படங்கள் பார்ப்பது என்பது பள்ளிப்பாட புத்தகங்களில் ஆரம்பித்து, நம்மைச் சுற்றி கண்ணில்படும் ஆலயங்கள் மற்றும் காலண்டர் ஓவியங்கள் வரை நமக்கும் பரிச்சயமானதே. இதனால், அஜந்தா ஓவியங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் என நினைத்தால், நமக்குப் பரிச்சயமான புத்தர் ஓவியங்களைத் தவிர்த்து மற்றவைகளை உள்வாங்கிக் கொள்வது சற்று கடினமாகவேயிருக்கும். பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. சில ஆயத்தங்கள் மூலம் அதையும் எளிமைப் படுத்திக் கொள்ளலாம். அஜந்தா ஓவியத் தொகுப்புகளை முதன் முறையாகப் பார்க்கும்போது, அதில் பயிற்சி இல்லாத நான் அடைந்த தடுமாற்றம் போல மற்றவர்களும் அடைய வாய்ப்புள்ளது.
ஆதி நாட்களில் கதைகள், தொன்மங்கள், நிகழ்வுகள் எல்லாம் வாய் வழியாகவும், ஏடுகள் வழியாகவும் பகிரப்பட்டது. பாதுகாக்கப்பட்டது!
இதன் அடுத்த படியாக, காட்சி ஊடகம் பண்டைக்காலத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவது ஒரு இன்ப அதிர்ச்சியே! இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முந்திய அஜந்தா சுவரோவியங்களே! இவை புத்தர் காலத்து நிகழ்வுகளை, அவரது முந்தைய
பிறப்புகளைச் சார்ந்த ஜாதகக் கதைகளை, தொன்மங்களை ஒரு ஓவியத் தொகுப்பாக நம் கண்முன்
கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஓருவகையில்
தற்கால story boardன் முன்னோடி எனவும் கொள்ளலாம்.
அஜந்தா ஓவியச் சித்தரிப்புகளில், ஒரு நிகழ்வு, ஒரே ஓவியத் தொகுப்பாக அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட தொகுப்புகளாகவும் இருக்கும். ஒரே தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளும் உண்டு. காமிக்ஸ் கதைகளின் படங்களைப் பார்த்துப்
பழக்கப்பட்ட நமக்கு, அஜந்தா ஓவியங்களில், காட்சிகளை இடமிருந்து வலமாக அல்லது மேலிருந்து
கீழாக வரிசையாக இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும். முக்கியமாக,
காட்சிகளைப் பிரித்துக் காட்ட நமக்குப் பரிச்சயமான கோடுகள் எதுவும் இருக்காது! காட்சிகள் ஒன்றுடன் இயல்பாக கலந்து
அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நடக்கும்
கால வரிசைப்படி இல்லாமல், நிகழ்வுகள் நிகழும் இடங்களைக் கொண்டு காட்சிகள் குழுவாகக் கொண்டு
கொடுக்கப் பட்டுள்ளன.
உதாரணமாக, அரண்மனையில் ஒரு காட்சி, பின்பு காட்டில் , திரும்பவும் அரண்மனையில், கடைசியில் காட்டில் என
காட்சிகளின் கால வரிசை இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். அஜாந்தா ஓவியத்
தொகுப்பில், அரண்மனையில் நிகழும் காட்சிகள் இரண்டும் ஒரு குழுவாகவும், காட்டில் நடக்கும் காட்சிகள் இன்னொரு குழுவாகவும் இருக்கும் என எதிர் பார்க்கலாம். இதனால் காட்சிகளின் கால வரிசை மாறி கொடுக்கப்பட்டிருக்கும். அவை சில தொகுப்புகளில்
கீழிருந்து மேலாக அல்லது கடிகாரச்
சுற்றுத்திசையில் அல்லது வெவ்வேறு இடங்களில் சிதறியும் உள்ளன.
வெகு அரிதாக இடமிருந்து வலமாக ஒரே வரிசையில் இருக்கலாம்.
இந்த வித்தியாசமான
அமைப்புகளால், ஓவியத்தொகுப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள, ரசிக்க, அதன் நுட்பங்களை
உள்வாங்கிக் கொள்ள நமது கவனம், ஈடுபாடு மற்றும் முன் ஏற்பாடுகள் அவசியமாகிறது.
முழுக்கவனத்தைக் கொடுத்தோமானால், ஓவியத்தொகுப்புகள் நம்மைக் கவர்ந்து இழுத்து, சிந்தனைக்கு வேலை கொடுத்து, அந்த ஓவியத்தொகுப்பு கூற
வருவதைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இல்லையேல், கலைத்துப் போடப் பட்ட புதிர்
ஓன்றை தொகுக்க முயற்சித்து, முடியாமல் போகும் ஏமாற்றம் கூட ஏற்படலாம்.
