ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கலைஞர், நம்மில் ஒரு தாக்கத்தை இன்று ஏற்படுத்துவார் என்றால் அவர் எப்படிப் பட்டவராயிருக்க வேண்டும். அவரது படைப்பு எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும்!
நான் கூறுவது இந்த ஒரு எளிய சிற்பத்தைப் பற்றியே!
இந்தச் சிற்பத்தை ஒரு கோயிலின் மகாமண்டபச் சுவரில் பார்த்தேன். மிக அமைதியான முகம், கழுத்தில் ஒரு எளிய மாலை, காதணிகள், அரைக்கால் ஆடை, கையில் ஒரு கம்பு (தடி), கால்களை ஒன்றில் மேல் ஒன்று வைத்து சாய்ந்து நிற்கும் காட்சி. இன்னும் சிறிது கூர்ந்து கவனித்தால், சிறிய சுருள் உள்ள மீசை. தலையில் முக்காடு போல ஏதோ ஒன்று. அதன் கீழ்ப் பகுதி எவ்வளவு நுட்பமாக இழைகளுடன் அமைந்துள்ளது!
இதைப் போலவே இன்னும் ஓரு சிற்பம் அதே சுவரில் இருக்கிறது.
இந்த இரண்டாவது சிற்பத்தில் சில மாற்றங்கள். உச்சந்தலைப் பகுதியில், அந்த ஆடையில் ஒரு புடைப்பு. ஆடையின் விளிம்புகளில் ஒரு அழுத்தமான கோடு(தையல்!?) காதேரத்தில் சங்கிலி போல ஒரு அமைப்பு. கையிலுள்ள தடியில், கணுக்கள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன! இதை வைத்துப் பார்த்தால், அது ஒரு மரத் தடி அதாவது மூங்கில் தடி என்றே தோன்றுகிறது.
இதெல்லாம் நமக்கு சுலபமாகப் புரிகிறது. ஆனால் அவர் தலை மேல் உள்ளது என்ன? இது ஒரு
சிகை அலங்காரமா அல்லது ஆடையா?
இந்த தலை மேல் உள்ளது என்னவாக இருக்கும் எனப் புரியவில்லை. முதலில் மனதில் தோன்றியது, சிறு வயதில் கோணிச் சாக்குப் பையை மடித்து மழைக்கு காவலாகத் தலை மேல் முக்காடு போலப் போட்டுக் கொண்டதுதான். இது கிராமத்தில் மிக சாதரணமான எல்லோரும் பயன்படுத்தியதுதான்.
இந்தச் சிற்பம் கோயிலின் எங்கோ
உயரத்தில் அல்லது புறச் சுவரில் அமையாமால், முக்கியமான சுவரில் சுலபமாகக் கண்ணில் பார்க்கும் இடத்தில்
அமைந்திருப்பதால் இது எப்படி கோணிச் சாக்குப் பை மழைக் கவசமாக இருக்கும் என ஒத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் இது பெங்களுரில், பரபரப்பான அல்சூர் (Ulsoor, ஹலசூர்) ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலில் இருக்கிறது. கர்நாடகத்திலும் இப்படி ஒரு பழக்கம் இருந்ததா என்ற ஒரு சந்தேகமும் வந்தது.
இந்த கோணிச் சாக்கு மழையணி, எடை குறைவாக இருக்கும்,முழுவதும் நீர்ப்புகாதது அல்ல. மொத்தமாக இருப்பதால், முழுவதும் நனையச் சிறிது நேரம் எடுக்கும். முக்கியமாக நேராகக் கண்களில் நீர் விழாது.
பிறகு இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்த போது, கொங்குப் பகுதிகளில் இதனை “கொங்காடை” என்பார்கள் என்றும், இந்த மாதிரி சிற்பங்களை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களில் பார்த்ததாகவும் கூறினார்கள்.
அதனைப் பற்றித் தேடிய போது, இந்த மாதிரி சிற்பங்கள் தமிழத்தையும் தாண்டிய ஹம்ப்பியில் இருக்கிறது ஆச்சரியமாக இருந்தது.
இந்த மாதிரி சிற்பங்கள்
“இடையர்கள்” என்னும் கால்நடை மேய்ப்பவர்களையும் (கால்நடைகளைக் காப்பவர்களை) குறிக்கப் பயன்படுகிறது. பண்டைக்
காலத்தில் கால்நடைகள் வளர்த்தல் சமூகத்தில் மிக முக்கியமான பங்களிப்பாகும். உழவுத் தொழில் முக்கியமாக இருந்தாலும், கால்நடைகளின் பால் மற்றும் வெண்ணெய் குழந்தை வளர்ப்புக்குப் பேருதவியாக இருக்கிறது. கால்நடைகள் மண்ணின் செழிப்பை அதிகப் படுத்தி உழவுக்கும்
உதவியாக இருக்கின்றன. ஓரு வேளை இந்த பின் புலத்தால்தான் இந்தச் சிற்பம் ஒரு முக்கியமான இடத்தில் அமைக்கப் பட்டதோ! அதுவும் ஒரே சுவரில் இரண்டு சிற்பங்களாக!
தென்னிந்தியாவில், கால்நடை மேய்க்கும் பணியில் இருப்பவர்கள் “இடையர்கள்”, “குறும்பர்கள்”, “குரும்பர்கள்”, “குரும்பா” என வெவ்வேறு இனப் பெயர்களில் குறிப்பிடப் படுகிறார்கள்.
இந்த ஆடை, குளிர் மற்றும் காற்றுக்கும் பாதுகாப்பாக வெது வெதுப்பாக இருக்கும்!
