தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 28 மே, 2024

ரிஷப குஞ்சரம் - 1

சில சமயங்களில் நாம் ஒன்றைத் தேடும்போது சிறப்பான வேறு சிலவும் நம் கண்ணில் படும். பெரும்பாலும் நாம் அவற்றை ஒதுக்கிவிடுவோம். இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. இப்படி நம்முடைய தேடுதல் இருக்கிறது என்று புரிதல் இருந்தால், அவற்றையும் குறித்துக் கொண்டு பின் நம்முடைய முதன்மைத் தேடலில் ஈடுபடலாம். சமீபத்தில் நான் கண்ட பேருண்டப் பறவையைப் பற்றித் தேடிக் கொண்டிருந்தபோது அப்படி ஒதுக்கி வைத்த ஒன்று மிகச் சிறப்பானது எனப் பிறகு புரிந்து கொண்டேன்.

அழகிய நுட்பமான மரச் சிற்பங்களுடைய முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட இலங்கையில் உள்ள ஒரு கோயில் மண்டபத்தை தற்செயலாக இணையத்தின் வழிக் கண்டடைந்தேன். இது கண்டி நகருக்கு அருகில் எம்பக்கே என்னும் ஊரில் எம்பக்கே கோயில்(Embekke Devalaya) என அழைக்கப்படுகிறது. இது 14ம் நூற்றாண்டில் மூன்றாம் விஜயபாகு மன்னனால் கட்டப்பட்ட ஆறுமுகன் கோயில். 18ம் நூற்றாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது. இதன் சிறப்புகளுக்காகவே இது யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Woodcarving of Rishaba Kunjaram  at Embekke Devalaya- Sri Lanka,
Photo credit: Wikipedia





















அங்குள்ள இந்த மரச் சிற்பத்தின் புகைப்படங்களைப் பார்த்தபோது, இது சற்று சிதைந்து இருந்ததாலும், இதை விடச் சிறப்பான பிற சிற்பங்களின் படங்கள் கண்ணில் பட்டதால், இதற்கு அதிகம் கவனம் கொடுக்கவில்லை.

பிறகு ஆனந்த குமாரசுவாமி எழுதிய இடைக்கால சிங்களக் கலை(Medeival Sinhalese art) என்ற நூலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது இந்தச் சிற்பத்தின் ஒரு மாதிரிப்படம் இருந்தது. அது உசம்ப குஞ்சரம் (usamba-kuñjara) என இலங்கையில் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இது விரிஷப குஞ்சரம் எனவும் அழைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். யானை குறிப்பாக ஆண் யானை, குஞ்சரம் எனவும் அழைக்கப்படுகிறது என பின்னர் தெரிந்து கொண்டேன். உசம்ப என்றால் சிங்கள மொழியில் ரிஷபம் என்று அர்த்தம். குஞ்சரக்காளை எனவும் குறிக்கப்படுகிறது.

ரிஷப குஞ்சரம் என்ற பெயர் புதுமையாகவும் கவர்ச்சியாகவும் எனக்குத் தோன்றியது. இதைப் பற்றி தேடிய போது கல்லால் ஆன ரிஷப குஞ்சரச் சிற்பங்கள் கோயில்களில் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

என்னை மிகவும் கவர்ந்தது திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் இருக்கும் இந்தச் சிற்பம்தான்.

ரிஷப குஞ்சரம் - திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில்
Photo Credit: indiancolumbus.blogspot.com
  














ரிஷப குஞ்சரத்தின் சித்தரிப்பில் ஒரு காளை மாடு (ரிஷபம்) மற்றும் ஒரு ஆண் யானை (குஞ்சரம்) ஒன்றை ஒன்று நோக்கியவாறு நின்ற நிலையில் இருக்கும். இரு தலைகளும் இணைந்து ஒரே தலையாகக் காட்டப்பட்டிருக்கும்.