ஒரு நல்ல இலக்கியத்தில் நிறைய வாசக இடைவெளிகள் இருப்பது
போல, இந்த ஓவியத் தொகுப்புகள் பார்வையாளனுக்கு நிறைய கற்பனை மற்றும் சிந்தனை இடைவெளிகளை
கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு சில உதாரணங்கள் கீழே.
குகை 17ல் இருக்கும்” வானரா” எனப்படும் வண்ண ஓவியத் தொகுப்பின் கோட்டோவியம் இது. ஓரு சில நூல்களில், தளங்களில் இது மஹாகபி ஜாதகக் கதை (Mahakapi Jataka (#516) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]() |
(Image courtesy: Guide to the Ajanta paintings - Schlingloff, Dieter; Zin, Monika; Helmdach, Matthias) |
இந்தத் தொகுப்பில், மரங்கள், மனிதர்கள், குரங்குகள், மற்றும் பல மிருகங்கள் தெரிகின்றன. இந்தத் தொகுப்பு எதைத் தெரிவிக்கிறது?
ஒரு வேளை இந்த ஜாதகக் கதை நமக்குத் தெரிந்தால், சற்று சுலபமாக இருக்குமல்லவா?
மிகச் சுருக்கமான கதை இங்கே
- ஒரு விவசாயி தன் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு,
காணாமல் போன ஒரு பசுவைத் தேடிக் காட்டுக்குப் போகிறான்.
- ஒரு சில நாட்கள் தேடியும் பசு கிடைக்காமல் போக, மிகுந்த பசியுடன், ஒரு மரத்தில் ஏறி ஒரு பழத்தைப் பறிக்க முயற்சிக்கிறான்.
- ஒரு ஆழமான பாறை இடுக்கில் முறிந்த கிளையுடன் விவசாயி கிடப்பதை ஒரு குரங்கு பார்க்கிறது.
- விவசாயியை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு குரங்கு மேலே வருகிறது.
- களைத்துப் போய் குரங்கு படுத்திருக்கும் போது, விவசாயி
குரங்கின் மீது கல்லைப் போட்டுக் கொன்று அதனை உண்ண முயல்கிறான்.
- காயமடைந்த குரங்கு தப்பித்து, விவசாயி செய்வது சரியல்ல என அவனிடம் கூறுகிறது.
- குரங்கு விவசாயியை காட்டில் வழி நடத்தி அவனது வீட்டுக்குப் போக உதவி செய்கிறது.
- விவசாயிக்கு தொழுநோய் ஏற்பட்டு ஊரிலிருந்து வெளியேற்றப்படுகிறான். காட்டில் வசிக்கும் போது, அங்கு
வேட்டையாட வந்த அரசர் விசாரித்த போது, நடந்தவையெல்லாம் கூறுகிறான்.
இப்போது, இந்தக் காட்சிகள் மேலுள்ள ஓவியத்தொகுப்பில் எங்குள்ளன எனத் தேடலாமல்லவா!
நம் புரிதலை இன்னும் எளிமைப் படுத்த, காட்சி எண்களை கோட்டோவியத்தில் குறித்துள்ளேன்
பின்குறிப்பு: இது எப்படி ஜாதகக் கதையாகிறது?
இந்த முற்பிறப்பு
ஜாதகக் கதையில் வரும் விவசாயி, தேவதத்தன்.
இதில் வரும் குரங்கு போதிசத்துவர்.
புத்தரின் கடைசிப் பிறப்பில், அவரது சீடரான தேவதத்தன்
தன்னை மலையில் இருந்து பாறாங்கல்லை உருட்டிக் கொல்ல முயன்றதைப் பற்றி தனது
சீடர்கள் சிலர் விவாதிப்பதைக் கேட்ட புத்தர், இந்தக் கதையைச் சொன்னார், அதனால்
தேவதத்தனும் கடந்த காலத்தில் அவரைக் கல்லால் கொல்ல முயன்றான் என்பதையும் புத்தத்தன்மையை அடைய ஒருவர்
கடைபிடிக்க வேண்டிய குணநலன்களையும் சீடர்களுக்கு விளக்கினார்.
தேவதத்தனின் கதையை இங்கே படிக்கலாம். முழு ஜாதகக் கதையை இங்கே படிக்கலாம்.
