தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

வெள்ளி, 14 மார்ச், 2025

எல்லோரா – இந்துக் குடவரைகள்

 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில்,  குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது.  மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.  

சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து (பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும் வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

எல்லோராவில் 100க்கு மேற்பட்ட குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.

இங்கு

13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),

16 இந்து குடவரைகள் (எண்14-29),

5 சமணக் குடவரைகள் (எண் 30-34) உள்ளன.

இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான நீளத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின் வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக் கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம் திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது. ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால் தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின் முதல் குடவரை.

இந்த அமைப்பின் அடுத்த மேம்பாடு என்பது, ஒரு பாறைச் சரிவைத் தேர்ந்தெடுத்து, அதன் ஒரு நடுப் பகுதியை விட்டுவிட்டு, சுற்றிலும் ஒரு அகழி போல குடைந்து கொள்வது. இதனால், நடுவில் உள்ள பகுதி ஒரு சிறிய குன்று போல இருக்கும். அடுத்து, இந்தக் நடுப்பகுதியில் உள்ள பாறையைக் குடைந்து தேவையான கோயில் அமைப்பை உருவாக்குவது. இப்போது இந்தக் கோயிலுக்குத் தேவையான காற்றும் வெளிச்சமும் நான்கு பக்கங்களிலும் இருந்து வருமாறு செய்து கொள்ளலாம். மேலும், நாம் “அகழி போல” எனக் குறிப்பிட்ட பகுதி இப்போது கோயிலின் சுற்றுப் பிரகாரமாக மாறும்! இப்படி முழுவதும் கல்லால் குடையப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் சிறந்த கலை உருவாக்கமே இந்த எல்லோரா கைலாசநாதர் கோயில்!

இந்த கலை பொக்கிஷத்தைப் பார்க்கும் போது ஒரு முத்துச்சிப்பியின் நினைவுதான் வந்தது. சிப்பிக்குள் இருக்கும் முத்துவை கடலின் ஆழத்திலிருந்து எடுத்து வருகிறோம். கைலாசநாதர்  கோயில் என்னும் முத்தை, பண்டைய சிற்பிகள் பாறைக்குள் இருந்து  அகழ்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள்! அந்த முத்து உருண்டு ஒடி விடக்கூடாது என்பதற்காக இந்த சிப்பியின் கீழ்ப்பகுதியான தாய்ப் பாறையுடனே இருக்குமாறு விட்டு வைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது. முத்துச்சிப்பி கைக்கடக்கமாக இருக்கும். இது கண்ணில் கூட அடங்காமல், 276 அடி நீளம், 154அடி அகலம் மற்றும் பின் பக்க பாறையின் உயரம் 107அடி கொண்ட கோயில் வளாகமாக உள்ளது.

காஞ்சி கைலாசநாதர் கோயில் (இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (பொ. பி  695-728) மற்றும் பட்டதக்கல் விருப்பாக்‌ஷா கோயில்(இரண்டாம் விக்ரமாதித்யா (பொ.பி  733 744) ஆகியவற்றால் கவரப்பட்டு, அவற்றின் அமைப்பில், அதைவிடப் மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், லட்சக்கணக்கான டன் கொள்ளவு கொண்ட பாறைகளைக் குடைந்து அகற்றியிருக்கிறார்கள். மேற்குத் திசை நோக்கியிருக்கும் இந்த அதிசயத்தை, ராஷ்டிரகூட்ட மன்னர் முதலாம் கிருஷ்ணன் (பொ. பி 756 – 774) அமைத்ததை, பின்னாட்களில் வந்த மன்னர்களின் செப்புப்பட்டயச் செய்திகள் வழியாக அறிந்து கொள்ளப்படுகிறது.

குடவரை 16, எல்லோரா கைலாசநாதர் குடவரைக்  கோயில் 
- கழுகுப் பார்வை – Photo credit – wikipedia























படங்களில் அல்லது காணொளிகளில் பார்க்கும்போது, மக்கள் உயரத்தில் நடப்பதைக் கொண்டு, கோயில் கீழ்த்தம், மேல் தளம் என இரண்டு நிலைகளில் உள்ளது என நானே நினைத்துக் கொண்டிருந்தேன். அது தவறு என நேரில் பார்க்கும் போதுதான் புரிந்தது. பெரும்பாலும் கோயில்கள் கட்டமைப்பு, அதிட்டானம் என்னும் அடிப்பகுதியில் ஆரம்பிக்கும்; அதன் மேல் சுவர்கள்(பித்தி) இருக்கும். நுழைவாயில் கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்கும் விதமாக, உயரமான உபபீடமும், அதன் மேல் அதிட்டானம், பிறகு கோயில் சுவர்கள்(பித்தி) என்ற  கட்டமைப்ப்பு கொண்டிருக்குக்கும்.

இந்த வளாகத்தின் நடுவில் உள்ள கோயில் 27அடி உயர அடித்தளம் கொண்டது. முழுவதும் தாய்ப்பாறையில் அமைந்த இதன் வெளிப்புறங்கள், மஞ்சபந்த உபபீடம் மற்றும் கபோதபந்த அதிஷ்டானத்துடன் அமைந்துள்ளது. கோயில் 164 அடி நீளம், 109 அடி அகலம் கொண்டதாக உள்ளது. கோயிலின் தரைத்தளம் எவ்வளவு உயரத்தில் ஆரம்பிக்கிறது எனப் புரிந்து கொள்ள இந்தப் படம் உதவும்.

எல்லோரா கைலாசநாதர் குடவரைக் கோயில் அடிப்பகுதி -
Photo credit - 
– youtube channel Uncharted Ruins








இந்த புதுமையான, உயரமான உபபீடத்தில் அமைந்துள்ள, பல பெரிய யானைகள், சிம்மங்கள், யாளிகள் நம்மை நோக்கி வருகின்றன. சில இடங்களில் யானைகளும் சிம்மங்களும் சண்டையிட்டுக்கொள்கின்றன.

