தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூன், 2009

வேலூர் பொற்கோயிலும் மற்ற கற்கோயில்களும்

கோயில் என்றவுடன் எனக்கு எங்கள் ஊரில் இருக்கும் முனீஸ்வரன் கோயில் நினைவுக்கு வருகிறது. அழகான திருமணிமுத்தாற்றின் கரையில் ஐந்து ஏக்கர் பரப்பில் ஈஸ்வரன், அம்மன், கருப்பண்ண சாமி சன்னதிகளை உடைய எளிமையான கோயில் இது. ஈஸ்வரன் சன்னதிக்கு மேலே கூரை எதுவும் இல்லை. சாமி கூரை எதுவும் போடக் கூடாது என்று கூறியதாக மக்களின் நம்பிக்கை. சில பூச் செடிகள், மரங்கள், கிணறு முதலியவையும் உள்ளது. சாமி கும்பிடுவது முதல் வேலை. அடுத்த ஈர்ப்பு அங்கு வைத்துக் கொள்ளும் சந்தனம். சந்தனம் அரைக்கும் மேடையும் அதன் மேல் உள்ள சந்தனக் கட்டையும் கோவிலுக்கு எங்களை ஈர்க்கும் காந்தமாகும்.


கிணற்றில் தண்ணீர் இறைத்து அதனைக் கையில் குவித்துக் கொண்டு சந்தனம் அரைக்கும் மேடைக்கு வருவதற்குள் தண்ணீர் கையை விட்டு சிந்திப் போயிருக்கும். திரும்ப கிணற்றுக்கு ஓட வேண்டும். நன்றாக மை போல அரைத்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பிறர்க்கும் கொடுத்தும் பெருமை அடித்துக் கொள்வதில் அலாதி சந்தோசம்.

கோயிலுக்குப் போவதே எங்களுக்கு ஒரு சிறப்புப் பயணம் போல. கோயிலின் ஒரு புறம் ஆறும், இன்னொறு புறம் ஏரியும், சுற்றிலும் வயல் காடுகளும் இருந்தன. வீட்டிலிருந்து கிளம்பி, ஏரிக்குள் நடந்து, கரையின் மீது ஏறி(ஏதோ மலையேறுவது போல நினைத்துக் கொள்வோம்), கரை மேலே நடந்தால், கரையின் அருகில் பனை மரங்களும், ஆற்றங்கரையில் தென்னை மரங்களும், இவற்றின் மத்தியில் நெல் வயல்களும் மிக ரம்மியமாக இருக்கும். இவற்றைக் கடந்தால் கோயில் வந்து விடும். சாமி கும்பிட்டு, சந்தனம் இட்டு, தண்ணீர் குடித்து இளைப்பாறி விட்டு வீடு திரும்புவோம்.

திருச்சியில் இருந்தபோது, உறையூரில் இருந்த பஞ்சவர்ணசுவாமி கோயில்(பேரே அழகா இருக்கில்ல!) ரொம்மப் பிடிக்கும். பெரிய வெளிப் பிரகாரம். கம்பீரமாக கற்களால் ஆன கோபுரங்கள், வேலைப்பாடமைந்த தூண்கள், அழகிய சிலைகள், நீர் நிறைந்த குளம், உயரமான கற் கூரைகள், சாளரத்திலிருந்து வரும் குளிர் காற்று என அருமையாக அமைந்திருந்தது. கால்குலேட்டர், கம்ப்யூட்டர் இல்லாத அந்தக் காலத்தில் இக் கோயிலை எவ்வளவு சிரத்தையுடன் கட்டியிருப்பார்கள் என்று ஆச்சரியப் பட வைக்கும் கம்பீரத்துடன் இக் கோயில் எனக்குத் தெரிந்தது.

கோயில் என்றாலே அது கருங்கற்களால் கட்டப்பட்டாலே அழகு என்பது என் அபிப்பிராயம். இதனாலேயே வட மாநிலங்களில் உள்ள பளிங்குக் கற்களால் ஆன கோயில்களில் எனக்கு அவ்வளவு நாட்டம் இல்லை.


