வரலாற்றுக் குறிப்புகள்:
இந்த நூலில் சாமிநாத சர்மா அவர்கள், பயணத்தில் அவர் கடந்த இடங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்பு, அவர் சந்தித்தவர்களின் சிறப்பு, சமுகத்தில் உள்ள தொண்டு அமைப்புகள் என பல முக்கிய தகவல்களைக் கொடுக்கிறார். தற்போது Pyay எனப்படும், புரோம் நகரத்தைப் பற்றி ஓரு வரலாற்றுச் சித்திரத்தை நமக்கு கொடுக்கிறார்.
புரோம் நகரம், கிறிஸ்து சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தி, பர்மாவின் தலைநகரமாயிருந்ததாகவும், கி.பி. எட்டாவது நூற்றாண்டில் ‘தலெய்ங்’ என்ற ஒரு இனத்தவர் இதனை அழித்துவிட்டனர் என்றும், அந்த அழிவின் மீதுதான் புதிய புரோம் நகரம் ஏற்பட்டது என்றும் சிறப்பு வாய்ந்த இரண்டு புத்தர் கோயில்கள் இங்கு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் பயணத்தில் லெட்படான் (Letpadan) என்ற ஊருக்கு போகிறார். அங்குள்ள நகரத்தார் மடத்தில் தங்கி கையில் கொண்டு வந்திருந்த உணவை உட்கொண்டு சிறிது நேரம் களைப்பாறினர்கள். மடத்துக் காரியக்காரர்கள், அவர் குழுவுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் என்கிறார்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பர்மாவில் தாங்கள் லேவாதேவித் தொழில் செய்து வந்த முக்கியமான எல்லா ஊர்களிலும் மடங்களும், கோயில்களும், நந்தவனங்களும் அமைத்து இருந்தனர்; சில கோயில்களுக்கு வெள்ளி ரதங்கள், தங்க வாகனங்கள் செய்ந்திருந்தனர் எனக் கூறுகிறார். மடங்கள் நூற்றுக்கணக்கான பேர் வசதியாகத் தங்கக் கூடிய வகையில் அமைக்க பட்டிருந்ததையும். சில மடங்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளும் இருந்ததையுமான நகரத்தாரின் சமூகப் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார்.
ஒரு இரவு தவுண்டிஞ்சி(Taungdwingyi)
என்ற இட த்தில் உள்ள சீக்கியர் மடம் ஒன்றில் சாமிநாத சர்மா அவர்களின் குழு தங்கி இருக்கிறது. அந்த
மடத்தில் அவர்களுக்கு ரொட்டியும் கறி காய்களும் உதவினார்கள் என்று
குறிப்பிடுகிறார்.
பர்மாவின் எல்லையில் உள்ள டாமுவில் இருக்கும் போது, சாமிநாத சர்மாவுக்கு கடுமையான உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அப்போது அவருக்கு அங்கு வைத்தியம் செய்த ஒரு சீக்கிய மருத்துவரைப் பற்றி மிக சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளார்.
இது இந்தியர்கள், பர்மாவில்
எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார்கள் என்ற சித்திரத்தை நமக்குக் கொடுக்கிறது. ஆங்கிலேயர்கள் ஜப்பானியரை
வென்று விடுவார்கள் என்றே அங்கிருந்த இந்தியர்கள் நம்பினர். ஒரு சிலர் அவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும்
இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, போர் முடிந்த
பிறகு அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம்
என்று தங்கி இருந்தனர். ஆனால், ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களை சமாளிக்க முடியாமல்
பர்மாவை கை விடும் போது, இந்தியாவுக்கான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பொதுமக்களுக்கு நிறுத்தப் பட்டு விட்டது. 1938ல் இந்தியர்களுக்கு
எதிராக பர்மியர்களின் தாக்குதல்கள் நடந்து இருந்தன. இப்போதயை, ஜப்பானியர் தாக்குதலில், பர்மியர்கள் தங்களைக் காத்துக் கொண்டு இந்தியர்களை
ஆதரிக்க மாட்டார்கள் என்ற சூழல், ஆங்கிலேயர்களின் பாதுகாப்பு விலகியது என்ற இக்கண்டான
சூழலில், லட்சக்கணக்கான இந்தியர்கள், மிக உயர்ந்த பதவியினர் முதல் சாதரண தொழிலாளி குடும்பங்கள் வரை, தரை வழியாகவே கிளம்ப வேண்டி இருந்தது. இந்த புரிதலை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.