கஜலட்சுமி சிற்பத்தொகுப்பு –
Photo credit – ஈஸ்வரி, வண்ணத்தீட்டல் - சகுந்தலா 













இந்த குடவரை வளாகத்தில் நுழைந்தவுடன், முகப்பில் ஒரு அழகிய கஜலட்சுமியின் சிற்பத்தொகுப்பு நம்மை வரவேற்கிறது. எவ்வளவுதான் பொருட்செல்வமிருந்தாலும், இயற்கையின் செல்வமாகிய நீரின்றி நம் வாழ்வு சிறக்குமா!  மலர்களும், இலைகளும், மீன்கள், பறவைகள் நிறைந்த ஒரு குளக்கரையில், ஒரு குடையின் கீழ், பத்மபீடத்தில் லட்சுமி அமர்ந்துள்ளார். அவரது கைகளில் தாமரை மலர்கள் இருந்திருக்க வேண்டும். அவர்மீது இரு பெரிய யானைகள், குடங்களிலிருந்து நீரைப்பொழிகின்றன. குளத்துக்கு மிக அருகில் இருக்கும் இரு சிறிய யானைகள், குடங்களில் நீருடன், பெரிய யானைக்குக் கொடுக்கத் தயாராக உள்ளன. இக்காட்சியை விண்ணோர் பார்த்து மகிழ்ந்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு மங்கலகரமான வரவேற்பு நமக்குக் கிடைக்கிறது.

இங்கிருந்து இருபுறமும் பார்த்தால், 20 ரூபாய் நோட்டில் நாம் காணும் கம்பங்களின் அசல் வடிவமான, திரிசூலத்துவஜம் எனப்படும் கற்கம்பங்களை நேரில் பார்க்கலாம்.

பொதுவாக கோயில் முன்புறம், மத்தியில் ஒரு கொடிமரத்தையோ அல்லது தீபஸ்தப்பத்தையோ பார்த்திருந்த எனக்கு, வித்தியாசமாக இடது வலதுமாக மொத்தம் இரண்டு திரிசூலத்துவஜம் அமைந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. இவற்றின் உச்சியிலிருந்த திரிசூலங்கள் மிகவும் அழிந்திருக்கின்றன. அவற்றை என் கற்பனையில் கொண்டுவர முயலும் போது, பெங்களூர் கவி கங்காதேஷ்வரர் கோயில் முன் உள்ள திரிசூலக் கம்பமே நினைவுக்கு வந்தது. பெங்களூரிலிருப்பது ஏறத்தாழ 15-18 அடி உயரம், எல்லோராவில் இருப்பது 49 அடி!

திரிசூலத்துவஜங்கள் ஒப்பீடு - Photo credit – wikipedia












முன்பு, கோயிலைச் சுற்றி, அகழி போன்ற சுற்றுப் பிரகாரம் என்று கூறினேன் அல்லவா. இந்த சுற்றுப் பிரகாரத்தின் உள்ள தாய்ப் பாறைகளைக் குடைந்து, கோயில் வளாகத்தின் 3 பக்கங்களிலும், தூண்களுடன் கூடியாக உயரமான பிரகார மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தப் பிரகாரச் சுவர்களிலும் சிற்பங்கள் உள்ளன.

நதித் தெய்வங்களின் சிற்பங்கள் - Photo credit – wikipedia








பெரும்பாலும், நான் கங்கா யமுனா சிற்பங்களை வாயில் தூண்களில் அடிப்பகுதியில் மட்டுமே பார்த்துள்ளேன். இங்கு புதுமையாக, நதி தெய்வங்களான கங்கா, யமுனா, சரஸ்வதிக்கு தனியான சிற்பங்கள் வடக்குப் பிரகார மண்டபத்தின் துவக்கத்திலேயே உள்ளன. பத்மத்தில் மேல் நின்றிருக்கும் சரஸ்வதி, மகரத்தின் மேல் கங்கா, கூர்மத்தின் மேல் யமுனா ஆகியவை சிதைவைச் சந்திக்க நேர்ந்திருந்தாலும், மிக அழகாக அமைந்துள்ளன.

தொடர்சியாக சிவனின் வெவ்வேறு ரூபங்களில் சிற்பங்கள், கிழக்கு பிரகாரத்தில் சிவனின் சிலைகள், சிவ விஷ்ணு இணைப்பான ஹரிஹரரின் சிற்பம், பிரம்மன், திரும்பவும் சிவனின் வெவ்வேறு சிற்பங்கள் தெற்கு பிரகாரத்திலும் தொடர்ந்து விக்ஷ்ணுவின் வெவ்வேறு ரூபங்களில் முடிகிறது.

வடக்கு பிரகார மண்டப 120 அடி நீளம், 12 சிற்பங்கள் + கங்கா, யமுனா, சரஸ்வதி சிற்பங்கள்

கிழக்கு பிரகார மண்டப 189 அடி நீளம், 19  சிற்பங்கள்

தெற்கு பிரகார மண்டப 118 அடி நீளம், 12 சிற்பங்கள்

அது மட்டுமல்ல, கோயிலின் இருபுறமும், பிரகார மண்டபங்களுக்கு மேல், பாறையைக் குடைந்து கூடுதல் கோயில்களையும் அமைத்துள்ளனர்.

கோயில் வளாகத்திலிருந்து, உயரத்திலுள்ள கோயில் தரைத்தளத்திற்குப் போகவும், வரவும், இருபுறங்களிலும், நம் வீடுகளில் இருப்பதுபோலவே, ஆனால் பாறைகளைக் குடைந்து செய்யப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. படிகளில் ஏறிச்சென்றால், முக மண்டபத்தை (முக சதுஷ்கி mukha chatushki) அடைவோம்.  இதன் மேற்குப் பகுதியில் ரிஷப மண்டபம் உள்ளது. முகமண்டபத்தையும் ரிஷப மண்டபத்தையும் இணைக்கும் ஒரு கற்குடைவரை பாலத்தின் மூலமாகத்தான் ரிஷப மண்டபத்தை அடைய முடியும். என்ன ஒரு புதுமை!  இது மட்டுமல்ல, ரிஷப மண்டபத்திருந்து மேற்காக உள்ள நுழைவாயில் கோபுரத்தின் முதல் தளத்திற்கு இன்னும் ஒரு கற்குடைவரை பாலத்தின் மூலமாகச் செல்லமுடியும்!

இதன் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள இந்தப் படமும் உதவி புரியும்.

