முக்கியமான கோயில்கள் மற்றும் கோயில் மரபு பற்றிய நூல்களில், பாலும் ஏடும் போல கோயில்கள் தகவல்களுடன் கல்வெட்டுக்களின் தகவல்களும் இருக்கும். சில சமயம் அந்த கோயிலைக் கட்டிய/விரிவுபடுத்திய/திருப்பணி செய்த அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார் செய்த பணிகள் பற்றிய விவரங்களும் காணப்படும்.
சில சமயங்களில்
கோயில் பராமரிப்புக்கு
அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார் கொடுத்துள்ள தானங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.
உதாரணம் :
"சாலிவாகன சக ௵ (அதாவது ஆங்கில வருடம் 1799) க்கு சரியான தாத்ரு ௵ ஆனி ௴11௳ யில் திரு அரசமாநகரத்திலெழுந்தருளியிரா நின்ற ஶ்ரீசோமேஸ்வர சுவாமியின்
கார்த்திகைவுச்சவத்துக்காக பென்சன் சராங்கு சதுப்பேரி சபாபதி முதலியார் வைத்த வீடு
தற்மம்"
இது அல்சூர் சோமேஸ்வரர் கோயிலுக்கு தனியார் ஒருவர் ஓரு வீட்டைத் தர்மமாக எழுதி வைத்த கல்வெட்டு.
அரசர்கள் நேரடியாகவே கோயில்
பராமரிப்புகளைச் செய்யலாம் அல்லவா? இப்படி
கோயில்களுக்கு தானங்கள் கொடுத்து அதன் மூலம் இதைச் செய்வது 1) கோயில்களின் தற்சார்பு, 2) சுற்றிலும் உள்ள
சமூகத்தின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை ஊக்குவித்தல், 3) அந்த அரசனக்குப் பிறகோ, வேற்று நாட்டு
அரசாட்சியிலோ கோயில் பணிகள் தடையில்லாமல்
தொடர்தல் என்ற இன்ன பிற நன்மைகள் உள்ளன என நான் நம்புகிறேன்.
அப்படி என்ன பெரியதாக கோயில் பராமரிப்புகள்/பணிகள் உள்ளன?
- தினமும் கோயில் உள்ளும் புறுமும் சுத்தமாக்குதல்
- திருவிழாக்களின் போது கோயில் மதில்களை, சுவர்களை,கோபுரங்களைச் சுத்தம் செய்தல், வண்ணம்
பூசுதல், அலங்கரித்தல்
- கோயில் நந்தவனத்தை, கிணற்றை,
குளத்தைப் பராமரித்தல்
- தினமும் தெய்வ பூஜைக்கும், மக்களுக்கும் அளிக்கும் பிரசாதத்தை தயாரித்தல்
- தொடர்ந்து எரியும் தீபங்களுக்கு ஏற்பாடு செய்தல்
- பூஜைக்குத் தேவையான மலர்களுக்கு ஏற்பாடு செய்தல்
- கோயில் பூஜாரிகள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் அளித்தல்
முதலியவை ஆகும்.
![]() |
அல்சூர் சோமேஸ்வரர் கோயில் வருடம் 1890 Photo credit : wikipedia |
இந்தப் படம் 1890வாக்கில் எடுக்கப் பட்ட பெங்களுர் அல்சூர் சோமேஸ்வரர் கோயிலின் புகைப்படம். கோபுரத்தின் கீழ்ப் பாகத்தில் மட்டும் சுண்ணாம்புப் பூச்சு உள்ளது. மேல் பாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
![]() |
சேதங்கள் |
மதில் சுவர்களின் மேல் பாகம் சேதமடைந்துள்ளது, கோபுரத்தின் கீழே கற்கள் குவிந்துள்ளன, கோயில் வாகனத்தின் மேல் புற்கள் காணப்படுகிறது.
![]() |
தீபஸ்தம்பத்தின் போதிகை கீழே கிடக்கிறது |
தீபஸ்தம்பத்தின் பீடத்தின் பட்டைக் கற்கள் சேதமடைந்து வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. அதன் மேல் எதோ ஒரு கல்லோ/சிலையோ கிடக்கிறது.
மிக மிக்கியமாக, இந்த தீபஸ்தம்பம் (விளக்குக் கம்பம்) ஏறத்தாழ் 40 அடி உயரம் உள்ளது. (படத்தில் 5-6 அடி உயரம் உள்ள மனிதர்கள் நிற்கும் இடத்தை வைத்துக் கம்பத்தின் உயரத்தை நான் தோரயமாகக் கணக்கிட்டேன்!) இதன் உச்சியில் இருக்க வேண்டிய போதிகை கீழே பீடத்தின் மேல் கிடக்கிறது. இது எப்படி நடந்தது என்பது விந்தையே.