பர்மிய மற்றும் இந்தியத் தேக்கு:
செட்டிநாடு வீடுகள்
பர்மா தேக்கால் கட்டப்பட்டவை என்று கேள்வி பட்ட போதெல்லாம் நான் பெரிதாக வியப்பு அடைந்தது இல்லை.
இந்தியாவில் தேக்கு இல்லையா, எதற்கு அவ்வளவு தொலைவில் இருந்து கப்பலில் கொண்டு
வர வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.
பர்மா தேக்கு எவ்வளவு சிறப்பாக இருந்தது என சாமிநாத சர்மா குறிப்பிடுகிறார்.
பர்மா தேக்கின் பிரம்மாண்டத்தைப் பற்றி எளிமையாக நாம் புரிந்து கொள்ளும் வகையில் கூறுகிறார். இரண்டு பேர் கைகளை நீட்டிக் கோத்துக் கொண்டு அணைத்தால் கூட அணைப்பிற்குள் அடங்காத அவ்வளவு பருமன் என்கிறார். இதைக் கற்பனை செய்ய கடினம் என்றால், அந்தக் தேக்கு இலை எவ்வளபு பெரியது எனக் கூறுகிறார். ஓர் தேக்கு இலையை நான்காகத் துண்டித்துப் போட்டுக் கொண்டு நான்கு பேர் தாராளமாகச் சாப்பிடலாம் என்கிறார்.
பர்மா தேக்குடன் அஸ்ஸாம் தேக்கை அவற்றின் பருமன், உயரம், உறுதியுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தேக்கு ஒரு பிஞ்சு அல்லது சிறு குழந்தை என்றே சொல்லவேண்டும் என்கிறார்.
இப்படிப்பட்ட சிறப்புகளுடைய பர்மா தேக்கை உலகத்திலுள்ள பலநாடுகளும் கப்பல் கட்டுவதற்காக பயன்படுத்தியதையும், இவைகளை ஒரு பிரிட்டிஷ் கம்பெனி குத்தகைக்கு எடுத்து நல்ல லாபம் சம்பாதித்து வந்தது பற்றிய பிரிட்டிஷாரின் சுரண்டலையும் குறிப்பிடுகிறார்.
உப்புத் தேநீர்:
பால் தேநீர், பாலில்லாத தேநீர், குளிர்ந்த தேநீர் என சில வகைத் தேநீர் நமக்குப் பரிச்சயம். இந்தப் பயணத்தின் போது உப்புத் தேநீர் பற்றி சாமிநாத
சர்மா குறிப்பிடுகிறார்.
அது என்ன உப்புத் தேநீர் ?
ஒரு நாள், சாமிநாத சர்மாவும் அவரது நண்பர்களும், கலேவாவிலிருந்து டாமுவுக்குப் போகும்
பாதை எப்படி உள்ளது என்று பார்க்க அதில் ஒரு 3மைல் தூரம் நடந்து செல்கிறார்கள். அப்போது ஓரிஸ்ஸாவிலிருந்து வந்து சாலை செப்பனிடும்
கூலிப் பணியாளர்களைச் சந்திக்கின்றனர். அவர்கள்
சுடச் சுட தேநீர் தாயரித்துக் கொடுத்தார்கள் என்றும், அதில் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் பயன்படுத்தினர்
என்றும் சொல்கிறார். அதுவும் நன்றாக இருந்தது
என்றும், பின்னர் நடைப் பயணத்தில் உப்புத் தேநீரை அருந்தப் பழகிக்
கொண்டோம் என்கிறார்!
