வரலாற்றுக் குறிப்புகள்:
இந்த நூலில் சாமிநாத சர்மா அவர்கள், பயணத்தில் அவர் கடந்த இடங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்பு, அவர் சந்தித்தவர்களின் சிறப்பு, சமுகத்தில் உள்ள தொண்டு அமைப்புகள் என பல முக்கிய தகவல்களைக் கொடுக்கிறார். தற்போது Pyay எனப்படும், புரோம் நகரத்தைப் பற்றி ஓரு வரலாற்றுச் சித்திரத்தை நமக்கு கொடுக்கிறார்.
புரோம் நகரம், கிறிஸ்து சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தி, பர்மாவின் தலைநகரமாயிருந்ததாகவும், கி.பி. எட்டாவது நூற்றாண்டில் ‘தலெய்ங்’ என்ற ஒரு இனத்தவர் இதனை அழித்துவிட்டனர் என்றும், அந்த அழிவின் மீதுதான் புதிய புரோம் நகரம் ஏற்பட்டது என்றும் சிறப்பு வாய்ந்த இரண்டு புத்தர் கோயில்கள் இங்கு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் பயணத்தில் லெட்படான் (Letpadan) என்ற ஊருக்கு போகிறார். அங்குள்ள நகரத்தார் மடத்தில் தங்கி கையில் கொண்டு வந்திருந்த உணவை உட்கொண்டு சிறிது நேரம் களைப்பாறினர்கள். மடத்துக் காரியக்காரர்கள், அவர் குழுவுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் என்கிறார்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பர்மாவில் தாங்கள் லேவாதேவித் தொழில் செய்து வந்த முக்கியமான எல்லா ஊர்களிலும் மடங்களும், கோயில்களும், நந்தவனங்களும் அமைத்து இருந்தனர்; சில கோயில்களுக்கு வெள்ளி ரதங்கள், தங்க வாகனங்கள் செய்ந்திருந்தனர் எனக் கூறுகிறார். மடங்கள் நூற்றுக்கணக்கான பேர் வசதியாகத் தங்கக் கூடிய வகையில் அமைக்க பட்டிருந்ததையும். சில மடங்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளும் இருந்ததையுமான நகரத்தாரின் சமூகப் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார்.