ரிஷப குஞ்சர சிற்பங்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்கும் போது, அவை முதன் முதலில் பாதாமி சாளுக்கியர் காலத்தில் அய்கொளேயில்(கர்நாடகா) செதுக்கப்பட்டன எனத் தெரிந்து கொண்டேன். பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சி, அவர்களது கட்டடக்கலை, சிறப்புமிக்க பாதாமிக் குடவரைகள், பாதாமி சாளுக்கியர்களின் காலத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களுக்கிடையில் நிகழ்ந்த போர்கள் என விரிவான சித்திரம் கிடைத்தது. (இந்தப் பதிவுடன் தொடர்புடைய முந்தைய பதிவு - ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்)
பாதாமி சாளுக்கியர்களின் கலை படைப்புகளின் உச்சம் எனக் கருதப்படும் பாதாமி, அய்கொளே, பட்டடதக்கல் போன்ற இடங்களில் உள்ள குடவரைகள் மற்றும் கட்டடங்களைப் பற்றி படிக்கையில் ஒரு சில அம்சங்கள் வியப்பாக இருந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
கூரை அமைப்புகள்
பெரும்பாலான பழைய கற்கட்டடங்களின் கூரைகள் சமதளத்துடன் இருப்பதையே பார்த்துள்ளேன். முன்பெல்லாம் கோயில் மண்டபங்களுக்குள் நடக்கையில் மேலே சென்று கற்பலகைகளை எப்படி வைத்து கூரைகள் அமைத்துள்ளார்கள் என்றும் எப்படி மழை நீர் உள்ளே வராதபடி அமைத்துள்ளனர் எனப் பார்க்கும் ஆவல் இருந்தது.
முதன் முதலில், கற்கட்டடங்களின் கூரைகள் சரிவாக அமைந்திருப்பதைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்டவைகள் பாதமி, அய்கொளே மற்றும் பட்டதகல்லில்(கர்நாடக மாநிலம்) அதிகம் காணப்படுகின்றன.