![]() |
தீபஸ்தம்பம் - செப்டம்பர் 2023ல் |
![]() |
தீபஸ்தம்பத்தின் உச்சியில் போதிகை - 2023 செப்டம்பர் |
நான் கோயிலுக்குப் போனபோது, முதலில் பார்த்தது மிக அழகாக, கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த தீபஸ்தம்பத்தையே ! அதுவும்,அந்த போதிகை திரும்பவும் உச்சியில் பொருத்தப் பட்டுள்ளது. பீடம் சரிப் படுத்தப் பட்டுள்ளது. நாம் அதிர்டசாலிகளே! இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவை சரி செய்யப் பட்டு இருக்க வேண்டும்.
ஓரு நீளமான பாறையைத் தேர்ந்தெடுத்து, சரியாக வெட்டி, சிற்ப வேலைப்பாடுகள் செய்ய வேண்டும். பிறகு கோயில் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். அது உறுதியாக நிற்க, நிலத்தின் கீழ் அஸ்திவாரம் சரியான முறையில் அமைக்க வேண்டும். இதையெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சரியாகச் செய்து, அந்தக் கம்பம் செங்குத்தாக நிற்கும் படி செய்த நம் முன்னோர்கள் எவ்வளவு திறமைசாலிகள்.
![]() |
வருடம் 2010, Photo credit: gettyimages |
2010 வாக்கில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படத்தில், சுற்றுச் சுவர், கோபுரத்தின் இரு பக்கங்களிலும் சரி செய்யப் பட்டுள்ளது. வலதுபுறம் புதிய வண்ணப்பூச்சு உள்ளது. வலதுபுற சுவரின் மேல் பகுதியில் வளைவு காணவில்லை. மாற்றிக் கட்டப் பட்டுள்ளது.
இடது புறம் சுற்றுச் சுவர் பழையதாகவே இருக்கிறது. குறிப்பாக அதன் மேல் பகுதி 1890ல் எடுக்கப் பட்டுள்ள படத்தில் உள்ளது போல வளைவாக உள்ளது. மேலே காரையோ/சிமெண்டோ பூசப் பட்டு, செங்கல்கள் தெரியவில்லை. இங்குள்ள வண்ணப் பூச்சு பழையதாக உள்ளது. அதற்கு முன் இருந்த கோயில் வாகனம் இல்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய கடைபோன்ற கட்டிடம் உள்ளது.
கோபுரத்தின் வண்ணப் பூச்சு சற்று பழையதாக உள்ளது. தீபஸ்தம்பம் கம்பீரமாக நின்றுள்ளது.
![]() |
வருடம் 2010 அல்லது 2011 Photo credit: http://kskrishnan.blogspot.com |
2011வாக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்,இடது சுற்றுச் சுவருக்கு முன்னால் இருந்த சிறிய கட்டிடம் நீக்கப் பட்டுள்ளது. சுவரின் வளைவான மேல் பகுதி சேதமடைந்துள்ளது.
![]() |
வருடம் 2010 அல்லது 2011 Photo credit: http://kskrishnan.blogspot.com |
இந்தப் படத்தில், கோயிலின் முன் கருங்கற்கள் குவிக்கப் பட்டுள்ளன. சுற்றுச் சுவர் சீரமைப்புக்காக இருக்க வேண்டும்.
![]() |
வருடம் 2017 - கோயிலின் பின்பக்கச் சுற்றுச் சுவர் photo credit: Bangalore Mirror |
2017ல் ”பெங்களூர் மிர்ரர்” என்ற பத்திரிக்கை, கோயிலின் பின்பக்கச் சுற்றுச் சுவரின் ஒருபகுதி (சுந்தர முதலியார் தெருவில்) சேதமடைந்துள்ளதையும், சில வருடங்களுக்கு முன், கோயில் அதிகாரிகள் கோபுரத்தின் இருபக்கமும் உள்ள சுற்றுச் சுவரை மட்டும் புதிதாகக் கட்டியதையும் குறிப்பிடுகிறது.
