க வேண்டும். அப்படி பார்த்தால் இதனை இலகுவாக செய்வதற்கு தக்க வகையில் அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வுகளின் பல்வேறு சாத்தியக் கூறுகளை வரலாற்று அறிஞர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் தனது ”பல்லவர் வரலாறு” என்று நூலில் விளக்கமாக கூறியுள்ளார்.

கதை இத்துடன் முடியவில்லை, சாளுக்கிய அரசர் இரண்டாம் விக்ரமாதித்யனுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர் அவரது மகன் இரண்டாம் கீர்த்திவர்மன். இவர் ஒரு போரில் வெற்றி பெற்று, பீமா நதிக்கரையில் பந்தர் கவதே (Bhandharkavathe, Solapur District, Maharastra) என்ற இடத்தில் படைகளுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ரீ தோசி ராஜா (சிற்றரசராக இருக்கலாம்) என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வேதங்களில் புலமை பெற்ற மாதவசர்மா என்பவருக்கு சில கிராமங்களை தானம் கொடுத்துள்ளார். அந்தக் கிராமங்கள், ஹங்கல் (Hangal, Karnataka) பகுதிகளில் இருந்ததாக யூகிக்கப்படுகிறது. இந்த தானத்தைப் பதிவு செய்ய ஒரு செப்புப் பட்டயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சரி இந்த பட்டயத்துக்கும் பல்லவர்களுக்கும் என்ன சம்பந்தம்?  நான் பள்ளியில் படிக்கும்போது வரலாற்று வகுப்புகளில் கொடுக்கப்பட்ட விவரங்கள் எல்லாம் கணிதம், அறிவியல் போல அறுதியானது என நம்பியிருந்தேன். அண்மைக்காலங்களில் இந்திய வரலாற்றைப் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்தியாவில் யாரும் இதன் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை எழுதி வைக்கவில்லை. வெவ்வேறு இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள், கிடைத்த பட்டயங்கள், இலக்கியக் குறிப்புகளின் தகவல்களிருந்து புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுவது போல இந்திய வரலாறு வெவ்வேறு தகவல்களால் பொருத்தி உருவாக்கப் பட்டுள்ளது என்ற புரிதலை அடைந்தேன். இன்னும் நிறைய புள்ளிகள் கோலத்தில் இணையாமல் உள்ளன. அந்த வகையில் இந்த தானப்பட்டயம் முக்கியமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் அதனை நிர்வகித்த தலைமையாசிரியர்கள் பட்டியலை ஆண்டு விவரங்களுடன் அலுவலப் பலகையில் எழுதி வைத்துள்ளதைப் பார்த்துள்ளேன். அதுபோல, இந்தத் தானப் பட்டயத்தில் முதலாம் புலிகேசியிலிருந்து இரண்டாம் கீர்த்திவர்மன் வரையிலான ஒவ்வொரு அரசர் பெயரும் அவர்களின் சிறப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் புலிகேசியிலிருந்து வெவ்வேறு அரசர்களின் காஞ்சிப் படையெடுப்பையும் இது தெரிவிக்கிறது. முக்கியமாக இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை வென்று, கைலாசநாதர் கோயில், பிற கோயில்கள் மற்றும் மக்களுக்குத் தானங்கள் வழங்கினார் என்ற தகவல்களும் இதில் உள்ளன. முடிவாக, இத்தகைய சிறப்பு வாய்ந்த சாளுக்கியப் பரம்பரையில் வந்த இரண்டாம் கீர்த்திவர்மன் மாதவசர்மாவுக்கு கிராமங்களைத் தானம் கொடுத்ததைப் பற்றிய விவரங்கள் உள்ளன. (இந்த பட்டயத்தில் உள்ள முழு விவரங்களையும் இங்கே படிக்கலாம்)

இதிலிருந்து பார்க்கையில் இரண்டாம் விக்கிரமாதித்யன் ஒரு தனித்துவமான அரசனாக தெரிகிறான். இப்படி படை எடுத்துச் சென்று வென்ற நாட்டிற்கே தானங்கள் அளிப்பதா?