பர்மியர்களின் பண்பாடு:
டாமுவில், இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது, ஊரைச் சுற்றிப் பார்க்கிறார். ஒரு வீட்டின் முன் ஒரு பெரிய முருங்கை மரத்தில்
காய்கள் நிறைய இருப்பதை ரசித்துக் கொண்டு இருக்கிறார். இதைக் கவனித்த வீட்டுச் சொந்தக்காரர் என்ன வேண்டும் எனக் கேட்கிறார்., ஒன்றும் வேண்டாம் என்று சாமிநாத சர்மா சொன்னதைப் பொருட் படுத்தாமல், நிறைய முருங்கைக் காய்களைப் பறித்து இவருக்குக்
கொடுக்கிறார். பணம் வாங்க மறுத்து விடுகிறார்.
இது இவருடைய பெருந்தன்மையைக் காட்டுவதாகவும், இந்த ஊரின் செழுமையை அறிவிப்பதாகவும் இருந்தது எனக் கூறுகிறார்
டாமுவின் தெருக்கள் அகலமாகவும் சுத்தமாகவும் இருந்ததாகவும், வீடுகள் சிறிதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தன, அநேக தெருக்களில் இரு பக்கங்களிலும் முருங்கை மரங்கள் பூத்துக் காய்த்துப் பொலிந்தன, ஒவ்வொரு முருங்கைக் காயும் சுமார் இரண்டடி நீளம் இருக்கும் என அந்த ஊரின் சிறப்பைக் குறிப்பிடுகிறார்.
பர்மியர்களின் வாழ்க்கை முறையும் அவரை அதிகம் கவர்ந்துள்ளது. தாரளமாக பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
பர்மியர்கள், தூய்மையைப் பேணிக் காப்பவர்கள் என்றும், அவர்கள் தினம் இரண்டு தரம் நீராடுவார்கள் என்றும், தாங்கள் சுத்தமாயிருப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் சுற்றுப்புறத்தையும் கூடிய மட்டில் சுத்தமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இவரது பாராட்டுகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில் டாமுவின் சுத்தமும், கச்சிதமும் , கேட்காமலேயே இவருக்கு முருங்கைக் காய் கொடுத்தவரின் பெருந்தன்மையும் சாட்சியாக உள்ளன.
நேர்மை:
வக்ஸு முகாமிலிருந்து கடல் மட்டத்திற்கு 3000 அடி உயரத்திலுள்ள லும்லிங் முகாமிற்குப் பயணம். பத்து மைல் தூரம் மலை ஏற்றத்திலேயே செல்ல வேண்டியிருந்தது. கொதிக்கும் வெயில். ஒற்றையடிப் பாதை. சறுக்கல்கள். உடல் நலக் குறைவென்றாலும், சாமிநாத சர்மா கையில் ஒரு மூங்கில் கம்பு, இவர்கள் குழுவை அழைத்து வந்த மேஸ்திரி இவர் முதுகின் மீது கைவைத்து நெட்டித் தள்ளிக்கொண்டு வந்தார். வெகு தொலைவு நடந்தாகிவிட்டது. தூரத்தில் முகாம் தெரிகிறது. ஆனால் 3 குன்றுகளையும் 3 கணவாய்களையும் கடக்க வேண்டும். சூரியன் மறைந்தது கொண்டிருந்தான். குழுவினர் முன்னே சென்று கொண்டிருந்தனர். இவருடன் வந்த மேஸ்திரி, முகாமுக்குப் போய் ஏற்பாடுகள் செய்வதற்காக, இவரை வரச் சொல்லிவிட்டு போய்விடுகிறார். முன்னால் நடந்து கொண்டிருந்த மனைவி இவருடன் வந்து சேர்ந்து கொள்கிறார். சாமிநாத சர்மாவுக்கு அதற்கு மேலும் நடக்க முடியவில்லை. தன்னால் இனி மேலும் நடக்க முடியாது, காத்திருக்க வேண்டாம் என மனைவியிடம் கூறி, அவரை முகாமுக்கு போகுமாறு கூறிவிட்டு மயங்கி விழுந்து விடுகிறார். பிறகு கண் விழித்த போது சுற்றிலும் இருட்டாயிருந்தது. பக்கத்தில் மனைவி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.