வேலூர் பொற்கோயில் என்று தலைப்பு வைத்து விட்டு, இன்னும் அதைப் பற்றி ஆரம்பிக்கவில்லை என்று யாரும் கருங்கல் எறிவதற்குள் அதற்குப் போய்விடுகிறேன். பொன்னைக் கொண்டு கோயிலை அலங்கரிப்பது பண விரயம், ஆடம்பரம் என்பது என் கருத்து. கற்கோயிலில் உள்ள கல்லைத் தொட்டுப் பார்க்கலாம், தட்டிப் பார்க்கலாம்(மதுரை ஆயிரங்கால் மண்டபம்), மிகவும் சவாலான வேலைப்பாடுகளை கண்டு களிக்கலாம். ஆனால் பொன்னால் ஆன கோயில், சும்மா படுதா போட்ட மாதிரி ஒரே மெட்டையாய் இருக்கும். இதனாலேயே வேலூர் பொற்கோயிலைப் பார்க்கும் எண்ணம் துளிக் கூட இல்லாமல் இருந்தது.

ஒரு வாரக் கடைசியில், நண்பர் குடும்பத்தினர், இங்கு போய் வரலாம் என்றனர். ரொம்ப நாட்களாக திருவண்ணாமலை போக ஆசையிருந்ததால், சரியென ஒப்புக் கொண்டேன். கூட இருக்கும் பொடுசுகள், கோயிலுக்கு மட்டும் போவதென்றால் வர மாட்டார்கள் என்பதால், வழியில் இருக்கும் ஏலகிரி மலைக்கும் போவது என சமரசம் ஆயிற்று.

கிருஷ்ணகிரி சென்னை தரைவழிப் பாதையில் செல்வது எனக்கு இதுவே முதன் முறை. ஆறு வாகனங்கள் போய் வரக் கூடிய(six lane) ரோட்டைப் பார்த்தவுடன் பிரமிப்பாகவும் மகிழ்ச்சியகாவும் இருந்தது. பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்றானதும், நிம்மதியாக இருந்தது. போகும் வழியில், ஊசி வளைவுகள் உடைய மலைப் பாதையை ரசித்தபடி ஏலகிரி சென்றடைந்தோம்.

பின்பு பொற்கோயில்(ஸ்ரீபுரம் கோயில்) சென்ற போது சாயங்காலம் ஆகிவிட்டது. இந்த கோயிலின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. நிரம்ப நெரிசலாக, ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, பட்டும் படாமல் அசுத்தங்களுடன் இல்லாமல், மிக விசாலமாக, பசுமையாக இருந்தது. வெளிச் சுற்றுப் பாதை நட்சத்திர வடிவில் உள்ளது.
வெளிச்சுற்று நடைபாதை தரமான கற்களால் அமைந்துள்ளது. இதில் நடக்கும் போது சூரிய பகவானின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டால் ஆன கூரை இருக்கிறது. ஆங்கிலத்தில் attention to detail என்று சொல்வது போல சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இக் கூரையின் மேல் பக்கமுள்ள சூடான காற்று வெளியே போகும் விதமாக உயரத்தில் இருபுறமும் திறப்புகள், உட்கார்ந்து இளைப்பாற இரு புறமும் திண்ணைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் சிறப்பாக இருக்கிறது.
வெளிச் சுற்றுப் பாதையின் இருபுறமும் செடிகளுடன் கூடிய பசுமையான புல்வெளி அமைத்துள்ளனர்.

உள்சுற்றுப் பாதைக்கும் சன்னதிக்கும் நடுவில் நீர் நிரப்பியுள்ளனர். அவ்வளவு பரப்பில் சுத்தமான நீரைப் பார்ப்பதே மனதுக்கு அமைதியைத் தருகிறது.
கோயில்களை சுத்தமாக, அழகாக, அமைதியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதே ஆறுதலான விஷயம்.
பொன் வேலைப்பாடுகளுக்குப் பண விரயம், எங்கு பார்த்தாலும் அம்மா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தக் கோயிலை உருவாக்கியவரின் உருவப் படம் என நெருடலான விஷயங்கள் இருந்தாலும், மனதுக்குத் திருப்தியாக இந்தப் பயணம் அமைந்தது

Dedication: இந்த இடுகையை, வேலூர் கோயில் பயணத்துக்கு சந்தர்ப்பம் எற்படித்துத் தந்த நண்பர் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன். (யாரோ எழுதன பாட்டை, யாரோ பாடி, யாரோ இசையமைச்சிருக்க, ஒரு சிலர் அது அவங்க சொந்த சொத்து மாதிரி, ஊருல்ல இருக்க எல்லாருக்கும் ரோடியோவுல சமர்ப்பணம் செய்யும் போது, சொந்தமா, மூளையைக் கசக்கி எழுதன நாங்களும் சமர்ப்பணம் போடுவோமில்ல!).

ஸ்ரீபுரம் படங்கள் நன்றி: ஸ்ரீபுரம் இணைய தளம்.
ஒரு சில படங்கள் சொந்த சொத்து. மற்றவை நெட்டில் சுட்டவை