காஞ்சி கைலாசநாதர் கோயில் அடித்தளம் மற்றும் மிகச் சிலபகுதிகள் கருங்கற்களாலும் (granite) சிற்பங்களும் ஏனைய பகுதிகளும் மணற்கற்களாலும் (sandstone) கட்டப்பட்டது. சிற்பங்களுக்குமேல் சுண்ணம் பூசப்பட்டு கோயில் முழுவதுமாக வண்ணம் பூசப்பட்டிருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போதும் ஒரு சில இடங்களில் அந்த சுண்ணப்பூச்சையும் வண்ணப்பூச்சையும் காணலாம். படையெடுப்பின்போது கோயில் கட்டப்பட்டு ஏறத்தாழ முப்பது வருடங்களே ஆகியிருக்கும் என யூகிக்கப்படுகிறது. புதுப் பொலிவுடன், அது எவ்வளவு அழகாகக் காட்சியளித்திருக்கும்! இரண்டாம் விக்கிரமாதித்யனின் மனமாற்றம் காஞ்சியின் சிறப்பால் நிகழ்ந்ததா அல்லது கைலாசநாதர் கோயிலின் அழகால் நிகழ்ந்ததா!

பிரிட்டிஷார்கள் ஒவ்வொரு கல்வெட்டுக்கும், பட்டயங்களுக்கும் ஒரு பெயரும், எண்ணும் கொடுத்து ஆவணப்படுத்தும் ஒரு நல்ல முறையை ஆரம்பித்து வைத்துள்ளனர். அதன்படி, இந்தப் பட்டயத்தின் பெயர் “வக்கலேரிப் பட்டயம்” எண் “ Kℓ 63”.

இரண்டாம் கீர்த்திவர்மன், பொ.பி. 757ம் ஆண்டில், மகாராஷ்டிரா பகுதியில் இருந்து கொண்டு கர்நாடகாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்களை தானம் செய்ததை செப்புப் பட்டயத்தில் பொறிக்க ஆணையிடுகிறார். கர்நாடகாவின் தென்பகுதியில் உள்ள கோலார் வட்டத்தில் உள்ள வக்கலேரி என்ற ஊரில் இது கிடைக்கிறது. ஹங்கல் அல்லது தலைநகர் பாதாமியில் இருந்து 400-500கிமீ தொலைவில் இருக்கும் வக்கலேரிக்கு இந்தப் பட்டயம் எப்படி வந்தது? ஒருவேளை தானம் பெற்ற மாதவசர்மா சந்ததியினர் வக்கலேரிப் பகுதிகளுக்கு பின்னாட்களில் குடிபெயர்ந்து இருக்கலாம். அவர்கள் இதைத் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்திருக்கலாம். அல்லது வேறு வழிகளில் இந்தப் பட்டயம் வக்கலேரியை அடைந்திருக்கலாம்!

இந்தப் பட்டயம் கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. வக்கலேரிக் கிராமத்தில் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஒரு விவசாயி இதனைக் கண்டெடுத்துள்ளார். அவரிடமிருந்து நாலு அணா கொடுத்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவர் வாங்கியிருக்கிறார். பி. எல். ரைஸ், வக்கலேரி பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த போது அவரிடம் இந்தப் பட்டயத்தைக் காட்டியிருக்கிறார். பெஞ்சமின் லூயிஸ் ரைஸ்(Benjamin Lewis Rice or B. L. Rice), பிரிட்டிஷ் காலத்திய மைசூர் மாநில தொல்லியல் துறையின் தலைவராக இருந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி . இப்படியாக பொ.பி. 757ல் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டயம் ஆயிரம் வருடங்கள் கழித்து 1800களில் பி. எல். ரைஸ் கைக்கு வந்து, அதை அவர் ஆவணப்படுத்தி, இப்போதும் நாம் அதை வாசிக்கக்கூடிய அதிர்ஷ்டம் கூடியுள்ளது!