எல்லோரா குடவரைக் கோயில் வளாகம் – பக்கவாட்டுப் பார்வை
Photo credit - architexturez.net









திரும்பி இரு பாலங்களைக் கடந்து சென்றால் மீண்டும் முகமண்டபத்தை அடைவோம். இங்கிருந்து 16தூண்கள் கொண்ட ஒரு அழகிய மகாமண்டபத்தை அடைவோம். நான்கு புறங்களிலும் பாறைச் சுவர்களால் மூடப்பட்டுள்ளது. கூமண்டபம் (கூமண்டபம் , gudhamandapa ) என இங்கு அழைக்கப் படுகிறது. இதன் கற்சுவர்களில் அழகிய சாளரங்கள் உள்ளன. உள்கூரை முழுவதும், வண்ண ஓவியங்களால் நிறைந்திருந்தது. இப்போது ஒரு சில ஓவியங்களே மிஞ்சியுள்ளன.

மகாமண்டப உள்கூரை ஓவியம் - Photo credit – sahapedia.org









மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் சிறிய அந்தராளத்தை அடுத்து, சற்று உயரமான கருவறையில் சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறையின் மேல் அழகிய, மூன்று நிலை திராவிட விமானம் உள்ளது. சுற்று வளாகத்திலிருந்து கருவறை விமானம் உச்சிவரையான உயரம் 96 அடியாகும்.

மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள வாயில்கள் வழியாக நாம் கருவறையை வெளியில் சுற்றி வரலாம். இந்தத் திருச்சுற்றில் ஐந்து பரிவார ஆலயங்கள். அவற்றில் தற்போது சிலைகள் இல்லாததால், அவை எந்த தெய்வங்களுக்கானது எனக் கூற இயலவில்லை. சுற்றி முடித்து திரும்ப மகாமண்டபத்துக்கு வந்தால், அடுத்த புதுமை காத்துக் கொண்டிருக்கிறது. மகாமண்டபத்தின் இருபுறங்களிலும், ஒருகூட்டல்” குறியின் இருபக்க கோடுகள் போல, திறந்த மண்டபங்கள் உள்ளன. உப்பரிகைகளை நினைவுபடுத்தும் அவை, பத்ர அவலோகணம் என அழைக்கப்படுகின்றன. (இந்த அமைப்பு பட்டதக்கல் விருபாக்‌ஷா கோயிலிலும் உள்ளது) தெற்கு மண்டபத்திலிருந்து, கற்பாலங்கள் வழியாக வெளியேயுள்ள சுற்று பிரகார மண்டபத்துக்கு வரும் கற்பால இணைப்பு முன்பு இருந்திருக்கிறது. அந்த இணைப்புப் பாலம் எப்போது உடைந்தது எனத் தெரியவில்லை.

வேறு எங்கும் கிடைக்காத ஒரு வசதியாக, அருகில் பாறையின் மீது ஏறி இந்த மொத்த கைலாசநாதர் கோயில் வளாகத்தை நம்மால் ஒரு கழுகுப் பார்வை பார்க்க முடியும் என்பது ஒரு அரிய சிறப்பு. பொதுவாக மண்டபத்தின் மேற்கூரைகள் அலங்காரங்கள் ஏதுமின்றி வெறும் சம பரப்பாகவேயிருக்கும், இங்குள்ள மேற்கூரைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன. மகாமண்டபத்தின் மேற்கூரை பல அடுக்குகள் கொண்ட தாமரை மலராக செதுக்கபட்டுள்ளது. பிற மண்டபங்கள் மேலும் வேலைப்பாடுகள் உள்ளன.

இந்த கோயில் முழுவதும் சுண்ணப்பூச்சும், வண்ணப் பூச்சும் செய்து இருந்ததன் எச்சங்கள் உள்ளன. அப்போது அந்தக் கோயில் எவ்வளவு அதி அற்புதமாகக் காட்சியளித்திருக்கும்! அதனால்தான், ”தேவர்களும் கட்டட கலைஞர்களும் வியக்கும் வகையில் அரசன் ஒரு கோயிலைக் கட்டினார் ” என்று இரண்டாம் கர்கன் என்னும் குஜராத் பகுதிகளை ஆண்ட ராஷ்டிரகூட்ட அரசனின் செப்புப் பட்டயம்(பொ. பி 812–813) கூறுகிறது போல.

ஆய்வாளர்கள் இந்த செப்புப் பட்டயம் மற்றும் பிற செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எல்லோரா கைலாசநாதர் கோயிலை ராஷ்டிரகூட்ட மன்னனான முதலாம் கிருஷ்ணன் (பொ. பி 756–773) கட்டியதாகக் கூறுகிறார்கள்.இந்தச் செப்புப்பட்டயத்தின் அசல் விவரங்களைத் தேடியபோது, J F Fleet என்னும் ஆங்கிலேய ஆய்வாளர் இந்த செப்புப் பட்டயம் கிடைத்த விவரங்களையும், அதன் படங்களையும், ஆங்கில மொழியாக்கத்தையும் கொடுத்துள்ளார்.

ராஷ்டிரகூட்ட குஜராத் கிளையின் ஆட்சியாளரான இரண்டாவது கர்கராஜாவின்(பொ. பி 812-813) குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செய்ந்த தானத்தைப் பற்றி இந்தப் பட்டயம் குறிப்பிடுகிறது. இது வடோதரா(பழைய பெயர் பரோடா) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் வடோதரா/ பரோடா செப்புப் பட்டயம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு வளையங்களால் ஒன்றாகப் பிடிக்கப்பட்ட சற்று உயர்ந்த விளிம்புகளைக் கொண்ட மூன்று செப்புத் தகடுகள் (28 x 19·5 செ.மீ.). ஒரு வட்ட முத்திரையுடன் (3 செ.மீ. விட்டம்) ஒழுங்கற்ற வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது. முத்திரையின் மையத்தில், கடவுள் சிவன் உருவம். மானியத்தின் மொழி சமஸ்கிருதம்” என்கிறார் J F Fleet..

அதில் ராஷ்டிரகூட்ட அரசர்களின் வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் கிருஷ்ணனின் புகழைக் குறிப்பிட்டு, எலாபுரத்தில் (Elapura, எல்லோரா) தேவர்களும் கட்டட கலைஞர்களும் வியக்கும் வகையில் அரசன் ஒரு கோயிலைக் கட்டினார் என்ற செய்தி உள்ளது.