இந்த கோட்டோவியத்தின் அசல் சுவர் ஓவியம் அஜந்தாவின்
17வது எண் குகையில் உள்ளது. அதன் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். (இதில் நடுவில் கருப்பாக
உள்ளது, உள்ளேயுள்ள அறையின் நுழைவாசல்)
![]() |
(Image courtesy: cavesofIndia.org) |
ஓவியத் தொகுப்புகளைப் புரிந்து கொள்ள, இவ்வளவு மெனக்கெடல்
தேவையா என்ற கேள்வி எழலாம். இந்த ஓவியத்
தொகுப்புகள் அழகுக்காக மட்டும் வரையப்படவில்லை. அங்கு வசித்த புத்த துறவிகளுக்கும்
மற்றும் அங்கு வருகை தருபவர்களுக்கும் புத்தத்தின் கொள்கைகளை வெவ்வேறு கதை மற்றும்
நிகழ்வுத் தொகுப்புகள் வழியாகக் கற்றுத் தர அவை வரையப்பட்டுள்ளன. கேட்டலை விட, பார்த்தல், நம் மனதில் ஆழத்தில்
பதியும் அல்லவா!
ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும், நமது முயற்சியைக்
கொடுத்தால், புத்தர் என்ற மகாத்மாவை, புத்தத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் ஒரு திறவுகோலாக
இவை அமையும். போர் புரியாமல் ஒரு விரிந்த
நிலப் பரப்பை அசோகரால் எவ்வாறு தனது ஆட்சியின்கீழ் கொண்டு வர முடிந்தது, எந்த ஒரு
நிர்ப்பந்தமும் இல்லாமல், தற்போதைய ஆப்கானிஸ்தானிலிருந்து ஜப்பான் வரையான விரிந்த நிலப்பரப்பில் புத்தம் எவ்வாறு செழித்தது என்ற கேள்விகளுக்குப்
பதில் கிடைக்கலாம்.
புத்த மதம் மறுபிறவித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
புத்தர், முற்பிறப்பில் புத்தத்தன்மை அடையும் பயணத்தில் இருக்கும் நிலையில்,
போதிசத்துவர் என்றழைக்கப் படுகிறார். அவரது வெவ்வேறு முற்பிறவிகளில் அவர் மிருகங்களாக,
சாதாரண மனிதர்களாக, அரசர்களாக பிறவி எடுத்துள்ளார். நாம் முதலில் பார்த்த மஹாகபி ஜாதகக் கதையில் வரும்
குரங்கு, போதிசத்துவர் எனப் பார்த்தோமல்லவா!
இங்குள்ள தொகுப்புகள், புத்தர் வாழ்க்கை நிகழ்வுகள் (உதாரணம்: பாகவப்பிரசூதி [Bhagavaprasuti],
மஹாப்பிராத்திஹர்யா [Mahapratiharya]), புத்தரின் முற்பிறப்புகளின்
ஜாதகக் கதைகள் (உதாரணம்: சாத்தந்தா [Shad danta Jataka], மஹா ஹம்ச [Maha Hamsa
Jataka]) போன்றவற்றை
நமக்குத் தெரிவிக்கின்றன.
வெவ்வேறு ஜாதகக் கதைகளும், போதிசத்துவர் பின்பற்றிய அகிம்சை, பெருந்தன்மை, உண்மையாயிருத்தல், பிறருக்கு உதவுதல், உபதேசித்தல் மற்ற அவசியமான குணநலன்கள் போன்ற
மையக்கருத்துக்களைக் கொண்டுள்ளன.
அறிஞர்கள், ஆய்வாளர்கள், அஜந்தா ஓவியத்தொகுப்புகளை நாம் புரிந்து கொள்ள நிறைய கையேடுகள், நூல்களை எழுதியுள்ளனர். சில இணையத்திலும் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான ஜாதகக் கதைகள் இருந்தாலும், குறைவானவையே தற்போது அஜந்தாவில் நல்ல நிலையில் உள்ளன. மேலும் சில கதைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட குகைகளில் வரையப்பட்டுள்ளன. ஒரு சில கதைகள் நமக்குப் பரிச்சயமானவை. உதாரணம் – சிபிச் சக்ரவர்த்தி. விஸ்வாந்திரா ஜாதகக் கதை நமக்கு அரிச்சந்திரன் மற்றும் நள தமயந்தி புராணக் கதைகளை ஞாபகப் படுத்துகின்றன.
அஜந்தா ஓவியங்கள் முதலில் கடினமாகத் தெரிந்தாலும், அவற்றுடன் பழகினால், நமக்கு எண்ணிலடங்கா முத்துக்கள் கிடைக்கும். சிலவற்றைக் கீழே பகிர்கிறேன்.
கட்டிடக்கலை: முக்கியமாக தற்போது கோயில்களில் காணப்படும் கோபுரங்கள் அவற்றின் அங்கங்கள், மண்டபங்கள், தூண்களின் அமைப்புகள், அவற்றின் வேலைப்பாடுகள் என எண்ணிலடங்கா தகவல்கள் நம் கண்முன் வருகின்றன.