நம் கவனத்தை சிறிது நேரம் ரிஷபத்தின் உடல்மீது மாத்திரம் வைத்துவிட்டு, சற்று மேலே நோக்கினால், நடு முதுகின் புடைப்பு, அதன் அருகில் கொம்பு, கீழ் நோக்கிய காது, அதன் அருகில் புடைத்த கன்னக் கதுப்பு, அதன் மேலே வளைந்த புருவத்துடன் கண்கள், மிக மெல்லிய கோடுடன் கூடிய வாய், தலையை தூக்கிய நிலையில் இருக்கும், அழகிய திண்ணிய ரிஷபம் நம் காட்சியில் தெரியும்.

பிறகு நம் கவனத்தைச் சிறிது நேரம் யானையின் உடல்மீது மட்டும் வைத்துவிட்டு, தலைப் பக்கம் நோக்கினால் ஒரு அதிசயம் நடக்கும். நம் மனது தானாகவே யானைத் தலையின் பாகங்களை கண்டுபிடித்து ஒரு முழுமையான யானையை நமக்குக் காட்டிவிடும்!

முன்பு ரிஷபத்தின் வாயாகத் தெரிந்தது தற்போது யானையின் தலையின் பின்பக்கமாகத் தெரியும், அதன் கீழ் அகலமான காதை நம் மனம் உருவகம் செய்து கொள்ளும்! ரிஷபத்தின் புடைத்த கன்னக் கதுப்பு, யானையின் புடைத்த கன்னக் கதுப்பாகத் தெரியும்! முன்பு ரிஷபத்தின் கொம்பாகத் தெரிந்தது இப்போது யானையின் தந்தமாகத் தெரியும்! ரிஷபத்தின் நடுமுதுகின் புடைப்பு தற்போது யானைத் தும்பிக்கையின் வளைந்த நுனியாகத் தெரியும். என்ன ஒரு மாயக் காட்சி!

தற்கால உளவியல் கோட்பாடுகளின்படி, நம் மனம் எதைப் பார்க்க விரும்புகிறதோ அதையே சிருஷ்டித்துக் கொள்கிறது என்பதற்கு இந்தச் சிற்பம் ஒரு எளிய உதாரணம் அல்லவா! நம் ஆன்மிகச் சிந்தனையாளர்கள் “கயிற்றரவு” என்று கூறியதும், உலகின் மாயைகளை கடந்து செல்வதைப் பற்றிக் கூறியவற்றையும் இதிலும் பொருத்திப் பார்க்கலாமல்லவா!

அழகிய சிற்பங்களை வடிப்பதில் நம் பண்டைய சிற்பிகள் கைதேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அழகியலிலிருந்து ஒருபடி மேலே சென்று நம் ஆழ்மனதுக்கும் வேலை கொடுக்கும் மாயக் காட்சிகளைக் காட்டும் அவர்களின் திறமையை, அதுவும் எந்த ஒரு பிழையையும் எளிதில் சரிசெய்ய இயலாத மரத்திலும் கல்லிலும் அவற்றைச் செதுக்கியதை என்னவென்று சொல்ல!

இணையத்திலும் நண்பர்களிடமும் விசாரித்தபோது, ரிஷப குஞ்சரச் சிற்பங்கள் தென்னிந்தியாவில் நிறைய இடங்களிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன எனத் தெரிந்து கொண்டேன். சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.

கர்நாடகாவில்
1. பாதாமி (வாதாபி-Badami) குடவரைக் கோயில்–1,
2. விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல் (Pattadakal)
3. கோண்டிகுடி(Kontigudi) அல்லது குந்திக்குடி(Kuntigudi) கோயில் தொகுதி, அய்கொளே அல்லது ஐகொளே(Aihole)
4. ஹசாரா ராமர் கோயில், ஹம்பி,
5. செலுவ நாராயணா கோயில், மேல்கோட்டை (Melkote).

ஆந்திராவில்
1. மாதவராய கோயில், கண்டிகோட்டா (Gandikotta),
2. கோதண்ட ராமர் கோயில், ஒண்டிமிட்டா (Vontimitta).

