பயப்பட வேண்டாம். தங்க பஸ்பம் சாப்பிடறது, ஆட்டுப் பால் குடிக்கறதுன்னு நான் கடி போட மாட்டேன். அதை விட சுலபமான வழி எங்கிட்ட இருக்கு. இலவசமாவே சொல்லித் தரேன். தமிழில் வலைப் பதிவு எழுதறதுதான் அந்த எளிமையான வழி. இதென்னாது, மொட்டத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடற கதையா இருக்கேன்னு சண்டைக்கு வராதீங்க. மேலே படியுங்க. நிச்சயமா ஏமாத்த மாட்டேன்




நிறைய வலைப்பதிவர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கும் போது, அவங்க அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்யும் போது, நிறைய புதிய விசயங்கள் நம் கண்ணுக்கு தட்டுப் படுகின்றன. நான் TVS50 என்ற மிக உபயோகமான வலைப்பதிவைக் கண்டு பிடித்தது அப்படித்தான்
ரொம்ப நாளா, தமிழில் எழுதாமல் விட்டு விட்டதால், "லள", "ரற" (வேலையா, வேளையா) என்று குழம்புகிறோம். தப்பாக எழுதக் கூடாது என்று, தன்மானம் தடுப்பதால், "லள", "ரற" எங்கு எதனை உபயோகிக்க வேண்டும் என மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோம்.
தமிழ் தட்டச்சுப் பழக்கம் இல்லாததால், அதிகம் நேரம் பிடிக்கிறது. காகிதத்தில் எழுதி வைத்து பிறகு தட்டச்சு செய்ய முயற்சிக்கும்போது, கையெழுத்துப் பயிற்சி கிடைக்கிறது.
ரொம்ம நாளாக தமிழ், ஆங்கிலக் கலவையில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்ததால், சில தமிழ் வார்த்தைகளை நாம் பயன் படுத்துவதே இல்லை. அவற்றை அடிக்கடி எழுத்தில் உபயோகிப்பதால், பேசும் போது அவற்றைப் பயன்படுத்த இருந்த தயக்கம் குறைகிறது.
நாம இவ்வளவு கஷ்டப் பட்டு எழுதறோமே, அது மக்களுக்குப் போகணும்கிற நல்ல எண்ணத்தில், (நம்பாதிங்க, Page hit எப்படி ஜாஸ்தி பண்ணுறதுங்கற சுத்தமான சுய நலம்தான்) Tamilish, Tamilmanam, க்கு செல்வதால், பொது அறிவு விரிவடைகிறது.
மக்கள் கேட்டுக் கொண்டதற்காக, அதிகம் எழுத வேண்டி இருப்பதால், கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவழித்தால், வீட்டில் கிடைக்கும் திட்டைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமை உணர்வு அதிகரிக்கிறது.
நம் வலைப் பதிவை எப்படி அலங்கரிப்பது என்று யோசிக்கும் போது, HTML கொஞ்சம் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம். W3School ங்கிற HTML Tutorial page யை நான் கண்டு பிடிச்சது இப்படித்தான்.
வலைப் பதிவிடுவது, நம்ம மூளைக்கு ரொம்ம வேலை கொடுக்குதில்லையா? மூளை சுறுசுறுப்பா இருந்தா, நாம சுறுசுறுப்பாத்தானே உணர்வோம். அப்புறம், நாம இளமையாத்தானே நெனச்சுக்கப் போறோம். இப்ப சொல்லுங்க, நான் சொன்ன எளிய முறை உண்மைதானே!
முக்கியமான பின் குறிப்பு:
எதுவுமே சும்மா வந்துடாது நயினா. எழுதறதே கதின்னு இருந்தா, என்ன கஷ்டம் (பதிவுலக போதை ) வரும்னு இங்க விரிவா அன்பர் எழுதியிருக்கார். ஓரு தரம் அதையும் படிக்கறது நல்லது.
--