கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் "கற்றது தமிழ்" படம் பார்த்தேன். எல்லோருக்கும் படிப்பும் தொழிலும் மனதுக்கு பிடித்தமானதாக அமைந்து விடாது. இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு விருப்பமான படிப்பு அமைந்தாலும், அவனுடைய தொழில், வாழ்க்கையின் வசதிகளைக் கொடுக்கவில்லை. இது தமிழ் மட்டுமல்லாது, தொழில் சார்பில்லாத கல்வி பயின்று கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் இக் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
அண்மையில் படித்த ஓரு செய்தி மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. நாமக்கல், குருசாமிபாளையம் தமிழ் ஆசிரியர் எஸ். வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு, ஆசிரியர் தினத்தன்று, அவரது முன்னாள் மாணவர்கள், ஓரு வீட்டைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.
1954 முதல் 2004 வரை தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் வெங்கட்ராமன் அவர்கள் பணியாற்றியுள்ளார். தனது இரண்டு மகள்களுக்கு கல்யாணத்தை முடித்து, மனைவி மற்றும் மகனுடன் வசிக்கும் இவருக்கு, மாத ஓய்வு ஊதியமான ரூ9000, ஓய்வைக் கொடுக்கவில்லை. வீட்டு வாடகை சுமையும் சேர்ந்து கொண்டது.
2007ல் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், தங்களுடைய ஆசிரியரின் சிரமங்களைக் கேள்வி பட்டு, ஓரு சொந்த் வீட்டை கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் ரூ10 லட்சம் திரட்டி, கீழ் தளத்தில் ஆசிரியர் வசிக்க வசதியாகவும், மேல் தளத்தில் அவரது மகனுக்குமாகவும் அழகிய வீட்டைக் கட்டி கொடுத்துள்ளனர்.
முதலில் இதற்குத் தயக்கம் தெரிவித்த வெங்கட்ராமன் அவர்கள், முன்னாள் மாணவர்களின் அன்பு வற்புறுத்தலினால் ஒப்புக் கொண்டார்.
இத்தனை மாணவர்களின் அன்புக்கு பாத்திரமாக நடந்து கொண்ட வெங்கட்ராமன் ஆசிரியர் அவர்களுக்கு ஓரு "ஓ" போடுவோம். ஆசிரியருக்கு உதவி செய்த முன்னாள் மாணவர்களுக்கு ஒரு மிகப் பெரிய "ஓ" போடுவோம்.
செய்தி,படங்களுக்கு Chennai Online, The Telegraph மற்றும் Decan Herald க்கு மிக்க நன்றி.
மேலும் விவரங்களுக்கு:
telegraphindia.com
chennaionline.com