கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில், குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது. மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.
சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து
(பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும்
வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப
மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.
எல்லோராவில் 100க்கு மேற்பட்ட
குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.
இங்கு
13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),
16 இந்து குடவரைகள் (எண்14-29),
5 சமணக் குடவரைகள் (எண்
30-34) உள்ளன.
இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான
நீளத்தில் அமைந்துள்ளன.
கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின்
வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக்
கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம்
திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது.
ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!
உலக
அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக
குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது
வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால்
தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று
வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின்
முதல் குடவரை.