தமிழகத்தில்
1. ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்,
2. வில்வநாதேசுவரர் கோயில், திருவல்லம்,
3. ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்,
4. கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், சென்னை,
5. கச்சபேஸ்வரர் கோயில், திருக்கச்சூர்,
6. காரைக்காலம்மையார் கோயில், காரைக்கால்,
7. கம்பஹரேஸ்வரர் கோயில், திரிபுவனம்,
8. ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்,
9. சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்,
10. ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்,
11. ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம்,
12. வெங்கடாசலபதி கோயில், கிருஷ்ணாபுரம்,
13. அழகிய நம்பிராயர் கோயில், திருக்குறுங்குடி

இலங்கையில்
1. ஸ்ரீ தலதா மாளிகை, புத்தரின் புனிதப் பல் ஆலயம், கண்டி,
2. எம்பக்கே தேவாலயம், கண்டி மாவட்டம்.

கோயில்களில் கற்சிற்பங்களாக இருக்கும் ரிஷப குஞ்சரச் சித்தரிப்புகள், வித்தியாசமாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் முன்மண்டபத்தின் கூரையில் வண்ணம் பூசப்பட்ட புடைப்புச் சிற்பமாகவும், காரைக்காலம்மையார் கோயிலின் நுழைவுமண்டபத்தின் கூரையில் வண்ணம் பூசப்பட்ட ஒவியமாகவும் நம் தலைக்குமேலே உள்ளன!

இவையெல்லாம் நம் நிலப்பரப்பில் எங்கெங்கே இருக்கிறதெனப் பார்க்க, கூகுள் செயலியின் வரைபடத்தில் இட்டுப் பார்த்தேன். அய்கொளேயில் ஆரம்பித்து திருக்குறுங்குடி வரைக்கும் 2300கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என அது காட்டியது! (ஸ்ரீலங்கா பயணத் தூரம் தனி!)

Google map locations and route of  depictions of Rishaba Kunjaram in India and Sri Lanka




















இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டவைகளில் எது பழமையானது என ஆராய்ந்ததில் கர்நாடகாவில் உள்ளவையே மிகப் பழமையானவை எனத் தெரிகிறது.

பாதாமி குடவரைக் கோயில்–1, பட்டடக்கல் விருபாக்‌ஷா கோயில் மற்றும் கோண்டிகுடி, அய்கோளே கோயில்களின் ரிஷப குஞ்சரச் சிற்பங்கள் ஆறிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் உருவாக்கப்பட்டவை. இவை வாதாபி(பாதாமி) சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர் அல்லது ஆரம்பகால சாளுக்கியர்கள்) காலத்தில் உருவானவை.

பாதாமி குடவரை-1 – Photo credit : Wikimedia Commons




















பாதாமி குடவரை-1 – Photo credit : Shanthiraju.wordpress.com











மிக எளிமையாக உள்ள இச் சித்தரிப்பு பின்னாட்களில் பிற இடங்களில் மிகவும் மெருகுகூட்டப்பட்டுள்ளது.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (12ம் நூற்றாண்டு), திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் (12ம் நூற்றாண்டு) சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற எல்லா கோயில்களும் பல்லவ, சோழ, ஹொய்சாள, விஜயநகரப் பேரரசுகளுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளன. பெரும்பாலானவை விஜயநகரப் பேரரசர்கள் அல்லது அவர்களின்கீழ் இருந்த சிற்றரசர்களால் கட்டப்பட்டு அல்லது விஸ்தரிக்கப்பட்டு அல்லது புணருத்தணம் செய்யப்பட்டவை. ஓரு சிறப்புச் சிற்பம் வெவ்வேறு ஆட்சிக் காலங்களில், வெவ்வேறு அரசர்களால், வெவ்வேறு இடங்களில் அமைப்பட்டது இப்பெரிய நிலப்பரப்பின் கலை இணைப்பையும், கலைஞர்கள் எல்லோருக்கும் பொதுவாக பணிபுரிந்ததையும் காட்டுகிறது.

முக்கியமாக எந்த ஒரு சிற்பமும் இன்னொன்றைப் போல் இல்லை. அவை அனைத்தும் தனித்துவமாகவே விளங்குகின்றன.