மனிதன் அதி தீவிர உடல் மற்றும் மன சோர்வுக்கு ஆளாகும் போது அவர்களது நடவடிக்கைகள் அவர்களது ஆளுமைக்கு எதிராக இருப்பதும் உண்டு.
அதைப் போலவே, மயக்கத்திலிருந்து எழுந்த சாமிநாத சர்மாவின் செயல் அவரது மனைவிக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சையையும் தந்ததாக இருந்தது. மனைவியைப் பற்றி கருதாமல், வெகு வேகமாக நடந்து சென்று முகாமை அடைந்து, திரும்ப மயங்கி விழுந்தார். அவரது மனைவி தன்னந் தனியாக இருட்டில் முகாமுக்கு நடக்க வேண்டியதாயிற்று.
இது அவரது வாழ்க்கையில், மிகக் கடினமான, துயரமான அனுபவம். அவர் மனைவியிடம் நடந்து கொண்ட விதம், அவரது ஆளுமைக்கு முற்றிலும் முரணானது. அவரது மனைவி மேல் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டவர். அவரது இந்த
எதிர் மறையான நடவடிக்கையை நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. பகிர்ந்து கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது.
முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல்:
வக்ஸு முகாமிலிருந்து கடல்
மட்டத்திற்கு மூவாயிரம் அடி
உயரத்திலுள்ள
லும்லிங் முகாமிற்கான முந்தின நாள் பயணம் சாமிநாத சர்மாவிற்கு, மிகுந்த கடினமானதாக அமைந்து விட்டது. இன்று அடுத்த முகாமான ”சிட்டா ” வுக்குப் பயணம். கடல் மட்டத்திற்கு 5500 அடி உயரத்திலுள்ளது. அதாவது இன்னும் 2500 அடி உயரத்துக்குப் பயணம்.
இவருக்கான “டோலி” பயண முயற்சி முந்தின நாள் தோல்வியில்
முடிந்தது . இரு ஆட்கள், ஒரு மூங்கில் கம்பை வெட்டி, அதில் அவர்களது மேல் துணியை கட்டி (குழந்தைகளின்
“தூளி” போன்ற அமைப்பு), அதில் இவர் அமர்ந்து
செல்கிறார். குழந்தைக்குச் சரி. பெரியவர்களுக்கு இது ஒரு சிரமமான ஏற்பாடு. ஆனாலு வேறு வழியில்லை. உயரம் போகப் போக குளிர் அதிகமாகிறது. இவரை சுமந்து செல்பவர்கள், தங்களுடைய மேல் துணியை இவர் மீது போர்த்தி விட்டு வெற்று உடம்புடன் வருகிறார்கள். அப்போது,
இந்தியத் தொழிலாளியின் குடும்பம் நடந்து வருவதைக் கவனிக்கிறார்.
பெற்றோர்களுடன் நடந்து வரும் குழந்தைகளில் மூத்தது ஒரு பெண்,
சுமார் 8 வயதிருக்கும். இடுப்பில் இரண்டு
முழுத் துண்டும் கிழிந்திருந்த ரவிக்கையும் மட்டும்தான் அதன் உடை. அதற்கடுத்தவை இரண்டு ஆண்
குழந்தைகள். ஒருவனுக்கு 6வயது, மற்றொருவனுக்கு
4 வயது; அவ்விரண்டு சிறுவர்களும் பிறந்த வடிவத்தோடு வந்து கொண்டிருந்தார்கள். குளிரினின்று பாதுகாத்துக்
கொள்ள 3 குழந்தைகளும் தங்கள் மார்பை, இரண்டு
கைகளாலும் மூடிக்கொண்டிருந்தார்கள்.
இந்த மூவரையும் பார்த்துக்கொண்டு வந்த அவருக்கு ஓரே வேதனை! கண்களில் நீர் பெருகத் தொடங்கியது. இவருடைய
கதர் ஜிப்பாவைக் கழட்டி மூத்தவனிடம் கொடுக்கிறார். அவனுக்கு ரொம்ப சந்தோசம். அந்த ஜிப்பா பெரியதாக இருந்ததால், இளையவனும் அதில் நுழைந்து கொள்கிறான்.