முதலாம் கிருஷ்ணனின் 18 வருட ஆட்சிக்காலத்துக்குள் இந்தக் கோயிலை வெட்டி அமைப்பது சவாலானது என்பதால், இதன் வேலைகள், முந்தைய அரசன் தந்திதுர்கன் (பொ. பி 735–756) காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.  இந்த அரசரது கல்வெட்டு, குடவரை 15ல் உள்ளது. இதிலும் அரசரது வம்சாவளியும், சாளுக்கியர்களை வென்ற செய்திகளும், இந்த கோயிலுக்கு தந்திதுர்கன் வருகை தந்ததையும் குறிப்பிடுகிறது. வருகை என்பது, குடவரை 15 வெட்டி முடித்து ஆலயத் திறப்புவிழா என எடுத்துகொள்ளலாமல்லவா!

மேலும் இந்த தந்திதுர்கன் தனது மகளை, பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கு (பொ. பி 718 – 796) திருமணம் செய்வித்தான், நந்திவர்மனுக்கு பின், அவர்களது மகன் தந்திவர்மன் (பொ. பி 795–846) பல்லவப் பேரரசை ஆண்டான்.  (எனக்கு எப்போதும் தந்திதுர்கன், தந்திவர்மன் பெயர்க் குழப்பம் ஏற்படும்!)

குடவரை 16 - சோமஸ்கந்தர் - Photo credit - wikipedia












இந்தக் கோயிலின், கருவறை வலதுபுற முன் சுவரில், ரிஷபத்தின் மேல் சிவனும் அவருக்கு இடதுபுறம் பார்வதியும் அமர்ந்துள்ளனர். சிவனின் வலது தொடைமேல் பாலகன் சுப்பிரமணியன் அமர்ந்துள்ளான். இந்த அமைப்பு, சோமஸ்கந்தர் என அழைக்கப்படுகிறது. இந்த சோமஸ்கந்தர் கருத்துருவாக்கம் பல்லவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த சோமஸ்கந்தர் கருத்துருவாக்கம் எல்லோரா கைலாசநாதர் கோயிலுக்கு எப்படி வந்தது என்ற என் கேள்விக்கு, பல்லவ ராஷ்டிரகூட்ட மண உறவும், ராஷ்டிரகூட்டர்கள், காஞ்சியின் பல்லவ சாளுக்கியப் போரில் பல்லவர்களுக்கு உதவி புரிந்த தகவல்களும் பதிலாக உள்ளன! (இந்த சிற்பத் தொகுப்பில் பாலகன் மற்றும் பார்வதியின் தலைகள் சிதைக்கப்பட்டிருப்பது துயரம்!)

பல புதுமைகள் நிறைந்த இக்கோயிலில் எனக்கு சில ஏமாற்றங்களும் உள்ளன.

நுழைவாயில் கோபுரம், மழையில் நனைந்து தூசிகளும், பாசிகளும் படிந்து காய்ந்து, மிகவும் கருமை அடைந்துள்ளது. இதன் மேற்பாகங்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. சற்றென்று கோபுரம் என அடையாளம் காண இயலவில்லை. அது முடிக்கப்படாத எதோ ஒரு அமைப்பே என்று முதலில் தோன்றியது.

கோயில் பிரகார மண்டபங்களிலும், கோயிலிலும் எங்கு நோக்கினும் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. அந்தகார வதம், யோகமகேஷ்வரர், மகிஷாசுரமர்தினி, மார்க்கண்டேயனுக்கு அருளுதல், ராவணன் கைலாசத்தை தூக்குதல், சிவன் பார்வதி பகடையாடுதல், நடமிடும் சிவனின் வெவ்வேறு வடிவங்கள், கங்காதர மூர்த்தி, சங்கநிதி, பதுமநிதி, விநாயகர், ராமாயண, மகாபாரத, பாகவத காட்சிகள், ராவணனைத் தாக்கும் ஜடாயு, நரசிம்மர் மற்றும் ஹிரண்யகசிபு சண்டைகள், வெவ்வேறு வாயில்களின் துவாரபாலகர்கள், கோயிலின் வெளிப்புற சுவர்களின் உயரங்களில் பறக்கும் கந்தர்வர்களின் வெவ்வேறு சித்தரிப்புகள், மேலும் பற்பல சிற்பங்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சில சமயங்களில் இது குடவரைக் கோயில் என்று மறந்து போய் கல்லால் கட்டப்பட்ட கோயில் என்றே உளமயக்கு ஏற்படுகிறது.

குடவரை 16 - ராவணன் கைலாசத்தைத் தூக்கும் காட்சி
- Photo credit - செந்தில்













ஒரு முக்கியமான சிற்பத் தொகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். கோயிலின் தெற்குத் திசையில், உப்பரிகை மண்டபத்தின் அடியில், கோயிலின் உபபீடத்தைக் குடைந்து இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவை புடைப்புச் சிற்பங்கங்களாக இல்லாமல், முப்பரிமான சிலைகளாகவே உள்ளன. இதில் ராவணன், மண்டியிட்டு, தனது கரங்களால் கைலாச மலையை அசைத்து தூக்க முயல்கிறான். மலையை நோக்கி அவன் உடல் இருக்க, கால்கள் மண்டியிட்டு அவனது முதுகு, தண்டுவடக் குழி நமக்குத் தெரிகின்றன. பல்லைக் கடித்துக் கொண்டிருக்கும் ஒரு தலை நம்மை நோக்கியிருக்க, பிற தலைகள் வட்டமாக அமைந்துள்ளன. ராவணனின் அசைப்பில், கைலாச மலை அதிர, அதன் மேல் சிவனுடன் அமர்ந்துள்ள பார்வதி, பயத்தில் பின் நகர்ந்து சிவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்; சேடிப் பெண் பயந்து இன்னும் பின்னால் ஓடுகிறாள்.  அருகிலுள்ள கணங்கள், ஏதோ தங்களால் முடிந்ததென, கற்பாறைகளைக் கொண்டு வந்து ராவணனின் மேல் போட்டுக் கொண்டுள்ளனர். விண்ணோர்கள், என்னதான் நடக்கிறதென்ற அதிர்ச்சியுடன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுள்ளனர்!  இருபது கைகள் கொண்டு மலையத் தூக்கும் ஆணவத்தை எனது கால் பெருவிரலால் அழுத்தி அழிக்கிறேன் என்னும் சிவனின் அந்தக் காலைக் காணும் பேறும் இப்போது நமக்கு இல்லை.