இரண்டாம் விக்ரமாதித்யனின் படையெடுப்பு நிகழ்ந்தபோது, பல்லவ நாட்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் ஆட்சியில் இருந்தார். அப்போது பல்லவ நாட்டில் நிலவிய  அரசியல் குழப்பங்களாலால்,  இரண்டாம் விக்ரமாதித்யனின் காஞ்சி முற்றுகை சாத்தியமாயிற்று என்று சில வரலாற்று ஆசிரியர்கள்  கருதுகிறார்கள்.  கைலாசநாதர் கோயிலைக் கட்டியது ராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன்.  இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த, இவரது மகனாகிய இரண்டாம் பரமேசுவரவர்ம பல்லவன்,  சில வருடங்களிலேயே இறந்ததாகக் கருதப்படுகிறது. இவருடன் சிம்மவிஷ்ணுவில் ஆரம்பித்த பல்லவ பரம்பரை முடிவுக்கு வருகிறது. இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு குழந்தைகள் இல்லாமலோ அல்லது மகன் எனக் கருதப்படும் சித்திரமாயன் மிக இளையவனாகவோ அல்லது ஆட்சிக்குப் பொருத்தமற்றவனாகவோ இருந்திருக்கக்கூடும். எனவே அவர் ஆட்சிக்கு வரவில்லை.

பிற்காலப் பல்லவ மரபு, சிம்மவிஷ்ணுவின் ஆட்சியாண்டு பொ.பி 575ல் ஆரம்பிக்கிறது. சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மன். பீமவர்மனின் பரம்பரையில் வந்தவர் இரண்டாம் நந்திவர்ம பல்லவன். இவர் காஞ்சியைச் சேர்ந்தவர் இல்லை. இவர் காஞ்சியின் அரசனானதும் ஒரு தனிக்கதை.

பல்லவ நாட்டுக்கு பாண்டிய, சாளுக்கிய நாடுகளிலிருந்து அபாயம் இருப்பதால், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், ஒரு புதிய அரசனைத் தேடுகிறார்கள். பல்வேறு தேடுதல்களுக்குப் பிறகு பீமவர்மனின் பரம்பரையில் வந்த இரண்யவர்மனைச் சென்றடைகிறார்கள். அவரது மற்ற மகன்கள் ஒத்துக்கொள்ளாதபோது, அவரது 12 வயதான மகன் சம்மதிக்கிறார். காஞ்சிக்கு வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவன் என்ற பட்டப் பெயருடன் அரசுப் பொறுப்பேற்றுக்கொண்டதை காஞ்சியின் வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பக் காட்சிகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் மூதாதையர் எங்கு ஆண்டனர் என எனக்குச் சரியாகத் தெரியவில்லை. விக்கிப்பீடியா மற்றும் இணையத் தகவல்கள் அவர்கள் கம்போடியாவில் ஆண்டனர் எனத் தெரிவிக்கின்றன. இது உண்மையென்றால், தூரதேசத்தில், வேறு கலாசாரச் சூழலில் பிறந்து வளர்ந்து, இந்தியா வந்து பொறுப்பேற்றுக்கொள்ளச் சம்மதித்த அவரின் துணிச்சலைப் பாராட்டியே வேண்டும். இது உண்மையில்லை என்றாலும் ஒன்றும் குறையில்லை.

இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில்தான் இரண்டாம் விக்கிரமாதித்யன் படையெடுத்து வந்தான். இது பொ.ஆ 733-735க்குள் நடந்திருக்கலாம் என்றும் அப்போது இரண்டாம் நந்திவர்ம பல்லவனுக்கு 28லிருந்து 33 இருக்கலாம் என டாக்டர். மா. இராசமாணிக்கனார் தனது “பல்லவ வரலாறு” நூலில் கூறுகிறார்.