![]() |
மார்ச் 2019 - கோயிலின் பின்பக்கச் சுற்றுச் சுவர் புதிதாகக் கட்டப்படுகிறது photo credit: Bangalore Mirror |
2019ல் ”பெங்களூர் மிர்ரர்” என்ற பத்திரிக்கை, கோயிலின் சுற்றுச் சுவர் சுந்தர முதலியார் தெருப் பக்கம் புதிதாக கட்டப் பட்டுக் கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது
சுற்றுச் சுவர்கள் பெரும்பாலும் இரட்டைச் சுவர்களால் ஆனதாக இருக்க வாய்ப்பு உள்ளது. இங்கும் கூட இந்த புதிய சுற்றுச் சுவரும் இரட்டைச் சுவராகவே காணப்படுகிறது
![]() |
2023 செப்டம்பர், முன்பக்கச் சுற்றுச் சுவர் |
இது 2023ல் நான் எடுத்து படம். பழைய கற்சுவரின் அழகு இல்லை என்றாலும், சிமெண்ட் கற்கள் இல்லாமல் கருங்கற்கள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலே!
இப்பொழுது கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கச் சுற்று சுவர்கள் முற்றிலும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பக்க சுற்றுச் சுவர் முக்கால் வாசி நீளத்திற்கு பழைய சுவராகவே உள்ளது.
![]() |
வடக்குப் பகுதி உட்புறம், தூரத்தில் புதிய சுவர் இணைவது தெரியும் |
![]() |
பழைய சுவரும், புதிய சுவரும் இணையும் பகுதி. |
பழைய சுவர் இரட்டைச் சுவராக(இரண்டு வரிசைகளாக) உள்ளது. உறுதிக்காக, குறுக்கே வெளியே மாட்டிக் கொண்ட வகையில் ஆங்காங்கே கற்கள் உள்ளன. உச்சியில் இரண்டு வரிசைகளுக்கும் குறுக்காக, சுவற்றில் இருந்து வெளியெ நீட்டிக்கொண்டு, கற்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் மழை நீர் உள்ளே புகாதவாறு, செங்கற்கல்களால் கட்டமைப்பு.
இப்போது அந்த இணைப்புப் பகுதி மோசமாக விடப் பட்டுள்ளது. எந்த ஒரு அழகுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் எப்படி மோசமாக விட்டார்கள் எனத் தெரியவில்லை. இப்போது இதில் மழை நீர் புகுந்து அந்தப் பழைய சுவர் சுலபமாகச் சேதமாகலாம். நம் முன்னேர்கள் எவ்வளவு நுட்பமாகக் கட்டியது எவ்வளவு சுலபமாகக் கைவிடப் பட்டுள்ளது. இதைப் பார்த்தவுடன் நிறைய மக்கள் வந்து போகும், நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு பழமையான கோயிலிலுக்கே இப்படி ஓரு நிலையா என மனம் பதைபதைத்தது. நான் இந்தக் கோயிலுக்கு வருவது இரண்டாம் முறை, இதைப் பார்ப்பது முதல் முறை. ஏதாவது செய்து இந்த பழமையான சுற்றுச் சுவர் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற ஆசை. இந்தப் பிரச்சினையை எப்படி, யாரிடத்தில் எடுத்துச் செல்வது எனத் தெரியாததால் பெரிய வருத்தம்.
![]() |
வடக்குப் பகுதி வெளிப்புறம் |
வடக்குப் பக்க சுற்றுச் சுவரின் வெளிச் சுவரின் கீழ்ப் பகுதியில் ஒரு சில இடங்களில் சிறிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதையெல்லாம் தெரிந்து கொள்ள இவ்வளவு தேடுதல்கள்
தேவையா? கோயில்
அதிகாரிகளையோ, அரசாங்க ஆலயத்துறையையோ அணுகினால் தகவல்கள் கிடைக்குமல்லவா? உண்மையில் அரசாங்கித்திடம் இருந்து தகவல்கள்
பெறுவதற்கு,
அதுவும் இத்தனை வருடத்திற்குப் பிறகு என்பது
சற்று கடினமே. மேலும் நாம் விசாரிக்கும் பொழுது, பெரும்பாலோர் மிகுந்த தன்னம்பிக்கையுடன்
நம்மிடம் பேசுவார்கள். அவர்கள் சொல்லும் விசயங்களில் ஆதாரங்கள் மிகக் குறைவே.
நம்பகமில்லாத எதையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதற்காகவே இந்தப்
பரவலான தேடல். அதிலிருந்து கிடைக்கும் புரிதலை இங்கு கொடுத்துள்ளேன். ஓருசில
விசயங்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பும் உள்ளது.
******************************************************
அடுத்ததாக கோயில் வளாகத்தின் தரையின் பராமரிப்பு பற்றி
வேறு ஒரு கோயில் வளாகத்தின் படத்தில் தரைப் பகுதி மண்ணாக விடப்பட்டதைப் பார்த்தேன். இப்போதும் கூட ஒரு சில கோயில் வளாகங்களில் மண் தரையே உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தின் நடுவில் சில தென்னை மரங்கள் இருப்பதால், மண் தரையாக இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.