கர்நாடகத்திலும் இது போல ஒரு ஆடை பழக்கத்தில் இருந்தது என்றனர் நண்பர்கள். அவர்கள் சுட்டிக் காட்டிய வீடியோவிலும், போட்டோவிலும்
கம்பளியிலும் இப்படிப் பயன்படுத்தியதைப் பார்த்தேன்.
இந்த
ஆடை கம்பளியிலும் இருக்கலாம் எனப் புரிந்தது. கோணிச் சாக்கைவிட கம்பளி அதிகம் நீர்புகாத் தன்மையும், அதிக குளிர் தாங்கும் தன்மையும் கொண்டது.
முதலில், கம்பளி என்றால் காஷ்மீர் நினைவு வந்தது. காஷ்மீரிலிருந்து கம்பளி எப்படி இடையர்களுக்கு வரமுடியும் என்ற தர்க்கம் தோன்றியது. பிறகு இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் கூட ஆட்டின்
முடிகளைப் பயன் படுத்தி, கம்பளி செய்துள்ளார்கள்
எனப் புரிந்து கொண்டேன்.
இதைப் பற்றி மேலும் தேடும் போது, ஒரு ஆச்சரியமான,
மகிழ்ச்சியான தகவல் கிடைத்தது. தற்போது அரசு நிர்வாகங்களுக்காக மொழி வாரியாக ஒரு இறுகிய மாநிலங்களை அமைத்து, பிரிந்துளோம். ஆனால், பண்டையக்
காலங்களில், மொழிகள் வேறாக இருந்தாலும், பழக்க
வழக்கங்களும், பயன்படுத்தும் கலைச்
சொற்களும் நெருங்கியே இருந்தன. இனங்களின்
பிணைப்பையும், அவர்கள் ஒரு இடத்தில் இருந்து பிற இடங்களுக்கு
சென்றிருந்ததையும் சுலபமாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. மேலும் ஆடுகளை மேய்க்கும் மக்கள் அதிலிருந்து கிடைக்கும்
முடியிலிருந்து கம்பளி செய்ந்து பயன்படுத்துவதே வசதியானதும் பொருத்தமானதும் கூட.
ஹைதராபாத் ஓஸ்மானியப் பல்கலை கழகத்தின் உதவி போராசியர்களின் (Ram Shepherd Bheenaveni, Malkolla Ramulu) ஓரு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை கிடைத்துது, அதில் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில், ஆட்டின் முடியில் இருந்து கம்பளி தயாரிக்கும் இனத்தவரையும், அதன் தயாரிப்பு முறை பற்றியும் மிக விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளது. அந்த இனத்தவர் “கொல்ல குரும்மா”(Golla-Kuruma) என்றும் அந்த கம்பளி ஆடை “கொங்கடி”(Gongadi) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொங்குப் பகுதிகளில் கூறப்படும் “கொங்காடை”, தெலுங்கானாப் பகுதிகளில் கூறப்படும் ”கொங்கடி”யும் ஓன்றேதான். அதன்
உச்சரிப்பு சிறிது வேறுபட்டுள்ளது. அவ்வளவே.
இது மட்டும் அல்ல, சங்க கால இலக்கியங்களிலும் (பொது யுகம் ஆரம்பிப்பதற்கு வெகு முன்னால்) இடையர்களைப் பற்றியும் அவர்களது ஆடைகளைப் பற்றியும் நிறைய குறிப்புகள் உள்ளன.
இது போலவே இந்தியாவின் வேவ்வேறு பகுதிகளிலும் இருந்த கால்நடை மேய்க்கும் இன மக்கள் இந்த மாதிரியான ஆடைகள் பயன்படுத்தி இருந்திருப்பார்கள். உலக அளவில் கூட இந்தப் பழக்கம் இருந்திருக்கலாம். நாம் எல்லோரும் எதோ ஒரு வகையில் ஆழமாக நமது மரபணுக்கலாலும், ஆன்மீகத்தாலும் இணைக்கப் பட்டவர்கள் அல்லவா.
இத்தனை வரலாற்று, பண்பாட்டுத் தகவல்களை அந்தக் சிற்பத்தின் மூலம் நமக்குக் கொடுத்த சிற்பி, எப்போதும் அவனது படைப்பின் மூலம் நம்முடன் பேசிக்
கொண்டுதான் இருக்கிறான்.
கலைஞர்கள் மறைவது காலத்தின் நியதி. ஆனால் அவர்கள் தங்களது படைப்பு மூலம் கோடானு கோடி மக்களுடன் உரையாடிக் கொண்டேயிருக்கிறார்கள். (From mortals to immortals)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதைப் போன்ற பிற சிற்பங்கள்.
ஹம்ப்பி (கர்நாடகா) |
நன்றி:
ஹம்ப்பி, தாரமங்கலம் சிற்பப் புகைப் படங்கள்
- திரு. து.சுந்தரம், கல்வெட்டு
ஆராய்ச்சியாளர், கோவை.
உசாத்துணை:
https://groups.google.com/g/MinTamil/c/Tw92J3S5V78/m/Oy7LbTS2BwAJ - இடையர் சிற்பங்கள் பற்றிய Google group உரையாடல்கள்
https://www.researchgate.net/publication/365426235_GONGADI_THE_INDIGENOUS_WOOLLEN_CRAFT_OF_DECCAN “கொங்கடி” (Gongadi) பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை
https://telanganatoday.com/maharashtra-to-replicate-telanganas-sheep-distribution-scheme
Click here to go to an excellent interactive website about Sri Someshwara Temple by INTACH