ஓரு சட்டையை இரண்டு பேர் போட்டுக் கொண்டு நடப்பது, விளையாட்டுக்கு வேண்டுமானால் உற்சாகமான அனுபவமாக இருக்கலாம். அதி குளிரில், தெரியாத மலைப்பாதையில் அது ஒரு கடினமான அனுபவமே. தட்டுத் தடுமாறி நடப்பது கஷ்டமாக இருக்கவே, இளைய பையன் சட்டையிலிருந்து வெளிவந்து விட்டான். அவனைப் பார்த்து பரிதாபப் பட்ட அவர், அவனுக்குக் கொடுக்க இன்னொரு சட்டை இல்லையே என வருந்துகிறார்.
என்ன கொடுமை இது. உடம்பில் எந்த துணியுமில்லாமல் நடந்து வரும் சிறுவர்களுக்காக வருந்துவதா? அவர்களுக்குத் தன் சட்டையை கொடுத்த சாமிநாத சர்மாவைப் பற்றி பெருமைப் படுவதா? தங்களுடைய துணியை “தூளி”யாகவும், போர்வையாகவும் கொடுத்து அவரைச் சுமந்த மணிப்பூரி/நாகர் மனிதர்களுக்காக பெருமைப் படுவதா?
கறுப்பு வழி, வெளுப்பு வழி:
டாமுவில் இருந்து வான் சிங் என்ற ஊர் வரையில் இரண்டு வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பியர்கள் செல்வதற்கான வழி, முகாம்கள் அமைக்கப்பட்டு, நல்ல வித உணவுடனும், பெரும்பாலும் சமமான நிலப் பரப்பில், சுமார் முப்பது மைல் தொலைவுடைய “வெளுப்பு வழி” ஆகும்.
இந்தியர்கள் செல்ல வேண்டிய பாதை மிக கடினமானது. வசதிக் குறைவான முகாம்கள், சுற்றி வளைத்து மேடுபள்ளங்களில் செல்லும் சுமார் ஐம்பது மைல் தொலைவுடைய “கறுப்பு வழி” ஆகும்.
போர்ச்சூழலில் அகதிகளாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் நெருக்கடியிலும் என்ன ஒரு வேதனையான இன பாகுபாடு.
தன்னடக்கம்
1937 -ல் ஜவஹர்லால் நேரு தமது மகள் இந்திராவுடன்
பர்மாவில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, சாமிநாத சர்மா சில ஊர்களில் நேருவின் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்துள்ளார். பிரயாணத்தின்போது அவருடன் நெருங்கிப் பேசும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன. டிமாப்பூர் முகாமில் இருக்கும் போது, ஜவஹர்லால் நேரு அவர்கள் அந்த முகாமைப் பார்வையிட வருகிறார். சாமிநாத சர்மாவுக்கு அவரைப் பார்க்க ஆவல். இருந்தாலும்,
அவரைப் போய் பார்க்கவில்லை.
ஒரு வாரத்துக்கு மேலாக குளிக்காமல் அழுக்கான உடைகளுடன், தாடி மீசையுடன், உடல் மெலிந்து இருக்கும் கோலத்தில் நேருவைப் பார்த்து உதவி கேட்க கூச்சமாக இருந்தது என்கிறார்.
இந்த ”பர்மா வழி நடைப் பயணம்” வெறும் பயணக் குறிப்புகள் கொண்டது மட்டுமல்ல. இதில் எண்ணற்ற வரலாற்று, புவியியல், தத்துவம், மனிதனின் மேன்மைகள், கீழ்மைகள், மனித குலத்தின் விடாமுயற்சி பற்றிய தகவல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புதையலாகவே உள்ளது. போர்ச்சூழல், உயிர் வாழப் போராட்டம் என்ற எதிர்மறைச் சூழலிலும், தன்னுடைய நேர்மறையான அணுகுமுறையை சாமிநாத சர்மா என்ற ஆளுமையின் குணச்சித்திரங்கள் மூலம் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த நூல் அச்சு புத்தக
வடிவில் இப்போதும் கிடைக்கிறது.