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் ஆட்சிக் காலம் 65 ஆண்டுகள் என்பதால் இரண்டாவது விக்ரமாதித்யனின் படையெடுப்பால் அவரது அரசாட்சிக்கு பாதிப்பு எதுவும் வரவில்லை எனத்தெரிகிறது. அதே சமயம், நமக்கு மேலும் பல கலைச் செல்வங்கள் கிடைத்துள்ளன.

இரண்டாம் விக்கிரமாதித்தியனின் காஞ்சி வெற்றியைக் கொண்டாட அவருடைய இரண்டு பட்டத்தரசிகளான லோகமகாதேவி, திரிலோகமகாதேவி பட்டடக்கல்லில் தற்போது விருபாக்க்ஷா கோயில் மற்றும் மல்லிகார்ஜுனா கோயில் எனப்படும் இரு சிறப்பான கோயில்களை கட்டியுள்ளனர். முக்கியமாக விருபாக்க்ஷா கோயிலில் கைலாசநாதர் கோயிலின் சில அம்சங்கள் உள்ளன.

இரண்டாம் கீர்த்திவர்மனுக்குப் பிறகு, சாளுக்கிய நாடு ராஷ்டிரகூடர்களின் ஆட்சியின்கீழ் வந்து பாதாமிச் சாளுக்கியர்களின் ஆட்சி முடிவுபெற்றது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சோழர்கள் வலிமை பெற்று பல்லவப் பேரரசும் மறைந்தது. பல்லவர்களும் பாதாமிச் சாளுக்கியர்களும் மறைந்தாலும், காலத்தில் அழியாத கலைச்செல்வங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

ஆச்சரியமாக, இந்த இரண்டு பேரரசுகளுக்கும் பொதுவானதாக பல சிறப்பம்சங்கள் உள்ளன.

  1. குடவரைக் கோயில்கள், கற்கோயில்கள் என ஒரு புதிய கலைப் புரட்சியே உருவாகியுள்ளது. பல்லவ குடவரைகள், கற்றளிகள் மற்றும் முக்கியமாக யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் வளாகம் நம்மிடம் உள்ளது. அது போலவே சாளுக்கியர்கள் அய்கொளே (Aihoḷe), பாதாமியின் குடவரைகள், கற்றளிகள் மற்றும் முக்கியமாக யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டடக்கல் வளாகமும் நம்மிடம் உள்ளது!
  2. புத்தத் துறவியும், குருவுமான, புத்தமத மூலநூல்களை நேரடியாக படிக்க வேண்டும் என்ற பெரும் குறிக்கோளுடன், ஏறத்தாழ ஒரு வருட காலம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நடைப்பயணமாக வந்த யுவான் சுவாங் இரண்டாம் புலிகேசியை சந்தித்தது பற்றியும், நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் காஞ்சிக்கு வருகை தந்தது பற்றியும் தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.
  3. யுவான் சுவாங், இரண்டு பேரரசுகளிலும் இந்து மதக் கோயில்களும், புத்த, சமணக் கோயில்களும் மற்றும் மடங்களும் இருந்தவற்றைக் குறிப்பிடுகிறார்.
  4. ஆந்திரப் பகுதிகளின் சிலவற்றை பல்லவர்களும், மற்றவற்றை சாளுக்கியர்களும் ஆண்டனர்.
  5. இரண்டு பேரரசுகளிலும் சமஸ்கிருதத்தில் திறமை வாய்ந்த அறிஞர்கள் இருந்துள்ளனர்.