வளாகத்தில், பராமரிப்பு வேலை பற்றிய கற் தகவல் பலகை ஒன்று
உள்ளது.
இதில், 1994ல் பெங்களூர் விஜயநகரத்தைச் சேர்ந்த திருமதி. கே.ஜே. பிரமிளா தம்மண்ணா, கோயில் வளாகத்தில், சுற்றிலும் புதியதாக கற்பலகைகளைப் பதித்த நன்கொடையாளர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
![]() |
வருடம் 2020 - கோயில் வளாகத்தில் சமமில்லாத தரைக் கற்பலகைகள் photo credit: "To Northern Star" youtube channel |
காலப் போக்கில் இதுவும் சேதமடைந்துள்ளது. 2020ல் பதிவிடப்பட்டுள்ள ஓரு வீடியோவில் தரைக் கற்பலகைகள் மேலும் கீழுமாக சமமில்லாமல் காட்சியளிக்கின்றன.
![]() |
தரையில் புதிய கற்பலகைகள் - 2023 |
பின்னர் 2022ல், பழைய கற்பலகைகளை நீக்கிவிட்டுப் புதியதாக பெரிய சமமான கற்பலகைகளை வளாகம் முழுவதும் பதிக்கப்பட்டுள்ளது.
******************************************************
கோயில் குளம் பற்றி
இந்த கோயிலின் சுற்றளவு தோரயமாக 1000 அடி.
மொத்தப் பரப்பளவு தோரயமாக 61,000 சதுர அடி. (இவை கூகுள் மேப் உதவியுடன் கணக்கிடப்பட்டவை!)
இவ்வளவு பெரிய கோயிலுக்கு கோயில் குளம் இல்லாமல்
இருக்குமா?
1800ல் உள்ள பெங்களூர் வரைபடங்களில், சோமேஸ்வரர் கோயில் குளம் காட்டப் பட்டுள்ளது. 1900ல் உள்ள வரைபடத்தில் இந்தக் குளம்
மறைந்துவிட்டது. 1876 – 1878ல் மழை பெய்த்து ஏற்பட்ட மகா பஞ்ச காலங்களில் இந்தக் குளம் வறண்டு
போயிருக்கலாம். 1898ல் ஏற்பட்ட பெரும் பிளேக் நோய்த் தொற்றினால், சுகாதரக் காரணங்களுக்காக ஆங்கிலேயர்களால்
மூடப்பட்டிருக்கலாம்.
2010ல், கோயிலுக்கு மிக
அருகில் இந்த பெரிய குளம் அகழ்ந்தெடுக்கப் பட்டது. மிக நெருக்கமான வீடுகளும், கடைகளும் உள்ள இந்த அல்சூரில் இதை நம்புவது
சற்றுக் கடினம்தான்.
19ஏப்ரல் 2010ல் இந்த இடத்தைத் தோண்டும் பணி தொடங்கியது.
40அடி ஆழம் உள்ள
குளம், படிக்கட்டுகளுடன்
வெளியில் வந்தது!
![]() |
ஏப்ரல் 2010, குளம் தோண்டியெடுக்கப் படுகிறது Photo courtesy https://malenaadu.wordpress.com/ |
![]() |
குளத்திலிருந்து கோயில் தீபஸ்தம்பம் தெரியும் காட்சி |
![]() |
தோண்டியெடுத்த 3-4 மாதங்களிம் குளம் நிரம்பியுள்ளது Photo credit -The Hindu |
இந்தப் படம்
எவ்வளவு ரம்யமாக இருக்கிறது!
வழக்குகளாலும்,
ஆட்சி மாற்றங்களாலும் தற்போது இந்தக் குளம் சீர்படுத்தப்படாமல் பூட்டி இருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக எத்தனையோ சிறுவர்களும், பெரியவர்களும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம்.
ஓரு நூறாண்டு மண் மூடி மூச்சுவிடாமல் தவித்துக் கொண்டிருந்தது. இப்போது கடந்த 10 வருடங்களாக நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டு
வானத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறது.
எல்லோருடனும் முன்பு போல ஆனந்தமாக உரையாட ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
நம்பிக்கையுடன் இருப்போம்
******************************************************
உசாத்துணை:
https://en.wikipedia.org/wiki/Halasuru_Someshwara_Temple,_Bangalore
Temple compound wall on Sundara Mudaliyar Street is damaged
Temple compound wall on Sundara Mudaliyar Street is getting repaired
Workers relaying the flooring in the courtyard
https://blogs.citizenmatters.in/the-olden-eye/2157-heritage-tank-excavated-in-ulsoor-2157