1979ல் திருமகள் நிலையம் பதிப்பகத்தில் வெளிவந்த நூலின் டிஜிடல்
பிரதி இங்கே கிடைக்கிறது https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZU7. இதில்
கு. அழகிரிசாமி, சாமிநாத சர்மாவைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையும்
உள்ளது.
2006ல் தமிழ்மண் பதிப்பகத்தில் வெளிவந்த
நூலின் டிஜிடல் பிரதி இங்கே university of Toronto websiteல் கிடைக்கிறது. https://tinyurl.com/yaayz7zc
வரிசை |
தேதி
(1942) |
எங்கிருந்து எங்குவரை, |
எதில் பயணம் |
நாள் 1 |
பெப்ரவரி 21, காலை |
பக்டோ, ரங்கூன் |
கார் |
|
மதியம் |
லெட்படான் Letpadan சென்றடைதல் |
கார் |
|
இரவு |
புரோம், Pyay
(new name) சென்றடைதல் |
கார் |
நாள் 2 |
பெப்ரவரி 22, காலை |
புரோமிலிருந்து புறப்படுதல் |
கார் |
|
மதியம் |
அல்லன்மியோ,
Myede, (new name) சென்றடைதல்.
|
கார் |
|
மாலை |
தவுண்டிஞ்சி Taungdwingyi சென்றடைதல் |
கார் |
நாள் 3 |
பெப்ரவரி 23, காலை |
தவுண்டிஞ்சியிலிருந்து புறப்படுதல் |
கார் |
|
பகல் |
ஏனாஞ்சாங் Yenangyaung சென்றடைதல் |
கார் |
|
மாலை |
மெக்டீலா Meiktila சென்றடைதல் |
கார் |
நாள் 4 |
பெப்ரவரி 24, காலை |
மெக்டீலாவிலிருந்து புறப்படுதல் |
|
|
பகல் |
சௌஸே ரெயில்வே ஸ்டேசன் (Kyaukse
?) சென்றடைதல் |
கார் |
|
மாலை |
மாந்தளை Mandalay சென்றடைதல் |
கார் |
நாள் 4 - 24 |
பெப்ரவரி 23முதல் மார்ச் 16வரை |
மாந்தளையில் தங்குதல், பயண ஏற்பாடுகள் |
|
நாள் 25 |
மார்ச் 17, காலை |
மாந்தளையிலிருந்து புறப்படுதல் |
ரெயில் |
|
இரவு |
மொனீவா Monywa சென்றடைதல். |
ரெயில் |
நாள் 25 - 29 |
மார்ச் 17முதல் 21வரை |
மொனீவாவில் தங்குதல் |
|
நாள் 30 - 33 |
மார்ச் 22முதல் 25வரை |
மொனீவா , சிந்த்வின் ஆற்றில்
பயணம். (120 மைல்) |
நீராவிப் படகு . |
நாள் 33 |
மார்ச் 25 மாலை |
கலேவா Kalewa சென்றடைதல். |
நீராவிப் படகு |
நாள் 33 - 46 |
மார்ச் 25முதல் ஏப்ரல் 7வரை |
கலேவாவில் தங்குதல் |
|
நாள் 47 |
ஏப்ரல் 8, காலை |
கலேவாவிலிருந்து புறப்படல். |
லாரி |
|
மாலை |
இண்டாஞ்சி Indainggi சென்றடைதல் |
லாரி |
நாள் 48 |
ஏப்ரல் 9, காலை |
இண்டாஞ்சியிலிருந்து புறப்படல் |
லாரி |
|
மாலை |
டாமு Tamu சென்றடைதல். |
லாரி |
நாள் 49 -50 |
ஏப்ரல் 10 -11 |
டாமுவில் தங்குதல் |
|
நாள் 50 |
ஏப்ரல் 11, மாலை |
டாமுவிலிருந்து புறப்படல் |
மாட்டு வண்டி, நடைப் பயணம். |
நாள் 51 |
ஏப்ரல் 12, காலை |
வக்ஸு (wakshu,) முகாம். சென்றடைதல் |
|
நாள் 52 |
ஏப்ரல் 13, மதியம் |
வக்ஸுவிலிருந்து புறப்படல் |
நடைப் பயணம், டோலி. |
|
மாலை |
லும்லிங் முகாம் சென்றடைதல். |
|
நாள் 53 |
ஏப்ரல் 14, காலை |
லும்லிங்கிலிருந்து புறப்படல் |
நடைப் பயணம், டோலி. |
|
மாலை |
சிட்டா Sita முகாம் சென்றடைதல்.