இந்த சிற்பத் தொகுதியின் அளவுகளைப் புரிந்து கொள்ள கீழேயுள்ள எங்களது குழுப்படம் உதவும் என நினைக்கிறேன்.

ராவணன் கைலாசத்தைத் தூக்கும் காட்சி
- Photo credit – லலிதா ராகவன்










இப்படி, கைலாசநாதர் கோயில் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், அது சொற்களால் சொல்லி முடிக்க முடியாத பிரம்மாண்டம். உங்கள் நேரடி அனுபவத்திற்கே விட்டு விடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கைலாசநாதர் கோயில் என்னும் மாபெரும்  கலைப் பொக்கிஷத்தைப் பார்த்துவிட்டு மற்ற இந்து குடை வரைகளில் என்ன இருக்கப் போகிறது என்ற ஒரு அசிரித்தையான மனப்பாங்குடன் போனால், அங்கும் ஆச்சரியங்களே இருந்தன. உதாரணமாக, குடவரை 29ல்(Dhumar Lena) உள்ள 18அடி உயரமுள்ள  பெரிய மண்டபம் அதிசயக்க வைத்தது. இவ்வளவு உயரமாக மண்டபத்தை ஏன் குடைய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வண்ணமாக முழு உயரத்தையும் நிறைக்கும் சிற்பத் தொகுப்புகள் அங்கு அமைந்துள்ளன. மையமண்டத்தின் இரு புறங்களிலும் இரு மண்டபங்கள் அமைந்துள்ளன.வற்றின் வெளிப்புறத்தை ஒட்டி உள்ள பாறை முழுவதுமாக திறந்தவெளியாக நீக்கப்பட்டு மலைச்சாரலும் சூரிய வெளிச்சமும் நன்கு உள்ளே வரும் வகையில் உள்ளது மேலும் சிறப்பு. வலது புற மண்டபத்தின் அருகில் விழும் மழைநீர், ஒரு தாழ்வான வாய்க்கால் போன்அமைப்புடன், அருகிலிருக்கும் ஒரு பள்ளமான குத்துக்கு சென்று சேருவது இன்னும் அழகு.

நான் இதுவரை ஒரே ஒரு வாயில் கொண்ட கருவறைகளை மட்டுமே பார்த்து உள்ளேன். ங்குள்ள கருவறையின் நான்கு பக்கங்களிலிருந்தும் லிங்கத்தைத் தரிசிக்கும் வகையில் நான்கு வாசல்களுடன் அமைக்கபட்டுள்ளது அதி சிறப்பு. இந்த அமைப்புக்கு சர்வதோபத்ரம் என்று பெயர். இந்த அமைப்பைப் பற்றித் தேடும் போது, குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தாய்லாந்தில் உள்ள கோயிலைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் அங்குள்ள கோயில் கருவறை இந்த சர்வதோபத்ரம் அமைப்பில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் இணைப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. எலிபண்டாவில் உள்ள முதலாம் குடவரை கருவறையும் இதே அமைப்பிலுள்ளது. மேலும் இரண்டு குடவரைகளுக்கும், குடவரை அமைப்பிலும், சிற்பத் தொகுதிகளிலும் நிறைய ஒத்துமைகள் உள்ளன. 

இந்த குடவரைக் கோயிலின் தள அமைப்பு(floor plan), ஒரு மண்டலத்திற்குள் அமைந்துள்ளது போல் மிகச் சிறப்பாக உள்ளது. (இதை எலிபண்டா குடவரை 1லும் காணலாம்) 

Geometry of cave 29 – Photo credit – Floor plan from book ”Cave temples of India”,
Drawing - Sakunthala











இங்கு மேலே படத்தில் காட்டப்பட்ட இடங்களில், ஆறு சிற்பத் தொகுப்புகள் உள்ளன.

அந்தகார சம்ஹார மூர்த்தி - Photo credit - சகுந்தலா










நுழைந்தவுடன், இடது புறத்தில், அந்தகாரனை சம்ஹாரம் செய்யும் அந்தகார சம்ஹாரமூர்த்தி (1) சிற்பத்தொகுப்பு உள்ளது.  ஜடாமகுடம் தரித்து, ரௌத்ரத்தில் முகம் கடுமையடைந்து வாய் திறந்துள்ளது. வாள்(கடப்பாரை?) அந்தகாரனின் உடலைக் கிழித்து அடுத்தபக்கம் போக, அவன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான். அவனது ரத்தம் தரையில் பட்டு, திரும்ப உயிர் பெறுவதைக் தடுக்க, அவன் கீழ், விழும் ரத்தத்தைப் பிடிக்க, கபாலத்தை ஏந்திக் கொண்டிருக்கிறார். ஒரு கல்லில் மூன்று மாங்காய் போல, இன்னொரு கைவாள் காஜாசுரனின் தலையை அழுத்திக் கொண்டிருக்கிறது. கீழ் இருக்கும் கை ஒன்றில் இன்னொரு அசுரன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான். இவற்றையெல்லாம், அருகில் அமர்ந்திருக்கும் பார்வதி அதிர்ச்சியில் மார்பின் மீது கை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அச்சத்தில் வேர்த்திருக்கும் அவரை, அருகிலிருக்கும் சேடிப் பெண் சாமரம் வீசி ஆசுவாசப்படுத்த முயல்கிறார்.

அடுத்ததாக, கால்கள் இரண்டும் தரையிலிருக்க, இடையை அசைத்து நடனமாடும் ஆறுகைகளுடனுள்ள நடராஜரின்(2) சிற்பத்தொகுப்பு உள்ளது. இன்னும் வேலைப்பாடுகள் முடியவில்லையோ அல்லது இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று மனதில் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இதன் எதிரில், பாசுபத மரபைச் சேர்ந்த லகுலீசரின் சிற்பம் (3) உள்ளது.