நண்பர்கள் பகைவராதல், எதிரியின் எதிரியுடன் நட்பாதல், எதிரியின் உறவினர்களுடன் நட்பு கொள்ளுதல் என சமூகத்தின் வித்தியாசமான உறவுகளை பல்லவ சாளுக்கிய வரலாறுகளைப் படிக்கும்போது காண்கையில் ஆச்சர்யமாக உள்ளது. மகேந்திரவர்ம பல்லவனுக்கு முந்தைய காலத்தில் பல்லவர்களும் கங்கர்களும் நட்பாக இருத்தல், பின்னர் சாளுக்கிய படையெடுப்பின்போது, கங்க மன்னன் துர்விநீதன் இரண்டாம் புலிகேசிக்கு ஆதரவாக காஞ்சிமீது படையெடுத்தல், துர்விநீதன் மற்றும் சாளுக்கிய அரசர்களின் மண உறவுகள், பல்லவ சாளுக்கியப் போரில் இரண்டாம் புலிகேசி இறந்தபின் ஏற்பட்ட வாரிசுச் சண்டையில், நரசிம்மவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசியின் முதல் மகனான ஆதித்யவர்மனுக்கு உதவிபுரிதல், துர்விநீதன் தனது மகள் வயிற்றுப் பேரனான விக்கிரமாதித்யனுக்கு உதவிபுரிந்து பல்லவர்களின் ஏறத்தாழ பதிமூன்று வருட ஆட்சியிலிருந்து பாதாமியை மீட்டது என மிக விநோதமாக உள்ளது.

இரண்டாம் நரசிம்ம பல்லவனின் மனதில் விதையாக முளைத்து, மரமாக வளர்ந்த காஞ்சி கைலாசநாதர் கோயில், கனியாகி அதன் விதைகளை இரண்டாம் விக்கிரமாதித்யன் பட்டடக்கல்லில் விதைத்து விருபாக்‌ஷா கோயிலாக வளர்த்துள்ளார்; ராஷ்டிரகூடர்களும் அதன் விதைகளை எல்லோராவில் விதைத்து அங்கு கைலாசநாதர் கோயில் எனும் பெரும் மரத்தை வளர்த்துள்ளனர்; பாண்டியர்கள் கழுகுமலையில் வெட்டுவான் கோயிலெனும் ஒரு சிறப்பான மரத்தை வளர்த்துள்ளனர்; ராஜராஜ சோழனும் அச்சுவைமிகு கனியின் விதைகளை தஞ்சையில் விதைத்து தஞ்சை பெரிய கோயில் என்னும் பிரமாண்டமான அழகுசொட்டும் மரத்தை வளர்த்துள்ளார்.


------------------------------------------------------------------------------------------------------------------------

6. குறிப்பு

பொ.பி – பொது ஆண்டுக்குப் பின்
------------------------------------------------------------------------------------------------------------------------

7.  உசாத்துணை

பல்லவர் வரலாறு – டாக்டர். மா.இராசமாணிக்கனார்,

Badami, Aihole, Pattadakal by George Michell

பல்லவ வரலாறு -https://puratattva.in/the-pallavas-part-3/

இரண்டாம் புலிகேசியின் காஞ்சிபுரம் வெற்றி பற்றிய கல்வெட்டு

வாதாபிப் போர்

பாதாமியில்நரசிம்மவர்ம பல்லவனின் கல்வெட்டு இருக்கும் இடம் - கூகுள் மேப்பில்

Kanchi Kailashanatha temple Kannada inscription audio 

Dr. Nagaswamy explains where the kannada inscription is located at the Kanchi Kailashanathatemple

Kanchi Kailashanatha temple kannada inscription – epigra indica – Vol 3

Kirthivarman II - vokkaleri copperplates – full information

Aihole kuntikudi Rishabakunjaram - https://karnatakatravel.blogspot.com/2022/11/kunti-gudi-complex-aihole-part-2.htm

Aihole kuntikudi Rishabakunjaram in Video     https://youtu.be/IHBSwd1tQgc?si=YYro9l1KxW5gfmf8&t=431   

பட்டடக்கல்தூண் கல்வெட்டு – இரண்டாம் கீர்த்திவர்மன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலிகேசியின் படையெழுச்சிகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள் – நந்திவர்மன் அரசனாக பதவியேற்ற விவரங்கள் இதில் உள்ளது.

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள்

கல் ஏணிகள் பற்றிய பதிவு - https://karnatakatravel.blogspot.com/2023/09/stone-step-ladders-in-chalukyan-temples.html

Photo of Cave 3Inscription  by Mangalesha mentioning thedate of this Cave

Explanation of Badami Cave 3 inscription by J F Fleet