ரிஷபம் சிவனின் வாகனமாகவும், யானை லட்சுமியின் வாகனமாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த ரிஷபம் மற்றும் யானையின் தலைகள் இணைந்த சிற்ப அமைப்பு சைவ, வைணவ இணைப்பாகவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தில் ரிஷப குஞ்சரத்தில், ரிஷபத்தின் மேல் சிவன் குடும்பமும், யானையின் மேல் விஷ்ணு குடும்பமும் அமர்ந்துள்ள ஒரு அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. இந்தக் கோபுரம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ரிஷப குஞ்சர அமைப்பு
  
 Photo credit: Pon Mahalingam




















இதைப் போன்ற ஒரு அழகிய ஓவியம் ராஜா ரவி வர்மாவால்(1848-1906) வரையப்பட்டுள்ளது. ரிஷபத்தின் மேல் சிவன், பார்வதி, குழந்தை விநாயகர் அமர்ந்துள்ளனர். யானை மேல் விஷ்ணுவும், லட்சுமியும் அமர்ந்துள்ளனர். விஷ்ணு கைகளில் சங்கு மற்றும் கதாயுதம் வைத்துள்ளார். சிவனும் ஒரு மேற்கையில் சங்கு வைத்துள்ளார். இன்னொரு மேற்கையில் திரிசூலம் உள்ளது. லட்சுமி முன் பக்கம் சாய்ந்து, கையை நீட்டி எதிர்ப்புறம் அமர்ந்துள்ள குழந்தை விநாயகரைக் கொஞ்சுவதுபோல உள்ளது!

Raja Ravi Varma paining, Photo credit: artsandculture.google.com




















சிவன் மற்றும் விஷ்ணுவின் இணைப்பைக் குறிக்கும் இந்த ஓவியத்துக்கு ராஜா ரவி வர்மா மிகப் பொருத்தமாக ஹரி ஹர இணைப்பு (हरिहरभेट, Hariharabhet) எனப் பெயரிட்டுள்ளார்.

நான் இந்த ரிஷப குஞ்சர அமைப்பை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தேன். ரிஷபமும் யானையும் உருவில் வேறுபாடு கொண்டவர்கள். ரிஷபமும் வலிமையான சிறப்பான விலங்கே. இருந்தாலும், ஒத்த வயதுடைய ரிஷபத்தைவிட யானை அதிக உயரம், பருமன், வலிமை கொண்டதாக இருக்கும். சில சிற்பங்களில் அவை ஒரே உயரமாகக் காட்டப்பட்டாலும், பெரும்பாலான சிற்பங்களில் யானை பெரியதாகவே காட்டப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.

சிற்பத்தில் ரிஷபமும் யானையும் சண்டையிடுவதாகக் காட்டப்படவில்லை. அவை அணைத்து கொண்டுள்ளன எனக் கருதவே வாய்ப்புள்ளது. இவ்வணைப்பு, வலிமையில், அளவில் வேறுபட்ட இரு வேறு அமைப்புகளின் அணைப்பு எனவும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ராமன் மற்றும் அணில் பந்தம், பண்டைய பேரரசுகள் மற்றும் சிற்றரசுகள் பந்தம் என நீட்டிக் கொண்டே போகலாம்.

இத்தகைய பந்தங்கள் இந்த நவீன காலத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. இதனை முக்கியமாக உலக நாடுகளின் அரசாங்கங்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், இந்தப் பூமி இன்னும் அமைதியாக, செழிப்பாக இருக்குமல்லவா!

References:
https://en.wikipedia.org/wiki/Embekka_Devalaya
https://archive.org/details/mediaevalsinhale0000coom/page/n5/mode/2up
https://tinyurl.com/mr3pkfw9
https://karnatakatravel.blogspot.com/2022/11/kunti-gudi-complex-aihole-part-2.html
https://veludharan.blogspot.com/2020/08/sri-kapaleeswarar-temple-arulmigu.html
https://www.facebook.com/share/2ZkdLyJVsj896ADd/?mibextid=WC7FNe