குடவரை – 29 - லகுலீசர் - Photo credit - சகுந்தலா












இரு நாகராஜாக்கள், பத்மத்தின் அடிக்காம்பைத் பிடித்திருக்கிறார்கள். அருகில் பெண் அடியவர்கள் அஞ்சலி முத்திரையுடன் வணங்கிக்கொண்டுள்ளார்கள். பத்மத்தின் மேல் ஜடாமகுடத்துடன், கண்கள் மூடி ஊர்த்துவ லிங்கத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.  இடது கையில், லகுடம் என்னும் தடியை(கம்பு) பிடித்துள்ளார். வலது கை யோக முத்திரையில் உள்ளது.

குடவரை – 29 - சிவன் பார்வதி திருக்கல்யாணம்
- Photo credit - செந்தில்










கருவறையைத்தாண்டி, அடுத்த பக்கம் போனால், சிவன் பார்வதி திருக்கல்யாணம் சிற்பத்தொகுதி(4) உள்ளது. நான்கு கரங்களுடன், அக்கமாலையுடன், நான்முகன் பிரம்மா வேள்வித் தீ முன் அமர்ந்து திருமணத்துக்கான வேள்வித்தீயில் தன் கையில் இருக்கும் சுருக்கு என்னும் கரண்டியால் நெய்யை ஊற்றி அதை வளர்த்துக் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜடாமுடியுடன், நான்கு கரங்களுடன், மிகக் குறைந்த நகை அலங்காரங்களுடன் சிவன், பார்வதி தேவியின் கையைப் பற்றுகிறார். எளிய அலங்காரத்தில் இருக்கும் பார்வதி, வெட்கத்தால் முகம் சிவந்து தலை குனிந்து, தனது இன்னொரு கையில் இருக்கும் கமலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் உதவிக்குச் சேடிப்பெண் தயாராக நிற்கிறார். மேலிருந்து, கந்தர்வர்களும், அஷ்டதிக் பாலகர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!

குடும்ப வாழ்வு, வேடிக்கை விளையாட்டுக்கள் இல்லாமலா இருக்கும்? சிவனும் பார்வதியும் பகடையாடும் சிற்பத் தொகுதி பல செய்திகள் கொண்டுள்ளது. பார்வதி ஆடும் பொய்யாட்டத்திற்கோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ, பார்வதியைத் தடுக்கும் வகையில் சிவன் அவரது கையைப் பிடித்து மேலே நிறுத்தியிருக்கிறார்.  

இதற்குக் கீழே ஒரு ரிஷபமும், சில கணங்களும் இருக்கும் சிற்பத் தொகுதியும் உள்ளது. பகடையாட்டமும் அதன் கீழ் ரிஷபமும் இருக்கும் இந்த அமைப்பு, 21ம் குடவரையிலும் இருப்பதால், இதைப் பற்றி அறிய ஆவல் ஏற்பட்டது. மேலும் தேடிய போது, இதைப் பற்றிய விவரங்கள் ஸ்கந்தபுராணத்திலும், சிவபுராணத்திலும் பிற சமஸ்கிருத இலக்கியங்களிலும் இருக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். அதன் விவரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சிவனும் பார்வதியும் கைலாயத்தில், பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், கணங்கள், மற்ற பிற பரிவாரங்களுடன் இருக்கும் போது, நாரத முனிவர் அங்கு போகிறார். சிவனிடமும், பார்வதியிடமும் அவர்கள் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாகவும் அவர்கள் பகடையாட்டம் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

முதல் ஆட்டத்தில் பார்வதி பொய்யாட்டம் ஆடினாலும், அவர் தோற்றுவிடுகிறார்.  இரண்டாவது ஆட்டத்திற்கு, சிவன் தனது பிறைச்சந்திரன், கழுத்தணி, காதணிகளை பிணையமாக வைக்கிறார். இந்த முறை பார்வதி வெற்றி பெறுகிறார். அவர் தான் வென்ற பொருட்களைக் கொடுக்குமாறு கேட்கிறார். அப்போது சிவன் உண்மையில் தான் தோற்கவில்லை என்றும், ந்த உயிரினங்களாலும் வெல்ல முடியாதவன் என்றும், பார்வதி திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம், அவரே வெல்வார் என்கிறார்.

பார்வதி சிவனிடம் இப்போது அவர் தோற்கடிக்கப் பட்டுள்ளார். அது உண்மை. பந்தயத்தில் தோற்றவற்றைத் கொடுங்கள் எனக் கேட்கிறார். 

அதை சிவன் ஒப்புக் கொள்ள மறுக்க, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

இப்போது நாரதர் முன்வந்து, சிவனைப் புகழ்ந்து பேசி, மூவுலங்களிலும் யாராலும் வெற்றி கொள்ள முடியாதவர் அவர், பார்வதி ஏன் பொய் பேசுகிறார் எனக் கேட்கிறார். 

இதைக் கேட்டு பார்வதி சினம் கொண்டு, நாரதரை வணங்கி, சிவனின் பெருமையைப் பற்றி மட்டுமே ஏன் அவர் பேசுகிறார், தன்னால் சிவன் அடைந்த உயர்வுகளை மறந்துவிட்டாரா எனக் கேட்கிறார்.  இதைக் கேட்டு நாரதர் அமைதியாக இருந்து விடுகிறார்.

இப்போது பிருங்கி முனிவர் பார்வதியிடம், சிவன் காமனையும், தட்சனையும் அழித்ததை நினைவுபடுத்தி, (இரண்டுமே பார்வதியுடன் தொடர்புடயவை), சிவன் எவராலும் வெல்லமுடியாதவர், அப்பழுக்கற்றவர் எனக் கூறுகிறார்.

அதற்கு பார்வதி, பிருங்கிக்கு சிவனைப் பிடிக்குமென்பதால் பாரபட்சமாகக் பேசுகிறார் எனக் குறிப்பிட்டு, சிவன் ன்னுள் நிரந்தரமாக நிலைத்திருக்கிறார், பிறகு எப்படி சிவனுக்கும் அவருக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிருங்கி பேசலாம் எனக் கேட்கிறார்.

அதற்கு பிருங்கி, பார்வதியின் தந்தை தட்சனின் யாகத்தின் போது சிவனுக்கு நேர்ந்த துன்பங்களையும், பார்வதி உயிர்விட்டதையும் நினைவுபடுத்தி, பார்வதி அதிர்ஷ்டசாலி, பக்தை மட்டுமே, சிவனே எல்லோரைவிடமும் உயர்ந்தவன் எனக் கூறுகிறான்.