|
|
நாள் 54 |
ஏப்ரல் 15, காலை |
சிட்டாவிலிருந்து புறப்படல் |
நடைப் பயணம், டோலி. |
|
மாலை |
நும்டாக் Nungtak முகாம் சென்றடைதல். |
|
நாள் 55 |
ஏப்ரல் 16, காலை |
நும்டாக்கிலிருந்து புறப்படல் |
நடைப் பயணம், டோலி. |
|
காலை |
வான்சிங் wangjing முகாம்
சென்றடைதல். |
|
நாள் 56 |
ஏப்ரல் 17, காலை |
வான்சிங்கிலிருந்து புறப்படல் |
லாரி |
|
மதியம் |
இம்பாலுக்கு அருகில் உள்ள முகாம் சென்றடைதல் |
|
நாள் 56 - 59 |
ஏப்ரல் 17 -20 |
முகாமில் தங்குதல் |
|
நாள் 60 |
ஏப்ரல் 21, காலை |
முகாமிலிருந்து புறப்படல் |
லாரி |
|
மாலை |
டிமாப்பூர் Dimapur முகாம் சென்றடைதல் |
|
|
இரவு |
டிமாப்பூரிலிருந்து புறப்படல் |
ரெயில் |
நாள் 61 |
ஏப்ரல் 22, மதியம் |
பாண்டு Pandu ரெயில்வே
ஸ்டேசன் சென்றடைதல் |
|
|
மாலை |
பிரம்மபுத்ரா ஆற்றைக் கடந்து
அமிங்கோன் Amingaon ரெயில்வே ஸ்டேசன் சென்றடைதல் |
நீராவிப் படகு |
நாள் 62 |
ஏப்ரல் 23, அதிகாலை 2 மணி |
அமிங்கோன் ரெயில்வே ஸ்டேசனிலிருந்து புறப்படல் |
ரெயில் |
நாள் 63 |
ஏப்ரல் 24 |
சீல்டா Sealdah (கொல்கத்தா)
ரெயில்வே ஸ்டேசன் சென்றடைதல் |
|
நாள் 63 - 65 |
ஏப்ரல் 24 -26 |
கொல்கத்தாவில் நாட்டுக் கோட்டை நகரத்தார் மடத்தில் தங்குதல் |
|
நாள் 66 - 77 |
ஏப்ரல் 24முதல் மே 8வரை |
காசி, அலகாபாத், கயை புண்ணிய தலங்களுக்குப் பயணம் |
ரெயில் |
நாள் 80 |
மே 11, மாலை |
ஹெளராவிலிருந்து புறப்படல் |
ரெயில் |
நாள் 82 |
மே 13, காலை |
சென்னை சென்றடைதல் |
|
ரங்கூனிலிருந்து சென்னை
வரையான பயணம்.
கார்ப்
பயணம் - ரெயில் பயணம் - நீராவிப் படகு பயணம் - லாரிப் பயணம் – மாட்டு வண்டிப் பயணம் – நடைப் பயணம் – லாரிப் பயணம்
- ரெயில் பயணம்
ரங்கூனிலிருந்து பர்மா - இந்திய எல்லை ஊரான டாமு வரையான பயணம்.
கார்ப்
பயணம் - ரெயில் பயணம் - நீராவிப் படகு பயணம் - லாரிப் பயணம்