கலாச்சாரம்: அரசர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அணிந்திருந்த வெவ்வேறு நகைகள்,
உடைகள், அவற்றின் அலங்காரங்கள்.
இயற்கை: வெவ்வேறு நில, நீர், வான் சித்தரிப்புகள், அவற்றில் உள்ள நீரினங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின்
சித்தரிப்புகள்.
பண்பாடு: நாகங்கள்,
மனிதர்கள், தேவர்கள், என
பாதாளத்திலிருந்து விண்வரையான சித்தரிப்புகளும் இங்கு கொட்டி
கிடக்கின்றன.
ஓவியக்கலை: இன்றைய நவீன ஓவியக்கலையின்
வெவ்வேறு நுட்பங்களும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என நான்
படித்துள்ளேன். அதைப் பற்றிய பயிற்சி எனக்கு தற்போது இல்லை
என்பதால் அதைப் பற்றி மேலும் கூற
இயலவில்லை.
தேடினால், இன்னும் வெவ்வேறு
தகவல்களையும் கண்டடையலாம். அஜந்தா என்பது, ஒரு
காட்சி ஊடக வடிவில் நமக்குக் கிடைத்துள்ள பெருங் கலைக் களஞ்சியம்!
![]() |
குகை 17, சிபி ஜாதகக் கதைத் தொகுப்பிலிருந்து. (Image courtesy: https://www.indian-heritage.org) |
![]() |
குகை 1, மஹா ஜனகா ஜாதகக் கதைத் தொகுப்பிலிருந்து (Image courtesy: cavesofIndia.org) |
![]() |
குகை 1, மஹா ஜனகா ஜாதகக் கதைத் தொகுப்பிலிருந்து (Image courtesy: cavesofIndia.org) |
கீழேயுள்ள ஓவியத் தொகுப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்களேன்! இது இன்னொரு மஹாகபி ஜாதகக் கதை. உதவிக்காக, இந்த ஜாதகக் கதையை இங்கே படிக்கலாம்.
![]() |
(Image courtesy: Guide to the Ajanta paintings - Schlingloff, Dieter; Zin, Monika; Helmdach, Matthias) |
இதில் என்னை அதிகம்
கவர்ந்தது ஒரு நதியைக் காட்சிப்படுத்தியுள்ள நுட்பமே. சற்றுக் கூர்ந்து கவனித்தால்,
நதியின் இடது கரையின் முப்பரிமாணக் காட்சி நமக்குப் புலப்படும்.
ஒரு நதியில் மனிதர்கள் நீராடுவதைக் காட்ட, நதிக்கரை, அதில் நீந்தும் மீன்கள், சில பறவைகள் என சிறப்பாக காட்டப்பட்டு
உள்ளன!
அஜந்தா குடைவரைகளையும், ஓவியங்களையும், அவற்றின் நேர்த்தி, அழகியல், அவை
உணர்த்த முற்படும் கருத்துக்கள் எனப் பார்த்தால், அந்தக் காலத்தில்,
இத்தனைப் படைப்பாற்றலுடன் விளங்கிய சமூகம்
அது என்ற வியப்பு ஓங்கி நிற்கிறது.
அந்தப் படைப்பாற்றல் தற்போது எங்கே போய்விட்டது என்ற ஏக்கமும் விஞ்சி நிற்கிறது எனச் சாதாரணமாகச் சொல்லலாம். ஆனால், தீவிர படைப்பாற்றல் கொண்ட ஏராளமானோர் இன்றும் நம்மிடையே உள்ளனர். எண்ணிலா இதயங்களை தொட்ட, இசைச் சாதனைகள் படைத்த இசைஞானி இளையராஜாவும், மகாபாரதத்தை வெண்முரசு என்ற தலைப்பில் நவீன இலக்கியமாக எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனும், அழகுடனும், நேர்த்தியுடனும் தங்கள் இல்லங்களை அலங்கரித்துக் கொள்ளும் எளிய பழங்குடி மக்களும், விண்ணில் உலாவும் கலன்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், மண்ணுக்கடியிலும், பாறைகளுக்குள்ளும் குடைந்து, நம் பயணங்களை சுலபமாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களும், மிகச் சிக்கலான, நுட்பமான அறுவைச் சிகிச்சைகளைச் செய்யும் நிபுணர்களும், இன்னும் நமக்குத் தெரியாத எத்தனையோ பேர்களும் படைப்பாற்றலின் சாத்தியங்களை நமக்கு உணர்த்திக் கொண்டுதான் உள்ளார்கள்!
உசாத்துணை:
https://indianculture.gov.in/ajanta/painting
புத்த ஜாதகக் கதைகளின் பட்டியல்
https://cavesofindia.org/ajanta-cave-17-narrative-paintings-2/
https://www.indian-heritage.org/painting/ajanta/ajanta9.html