இவற்றால் கடும் சினமடைந்த பார்வதி, பிருங்கி அவரின் உடலிலுள்ள சதைகள் எல்லாவற்றையும் இழக்கட்டும் எனச் சாபமிடுகிறார்.

பார்வதி தான் பந்தயத்தில் வென்றவைகளையும் மற்றவைகளையும், சிவனிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்.

இதனால் சினமடைந்த சிவன், பார்வதியுடன் விவாதிக்கிறார். பார்வதியின் பதிலில் திருப்தியடையாத அவர் அங்கிருந்து காட்டுக்குச் செல்கிறார், சித்தவதம் (Siddhavata) வனத்தை அடைந்து யோகத்தில் ஆழ்கிறார். இப்படியாக, நாரதர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு கலகத்தில் முடிந்தது.

பின்னர், பார்வதி வேடப் பெண்ணாகச் சென்று சிவனின் மனதை மாற்றி, அவருடன் மீண்டும் இணைவது வேறு கதை!

ஸ்கந்த புராணம், சிவனிடமிருந்த பொருட்களை பார்வதி எடுத்துக் கொண்டபோது, ரிஷபத்தையும் அழைத்துக் கொண்டு செல்வதைக் கூறவில்லை. இதைப் பிற சில சமஸ்கிருத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. (இந்த தகவலுக்கு நன்றி: சௌரப் சக்ஸேனா, இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை)

இந்த விவரங்களுடன் நாம் அந்த சிற்பத் தொகுதியைப் (5) பார்த்தால், ரசிக்க முடியும். 

குடவரை 29, சிவன் பார்வதி பகடையாடுதல்
- Photo credit - செந்தில்










சிவன் நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளார். அருகில் அமர்ந்துள்ள பார்வதியின் கையை உயர்த்தி அவரின் மணிக்கட்டைப் பிடித்துள்ளார். மேலே விண்ணோர்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் மத்தியில் நாரதர் (தலை மட்டும் தெரிகிறது). இடது புறம், துவரபாலகருக்கும் சிவனுக்கும் மத்தியில் இருப்பவர் பிருங்கியாக இருக்கலாம். படத்தில் சரியாகத் தெரியவில்லை. பார்வதிக்கு அருகில் அவரது கணம் ஒன்று, வியப்புடன் தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கீழ்ப்பகுதியில், இடதுபுறம் பிரம்மனும், வலது புறம் விஷ்ணுவும் நின்று கொண்டிருக்கிறார்கள். நடுவில் உள்ள ரிஷபத்தை இழுக்க முன்னால் இருக்கும் பார்வதியின் கணங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். சிவனைப் பிரிய மனமில்லாமல் தயங்கும் அதனை, பின்னாலிருந்து ஒரு கணம், அதன் வாலைப் பிடித்து கடித்து காலால் உதைத்துத் தள்ள முயல்கிறது. இன்னொன்று அதன் தலைக் கொம்பைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில அதன் முதுகின் மேல் குதிக்க முயன்று கொண்டிருக்கின்றன!

அடுத்த சிற்ப தொகுப்பு, முகப்பின் வலதுபுறத்தில் உள்ளது. இதில் ராவணன் கைலாச மலையைத் தூக்க முயலும் காட்சி(6) செதுக்கப் பட்டுள்ளது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தது ராமேஷ்வரா லேனா எனப்படும் குடவரை 21. இதில், சாலபஞ்சிகா அல்லது மதனிகா எனப்படும் சிற்பங்கள் முகப்புத் தூண்களில் அமைக்கப்பட்டுள்ளன.  இவை தூண்களின் மேல் பகுதிகளில், ஒரு மரத்தின் கீழோ, கிளைகளின் கீழோ அல்லது இலைகளின் கீழோ நின்றுள்ள அழகியர்களின் சிற்பங்களாகும்.

இங்குள்ள சிற்பத் தொகுதிகளும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு முழு நீளச் சுவற்றில், சிவன் பார்வதி திருக்கல்யாணக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்வதியின் தவம், அவரை ஆட்கொள்ளும் சிவன், கல்யாணத்திற்கான நகைப்பெட்டி மற்றும் தாம்பூலப் பெட்டிகளை சுமந்து வரும் பெண்கள், சிவன் பார்வதியைக் கைபிடித்தல், திருமணத்தில் நீர்வார்த்து கொடுத்தல் என ஒரு விரிவான காட்சிப்படுத்துதல் உள்ளது.

குடவரை 21, சிவன் பார்வதி பகடையாடுதல்
- Photo credit - wikipedia













சிவன் பார்வதி பகடையாடும் சிற்பங்கள் எல்லோராவில், சில இடங்களில் இருந்தாலும், இந்தக் குடவரையில் மிகச் சிறப்பாக உள்ளது. ஆட்டத்தில் பார்வதி ஏதோ கள்ளத்தனம் செய்வதைக் கண்ட சிவன் அவது உடையை பிடித்து இழுத்து குறும்பு செய்கிறார். அவர்கள் இருவர் முன்பு முப்பரிமாணத்தில் பகடைக் கட்டமும் செதுக்கப்பட்டுள்ளது.

குடவரை 21, சிவன் பார்வதி பகடையாடுதல்
– பகடைக் கட்டம் - Photo credit – செல்லபாண்டி




 










இந்த சிற்பத் தொகுதி, உயரத்தில் அமைந்துள்ளதால், நமக்கு அந்த பகடைக்கட்டம் சாதாரணமாகக் தெரிவதில்லை. சற்று முயற்சி செய்து காமெராவை உயரப்பிடித்து படம் எடுக்கும்போது, அந்த பகடைக்கட்டத்தின் முழுக்காட்சி கிடைக்கிறது.

இதன் கீழ்ப் பகுதியில், ரிஷபத்தை இழுத்துச் செல்ல கணங்கள் செய்யும் சேட்டைகள் நம்மில் ஒரு வியப்பை, ஒரு புன்முறுவலை உண்டு பண்ணும்!

குடவரை 21, சப்த மாத்ரிகள் (ஒரு பகுதி மட்டும்)
- Photo credit – ஜோதி ராஜேந்திரன்














இங்குள்ள சப்தமாத்ரிகளின் சிற்பங்களின் அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர்களின் உடல் அமைப்பும், நகை அலங்காரமும், சிகை அலங்காரமும், முகபாவனைகளும், அவர்கள் அமர்ந்திருக்கும் வெவ்வேறு கோணங்களும், அவர்கள் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது!

