உலகத்துல நெறய பேருக்கு அவங்களோட பெயர் பிறரால் (பெற்றோர் மற்றும் உறவினர்) சூட்டப்படுகிறது. நான் இயற்பெயரைச் சொல்றேன். மத்தவங்க வைச்ச பட்டப் பேரை இல்ல. நெறய பேருக்கு அவங்க பெயர் பிடிச்சிருக்கும். கொஞ்ச பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஓரு சிலர் அதைப் பற்றி யோசிக்க மாட்டங்க. சின்ன வயசில, என்னோட பேரை மாத்த ஆசைப்பட்டதுண்டு. நல்ல பேருதான். இன்னும் கொஞ்சம் சின்னதா இருக்கணும்னு பேராசைப் பட்டேன்!. என்னோட இடுகைக்கு பேரை யோசிக்கும் போதுதான், பேர் வைக்கறது எவ்வளவு கஷ்டம்னு மரமண்டைக்குப் பட்டது.
நெறய அப்பா அம்மாவுக்கு, பிள்ளைங்க பிற்காலத்தல கஷ்டப்படுவாங்கன்னு அக்கறையே இல்ல. கூடலாழகர், மதியழகன், காத்தவராயன், செங்கல்வராயன் பேரல்லாம் நல்லாத்தான் இருக்கு தமிழ்நாட்டுல இருக்கற வரைக்கும். ஆங்கிலத்தில எழுதறதும், பிற மொழிக்காரங்ககிட்ட சொல்லறதும், எழுத வைக்கறத்துக்கும் படற கஷ்டம் அவங்களுக்குத் தெரியாது.
இன்னும் சிலர், குயிலன், நாவுக்கரசன், கலைச்செல்வி,வீரலட்சுமின்னு அவுங்களேட செல்வங்களுக்கு பேர் வைச்சுடராங்க. பிற்காலத்துல, குயிலன் குரல் இனிமை இல்லாமையும், நாவுக்கரசன் பேசறதுக்கே பயப்பட்டும் மத்தவங்க கிட்ட கிண்டல் படறது அவுங்களுக்கு எங்கே புரியுது.
சரி சொந்த விசயத்துக்கு வருவோம். சொந்தப் பேருல எழுத இன்னும் தைரியம் இல்ல. என்ன புனைப்பெயர் வைக்கலாம்னு கொஞ்சம் கற்பனைக் குதிரய தட்டி விட்டேன். ரொம்ப புரட்சியா, கிராமத்துக்காரி, மண்ணின் மைந்தி( மைந்தனுக்கு பெண் பால் தெரியல!) பேர் வைக்கலாமானு ஓரு நப்பாசை. நெறய அப்பா அம்மா பண்ற தப்ப நாமளும் செய்ய வேண்டாம்னு, சின்னதா, அழகா கண்டுபுடுச்சது சுரபி.
நமக்கு நாமகரணம் ஆயிடுத்து. நம்ம இடுகைக்கு என்ன பேரிடுவது?. வெளிநாட்டில் பார்த்த ஒரு உணவகத்தின் பெயரான "இன்னும் ஒரு உணவகம்" என்பது நினைவுக்கு வந்தது. இப்போதைக்கு நானும் இதன் பாணியில், "இன்னும் ஓர் வலைப்பதிவு" என்று சூட்டியுள்ளேன்.
ஓரு வழியா ரொம்ம கஷ்டப் பட்டு, முதல் பதிவுக்கு சில வரிகள் ஒப்பேத்தியாச்சு. வலையுலகோர் தரப் போகும் ஆதரவுக்கு, முன் கூட்டியே நன்றிகள் சொல்லி விடுகிறேன்