குடவரை 21, சாமுண்டி சிற்பத் தொகுப்பு - Photo credit – wikipedia





 




மனித வாழ்வின் நிலையின்மையை, மனித உடலின் தவிர்க்க முடியாத முதுமையை, குறிக்கும் வகையிலோ அல்லது பிறவற்றையோ நமக்கு உணர்த்த இங்கு ஒரு பிமாண்டமான எழும்புக்கூடுகளின் சிற்பத்தொகுப்பு உள்ளது. சிறிய அளவில், பிருங்கி முனிவரின் எழும்புகூட்டுத் தோற்றச் சிற்பங்களை பார்த்திருந்த எனக்கு, இந்த பிரமாண்ட எழும்புக்கூடு சிற்பங்கள், ஒரு பெரிய துணுக்குறுதலை, பயத்தை அளித்தன. அழகிய சப்தமாத்ரிகளின் தொகுப்பின் அருகில் உள்ள சாமுண்டியின் சிற்பத் தொகுப்பு இது! ஒரு சில இடங்களில் சாமுண்டியும் சப்த அல்லது அஷ்ட மாத்ரிகளின் தொகுப்பில் ஒருவராகக் காட்டப்படுகிறார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தோன்றி மறைதல் உறுதி என்பதால் நாம் விரக்தியுடன் வாழவேண்டுமா? அதற்கும் இங்கு பதில் கிடைக்கிறது. சுப்பிரமணிய பாரதி “ரௌத்திரம் பழகு” என்று கூறியது போல, அநீதியை எதிர்க்கும் மகிஷாசமர்த்தினி, அந்தகார சம்காரம் சிற்பங்களுடன், வாழ்வின் இனிமையான தருணங்களை உணர்த்தும் சிவ பார்வதி பகடையாட்டம் சிற்பங்களும் உள்ளன. வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள தியானமும் கற்றுக் கொள் என உணர்த்தும், கண்மூடி அமைதியில் ஆழ்ந்துள்ள மகா யோக ஈஸ்வரரின் சிற்பங்களும் உள்ளன!

இங்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலான இந்துக் குடவரைகளின் முகப்பு மிக மிகச் சாதாரணமாகவே உள்ளது. ஆனால், உள்ளே நுழைந்தபின்தான் அவை பெரும் ஆச்சரியங்கள் கொண்டிருப்பதை அறிந்து கொள்ளமுடியும். வெளிப்புற சாதாரணத் தோற்றத்தால், உள்ளே போகாமல் விட்டு விட்டால் அரிய கலைச்செல்வங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுவோம்!

எரிமலைகள் கடும் சினத்துடன் வெடித்து சிதறியதால் உருவான  மலைகளைக் கூட அழகுபடுத்த முடியும் என்று 1500 வருடங்களுக்கு முன்பே அஜந்தா மற்றும் எல்லோராவில் எங்கு நோக்கினாலும் கலைச்செல்வங்களை விட்டுச் சென்றுள்ளனர், நம் முன்னோர்கள். எங்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் ஜெயக்குமார்,  இவற்றையெல்லாம் பார்க்க எனக்கு இரண்டு கண்கள் போதாது அதற்காகத்தான் இன்னும் 82 கண்களை (41 பேர்கள்) அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னது எதற்கு என்று இப்போது உணர்கிறேன். நான் பார்த்த சிற்பங்களும் பார்க்காத சிற்பங்களும் கனவுக்குள் வந்து கொண்டே இருக்கின்றன!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்புகள் மற்றும் உசாத்துணை:

1)  பொ.பி - பொது ஆண்டுக்குப் பின் - (கிபி)

2)  எல்லோர குடவரைகள் பற்றிய விவரங்கள் - The cave temples of India by  Fergusson, James, 1808-1886; Burgess, James

3)  ராஷ்டிரகூட்ட அரசன் இரண்டாம் கர்க்கனின் செப்புப் பட்டய விவரங்கள் - The Indian Antiquary Vol. XII  by J. F. Fleet, 'Sanskrit and Old-Canarese Inscriptions', in The Indian Antiquary, vol. xii, pp. 156-65

4)  குடவரை 15 ல் உள்ள தந்திதுர்க்கனின் கல்வெட்டு விவரங்கள் 

5)  குடவரை 15 ல் உள்ள தந்திதுர்க்கனில் கல்வெட்டிலிருந்து அவனது வம்சாவளியைப் பற்றிய விவரங்கள் தெரிகின்றன. மேலும் அவருக்கும் எல்லோரா குடவரைகளுக்கு சம்பந்தம் இருந்ததும் தெரிகிறது

6)  தந்திதுர்க்கனின் சித்தப்பா முதலாம் கிருஷ்ணா. ஆங்கிலத்தில் பொதுவாக uncle எனப்படுகிறார்.

7)  ராஷ்டிரகூட்ட மன்னன் தந்திதுர்கன் பற்றிய விவரங்கள்

8)  பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பற்றிய விவரங்கள்

9)  ஆங்கிலேயர் காலத்தில் எல்லோரா “Elura“ என்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது - A guide to Elura Cave temples by Dr James Burgess (1832-1916), British Archaeologist

10)  சர்வதோபத்ரம் - குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தாய்லாந்தில் உள்ள கோயிலைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை

11)  சிவன் பார்வதி பகடையாட்டம் – ஸ்கந்த புராணம், Skanda Purana  by G. V. Tagare | 1950 |

12)  சிவன் பார்வதி பகடையாட்டம் – The eternal dice game of Shiva and Parvati Saurabh Saxena | 26 May 2022 |

13)  சிவன் பார்வதி பகடையாட்டம் - ஸ்கந்த புராணம் 

14)  Lord Shiva and Goddess ParvatiPlaying Chaupar -

15)  சாமுண்டி பற்றிய விவரங்கள் 

16)  சப்தமாத்ரிகள் விவரங்கள். 

===================================================================

கூடுதல் படங்கள்:

 

Cave 16 - Kailasanath temple floor plan
- Photocredit architexturez.net














Cave 16 - Kailasanath temple floor plan
- Photocredit architexturez.net













Cave 16 - Kailasanath temple layout
- artistic representation
- Photocredit kaarwan.com